Take a fresh look at your lifestyle.

“நானே வருவேன்” திரைப்பட விமர்சனம்!

212

சென்னை:

இரட்டை குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரர்களில் அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன். அண்ணன் தனுஷ் சிறு வயதில் அப்பாவையே கொலை செய்யும் அளவுக்கு ஒரு சைக்கோ மாதிரி மிருகத்தனம் கொண்டவராக இருப்பதால், அவரை தனியே விட்டு விட்டு தம்பி தனுஷுடன் அவருடைய அம்மா சென்றுவிடுகிறார்.

அண்ணன் தனுஷ் மற்றும் தம்பி தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளாமல், சென்னையில் ஒருவரும் வட இந்தியாவில் ஒருவரும் வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் பெரியவர்கள் ஆன பிறகு சந்தித்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. அவர்கள் இருவரும் எதற்காக சந்திக்கிறார்கள். சந்திக்க வேண்டிய கட்டாயம் என்ன?  இருவருக்கும் மத்தியில் அப்படி என்ன நடந்தது? என்பதுதான் ‘நானே வருவேன்’ படத்தின் மீதிக் கதை.

தனது நடிப்பாற்றலால் இரண்டு கதாப்பாத்திரங்களையும் நம் மனதில் பதிய வைத்து பிரமிக்க வைத்து விடுகிறார் தனுஷ். கெட்டவனாக நடிக்கும் தனுஷின் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்திருக்கின்றன. தனுஷ் அவரது மகள் மீது காட்டும்  பாசமும், உணர்ச்சிகளும் நடிப்பில் உருக வைத்து விடுகிறார்.  ஆவியுடன் போராடும் தன் மகளைக் காப்பாற்ற முடியாமல் விரக்தியில் இருக்கும் தந்தையாக உணர்ச்சிகரமான காட்சிகளில் தனுஷ் நடிப்பின் வெளிப்பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. கதிர் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜொலிப்பதோடு தனுஷின் உருமாற்ற நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

இந்துஜா, எல்லி அவரம் என்று இரண்டு கதாநாயகிகளும் இரண்டு தனுஷ்களின் மனைவிகளாக நடித்திருக்கிறார்கள். இருவரும் தங்களது பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

தனுஷின் மகளாக வரும் ஹியாதவேவின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் படத்துக்குப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய  வரவேற்பு பெறுகிறார் இயக்குநர் செல்வராகவன். தனுஷுடன் இடையில் வரும் யோகிபாபு சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். டாக்டராக வரும் பிரபு தனக்கு கொடுத்த வேலையை நிறைவாகவே செய்து இருக்கிறார்.

குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் பிரணவ் – பிரபவ் மற்றும் ஃபிராங்க்கிங்ஸ்டன் – சில்வென்ஸ்டன் என இரட்டை சகோதர்களாக நடித்திருக்கும் இரட்டையர்களும், அவர்களது நடிப்பும் அனைவரின் மனதிலும் கவனம் பெறுகிறது.

தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளனர். படம் ஆரம்பித்து காட்சிகள் செல்ல செல்ல இது ஏதோ ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று மனதிற்கு வந்தாலும் அதனை திரைக்கதையில் மற்றும் காட்சி அமைப்புகளில் செல்வராகவன் நம்மை கொண்டு செல்கிறார்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் நல்லது கெட்டது இரண்டு வேடங்களுக்கும் ஒளியமைப்பில் வேறுபாடு அமைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. சில காட்சிகளில் ஹெலிபேட் வைத்து ஒளிப்பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “வீரா சூரா…” பாடல் உற்சாகத்தை கொடுக்கிறது. பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரிக்கிறது.

செல்வராகவனின் இயக்கமும், தனுஷின் ஆர்ப்பாட்டமான மற்றும் அமைதியான நடிப்பும் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும்