Take a fresh look at your lifestyle.

மன உளைச்சலால் திருப்பூர் சுப்பிரமணியம் எடுத்த முடிவு!

தமிழ் சினிமா வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக இருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். முதல் காட்சியிலேயே ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை கணித்து விடுவார்.

தனது படங்கள் வெளியாகும் சமயங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பூர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு அபிப்ராயம் கேட்பது வழக்கம்.

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்துக்குச் சொந்தமாக திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஸ்ரீசக்தி திரையரங்கம் உள்ளது.

கடந்த 12-ம் தேதி தீபாவளி அன்று சல்மான்கான் நடித்த ‘டைகர் 3’ படத்தின் சிறப்புக் காட்சி ஸ்ரீசக்தி திரையரங்கில் திரையிடப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியது.

முதல் காட்சியை காலை 9 மணிக்குத் தான் தொடங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ‘டைகர் 3’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் இந்தப் படத்தை தீபாவளியன்று காலை 7 மணிக்கு திருப்பூர் சுப்ரமணியம் தனது தியேட்டரில் திரையிட்டுள்ளார்.

‘அனுமதி இல்லாமல் ‘டைகர்-3’ படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட்டது ஏன்?’ என கேட்டு திருப்பூர் சுப்ரமணியத்துக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்த விளக்கம்: ‘நான் சினிமா துறைக்குள் நுழைந்து 42 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனது பணியைச் செய்து வந்துள்ளேன்.

ஆனால் தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.

தமிழ்நாடு அரசின் சிறப்பு காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் இந்திப் படத்துக்கு பொருந்தாது என நினைத்து சிறப்புக் காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் திரையிட்டுள்ளனர்.

நானும் மனிதன் தான். 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கத்தான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து, இந்த முடிவை அறிவிக்கிறேன்.

சாதாரண விஷயத்தை பெரிதுபடுத்தியிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால், இந்தப் பதவிகளில் இருந்து வெளியேறுகிறேன்.

‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்களின் சிறப்புக் காட்சிகளை திரையிட, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

ஆனால், இந்திப் படத்துக்கு நிபந்தனை ஏதும் குறிப்பிடாததால், திரையிட்டு விட்டனர். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.’ என திருப்பூர் சுப்பிரமணியன் வருத்தத்தோடு கூறியுள்ளார்.

-பாப்பாங்குளம் பாரதி.