Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர். வெற்றிப் படங்களின் ஃபார்முலா!

கலாப்ரியா

எம்.ஜி.ஆர். விகடனில் எழுதிய தன்னுடைய சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில், தன் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படுத்தியப் படங்களாக பத்துப் பதினைந்து படங்களைக் குறிப்பிட்டு இருப்பார்.
 
தனது முதல் படமான ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, நாடோடி மன்னன்’, ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளிவிளக்கு’, ‘அடிமைப் பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ரிக்ஷாக்காரன்’ என்று போகும் அந்தப் பட்டியல்.
 
இது அவர் 72-73 வாக்கில் எழுதிய தொடர்.
 
மேலே சொன்ன படங்கள் எல்லாமே எம்.ஜி.ஆரின் வசூல் சாதனை புரிந்த படங்கள்தான்.
 
இதில் ‘இதயக்கனி’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற மிக அதிக வசூலைக் குவித்த படங்கள், தொடர் நின்ற பின் வந்தவை. எனவே அவர் அதை அவர் குறிப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை.
 
எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கும் பட வரிசையில் அவர் ஏன் ‘மதுரை வீரன்’ படத்தை குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.
 
அதுதான் தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் தமிழகமெங்கும் ஓடி, ஒரு கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படம். 1956-இல் ரூபாய், அணா, பைசா காலத்தில் வந்து 36 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
 
இத்தனைக்கும் இதில் கதைப்படி எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இறப்பதாகக் காட்டிய வேறு எந்த படமும் 50 நாட்கள் கூட ஓடியதில்லை.
 
‘மதுரை வீரன்’ பெங்களூர், இலங்கை போன்ற பல இடங்களிலும் 100 நாட்கள் ஓடியது. மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி 200 நாட்கள் ஓடியதாகச் சொல்வார்கள்.
 
அதேபோல் எம்.ஜி.ஆர். படங்களிலேயே அதிகமாக 350 நாட்கள் ஓடிய படம் ‘என் தங்கை’ படம் என்பார்கள். 1952-ல் வந்த படம். வசூல் விவரம் தெரியவில்லை. அண்ணன் தங்கை பாசமலர் கதைகளின் மூல விதை இது.
 
மதுரை வீரனைத் தொடர்ந்து 1958-ல் வெளியான ‘நாடோடி மன்னன்’ படம் அடுத்து பல சிகரங்களைத் தொட்டது.
 
மதுரையில் ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான தங்கம் தியேட்டரில் வெளிவந்தது. அங்கே முதல் 4 வாரங்களில் வசூல் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியது.
 
வேறு எந்தப் படமும் அதுவரை எங்கும் ஒரு தியேட்டரில் நான்கு வாரங்களில் ஒரு லட்சம் வாரிக் குவிக்கவில்லை.
 
இதற்கான விளம்பரங்கள் அன்றைய நாளிதழ்களில் கால் பாகத்திற்கு வெளியானது. 13 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
 
இதுவும் தமிழகமெங்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது. பல ஊர்களிலும் வெற்றி விழா நடந்தது.
 
சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையிலும், வேலூரில் கலைஞர் தலைமையிலும் விழாக்கள் நடந்தன.
 
மதுரையில் நடைபெற்ற விழாவில் மதுரை முத்துவின் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமான ஊர்வலத்திற்குப் பிறகு 110 சவரன் எடையுள்ள தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. அண்ணா வழங்கினார்.
 
அதே முத்து, எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து விலக்க முன்னிலையில் நின்றதும் அதன் பிறகு அவரே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்து, மதுரை மேயர் ஆனதும், அதை நினைவுபடுத்தும் விதமாகவே எம்.ஜி.ஆர். தனது (கடைசிப்) படத்திற்கு ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ என்று பெயரிட்டதும் பிந்திய வரலாறுகள்.
 
அவரது அடுத்த முக்கியமான திருப்பம் ‘திருடாதே’. 1959-ல் அவரது கால் ஒடிந்து ஓய்வில் இருந்தார்.
 
1959 இல் படமே இல்லை என்று போய்விடக் கூடாது என்பதற்காக கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ வந்தது. படம் படுதோல்வியைக் கண்டது.
 
எம்.ஜி.ஆருக்கும் சமூகப் படத்திற்கு ஒத்துவராது. அத்தியாயம் முடிந்தது என்றார்கள். அடுத்து வந்த ஐந்து படங்களும், ராஜா-ராணி கதைகள். அவை ஓடவில்லை.
 
1961 மார்ச்சில் ‘திருடாதே’ வந்தது. அதுவும் ‘பாவமன்னிப்பு’ வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வார இடைவெளியில் வந்தது.
 
எம்.ஜி.ஆர். பேண்ட்டும் சட்டையும் போட்டு ஜெயிக்கவா என்ற நினைத்த நேரத்தில் படம் படு ஹிட்டானது.
 
‘பேசும் படம்’ அப்போதைய இதழில் ஒரு கேள்வி-பதிலில் பாவ மன்னிப்பு, திருடாதே இரண்டில் எது சிறந்த படம் என்ற கேள்விக்கு, “கருத்தில் பாவமன்னிப்பு, வசூலில் திருடாதே” என்று பதிலளித்து இருந்தது.
 
எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களின் நாடோடி மன்னன்-உத்தமபுத்திரன் சண்டைகள், திருடாதே-பாவமன்னிப்பு சண்டைகள் என புதுப்பிக்கப்பட்டன.
 
அடுத்து வந்த ‘சபாஷ் மாப்பிள்ளே’யில் எம்.ஜி.ஆரி.ன் நடிப்பை குமுதம் இதழே பாராட்டி இருந்தது.
 
(எம்.ஜி.ஆர். ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார். தனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னவர்களின் தலையில்) என்று எழுதியிருந்தார்கள்.
 
அந்த வருடத் தீபாவளி, சமூகப்பட எம்.ஜி.ஆருக்கு தலைத் தீபாவளி. ‘தாய் சொல்லைத் தட்டாதே’ வெளிவந்து சக்கைப்போடு போட்டது.
 
பந்தலு வந்து கஷ்டப்பட்டு உருவாக்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைக் காணாமல் ஆக்கிவிட்டது.
 
அதேபோல் 1964 பொங்கலுக்கு வந்த ‘கர்ணன்’ படத்திற்கு எதிராக வந்த வேட்டைக்காரனின் சினிமாத் துப்பாக்கிக்கு முன்னாள் கர்ணனின் வில்வித்தை எடுபடவில்லை.
 
கர்ணனுக்கு ஆன செலவில் பத்தில் ஒரு பங்குகூட தேவர் செலவழித்திருக்க மாட்டார். ஆனால் அதைவிட நான்கு மடங்கு பணம் பார்த்திருப்பார்.
 
திருநெல்வேலியில் முதன்முறையாக கர்ணன் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 15, 16 நாட்கள் ஓடி ஒரு லட்சம் வசூல் ஆனது.
 
அதே நாட்களில் வேட்டைக்காரன் ஒரே தியேட்டரில் 84,000 ரூபாய் வசூலானது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வருடம் 1965.
 
படம் தயாரிப்பில் இருக்கையில் விஜயா புரொடக்சனின் ‘பெயரிடப்படாத பட’த்தில் இந்தக் காட்சி என்று ஸ்டில்கள் செய்திகள் வந்து கொண்டிருந்த படத்திற்கு,
 
1964 உள்ளாட்சித் தேர்தலில் பிரபலமான தி.மு.க.வினரின் வாசமான ‘உங்கள் வீட்டுப் பிள்ளை’க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்பதிலிருந்து படத்தின் தலைப்பை எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
 
அப்படியே வைக்காமல் பேச்சு வழக்கில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று வைத்தார். இதுதான் அவரது சாமர்த்தியம். படம் பார்த்தவர்களிடமெல்லாம், அவர் எங்க வீட்டுப் பிள்ளை என்ற உணர்வை உண்டாக்கினார்.
 
மதுரை வீரன் வந்து 9 வருடங்களுக்குப் பின் 15 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலும், 6 தியேட்டர்களில் வெள்ளி விழாவும் கண்டது.
 
நூறாவது நாளுக்கு தியேட்டர் வாரியாக வசூல் விளம்பரம் முழுபக்கம் தந்தி பேப்பரில் வெளியிட்டார்கள்.
 
அந்தப் பேப்பர் இன்றும் ஒரு அபூர்வ சேமிப்பு – Collectors item அதேபோல திருவிளையாடலுக்கும் விளம்பரம் வந்தது.
 
அந்த விளம்பரங்கள் வந்த இரண்டு பேப்பர்களையும் கேடயமாக வைத்து அடுத்த சண்டை நடந்தது.
 
எங்க வீட்டுப் பிள்ளை சென்னை உள்ளிட்ட முக்கியமான 13 முதல் வெளியீட்டு நகரங்களில் மட்டும் 36 லட்சம் வரை வசூல் ஆனது.
 
தூத்துக்குடி மக்கள் திலகம் ரசிகர் மன்றம் (People star MGR fans association) தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர் வசூலையும் வெளியிட்டு ஒரு எட்டு பக்கத்தில் புத்தகம் வெளியிட்டது.
 
அதை வைத்திருக்கும் ரசிகன் இன்னொரு எம்.ஜி.ஆர். அதில் உள்ள ஒரு சில வசூல்களை இப்படி நினைவு வைத்திருந்தோம்.
 
3-13-23 அதாவது சென்னையில் மட்டும் மூன்று தியேட்டர்களில் 13 நாட்களில், மொத்த வசூல் 23 ஆயிரம் ரூபாய். திருநெல்வேலியில் ஒரு லட்சத்து 61 ஆயிரம்.
 
வசூல் சண்டையின் உச்சம் எங்க வீட்டுப் பிள்ளை vs திருவிளையாடல்.
 
அடுத்து வந்த ஆயிரத்தில் ஒருவன் இன்றைக்கும் வெள்ளி விழா ஓடும் ஒரு money spinner.
 
ஆனால், அப்போது எங்க வீட்டுப் பிள்ளையை எட்டவில்லை. ‘அன்பே வா’ படமும் அப்படியே. 1968 பொங்கலுக்கு ‘ரகசிய போலீஸ் 115’ வந்தது. அதை 2 தியேட்டர்களில் திரையிட்டார்கள்.
 
எங்களுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. கர்ணன் படத்தின் இரண்டு தியேட்டர் வசூலை மிஞ்ச வேண்டுமே.
 
நல்ல வேளையாக கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கூடிவிட்டது. பொறுக்குமா, உடனே வசூல் நோட்டீஸ் அடித்தோம்.
 
“துள்ளி வருகுது புள்ளி விவரம்!! பகையே சுற்றி நில்லாதே போ!!!” என்று தலைப்பிட்டு தாராளமாக ஆச்சரியக் குறிகள் விதைத்து நான்தான் மேட்டர் எழுதினேன்.
 
அன்றிலிருந்து திட்டமிட்டு தகவல்கள் திரட்டி ஒளி விளக்கு படத்திற்கு சாதனை மலா் அடித்தேன். எம்.ஜி.ஆருக்கும் அனுப்பினேன். அவர் பாராட்டி நன்றிக் கடிதம் எழுதியிருந்தார்.
 
‘ஒளிவிளக்கு’ 100 நாள் படம். சென்னையில் ஓடவில்லை. மதுரை, திருச்சி, கும்பகோணத்தில் ஓடியது. அடுத்த சாதனை அடிமைப் பெண்.
 
14 தியேட்டர்களில் 100 நாட்களும், மதுரை சிந்தாமணியில் வெள்ளி விழாவும் கண்டது. 100 நாட்கள் வரையிலான வசூலாக 34 லட்சம் வந்தது.
 
இதற்கு இணையாக மாட்டுக்கார வேலன் ஓடியது. அது நாங்களே எதிர்பாா்க்காதது. 14 தியேட்டர்களில் 100 நாட்கள் இதுபோக இலங்கையில் 2 தியேட்டர்களில் 100 நாட்கள். (இலங்கை 1970-ல் எப்படி அமைதித் தீவாக இருந்து இருக்கிறது!)
 
சென்னை, கோவை, மதுரை என மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கண்டது.
 
காவல்காரன் வெற்றியை அடுத்து ரிக்ஷாகாரன் தயாரித்தார் ஆர்.எம்.வீரப்பன். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
 
சென்னையில் மட்டும் 16 லட்சம் வசூல் ஆனது. தமிழகமெங்கும் 51 நாட்களில் 50 லட்சம் வசூல். அரசுக்கு வரி மட்டும் 20 லட்சம் என்று விளம்பரம் வந்தது. 12 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
 
அடுத்த சாதனையின்போது எம்.ஜி.ஆர்., கட்சியைவிட்டு நீக்கப்பட்டு அ.தி.மு.க. உதயமாகி விட்டது.
 
எம்.ஜி.ஆரின் உச்சபட்ச சாதனையான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வந்தது.
 
சென்னையில் 67 நாட்களில் 201 காட்சிகளும், மதுரையில் 241 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மாபெரும் சாதனை செய்தது.
 
முன்பதிவு ஆரம்பித்த மூன்று மணி நேரத்தில், 100 காட்சிகளுக்கும் முன்பதிவு ஆனது. சென்னையில் 23 லட்சம் வசூல் ஆனது. 6 திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டது. இதற்கு வந்த சோதனைகளையும் மீறி சாதனைகள் புரிந்தது.
 
40 திரையரங்குகள் ஆறு மாதங்களில் அரசுக்கு கேளிக்கை வரி மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் கட்டியது.
 
‘இதயக்கனி’ படமும் அதே அளவு சோதனைகளை மீறி சாதனைகள் செய்தது. 10 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
 
சென்னையில் மட்டும் 20 லட்சம் வரை வசூல் ஆனது. 75 நாட்களில் 15 லட்சம் வசூலும், 8 லட்சம் வரியும் குவிந்ததாக விளம்பரங்கள் வந்தன. வசூலில் சென்னை 3-வது இடம்.
 
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பின் வந்த மீனவ நண்பன், 17 லட்சத்திற்கும் மேலாக வசூலானது. எம்.ஜி.ஆர்., படங்களில் எம்.ஜி.ஆர்., மட்டுமே இருந்தார். அவரது படங்களின் வெற்றி அதன் திரைக்கதையில்தான் இருந்தது.
 
ஒரு படம் தயாராகும்போதே தெரிந்துவிடும் அவருக்கு, அந்தப் படம் நன்றாக அமையும் என்று.
 
அதற்கேற்றாற்போல திரைக்கதை, பாட்டு, சண்டைக் காட்சிகள் போன்ற விஷயங்களையும் அமைப்பார். அவர் ஒரு சிறந்த எடிட்டர்.
 
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் பற்றி ‘பொம்மை’ சினிமா இதழில் நாகேஷ் இப்படி எழுதியிருந்தார்.
 
“அவர் தாய்லாந்திலும் சரி, எக்ஸ்போ 70 கண்காட்சியிலும் சரி, எங்களை நீ அங்கே போ, இங்கே வா உனக்குத் தோன்றிய அசைவுகளைச் செய், ஏதாவது பேசு என்பது போலச் சொல்லிவிட்டு, காமிரா அருகே நின்று கொள்வார்.
 
இது என்ன அவர் சினிமா எடுக்கிறாரா இல்லை டாக்குமெண்ட்ரி எடுக்கிறாரா? அவ்வளவுதான் படம் பனால் என்று நினைத்தேன்.
 
ஆனால், எடிட்டிங் மேசையில் உட்கார்ந்து அதை எல்லாம் வெட்டி ஒட்டி, டப்பிங்கில் வசனங்களைப் பேச வைத்து ஒரு பிரமாதமான படமாக ஆக்கி விட்டார்.
 
மனதுக்குள்ளேயே படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். சினிமாவில் அவர் மன்னன் தான்” என்று எழுதியிருந்தார்.
 
அதே பொம்மையில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைப் பற்றி நடிகை லட்சுமி, “தமிழில் ஜனரஞ்சகப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இதுதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
‘மாட்டுக்கார வேலன்’ படத்தையும் அவர் குறிப்பிட்டதாக நினைவு.
 
அப்போதைய சினிமாவும் மக்களும் வேறு. இவ்வளவு பணமும் சாமானியனின் பணம்.
 
குருவி குருவியாகச் சேமித்து குருதிக் கொடை கொடுத்து சேமித்து அதிகபட்ச டிக்கெட்டே திருநெல்வேலியைப் பொறுத்து ரூபாய் 3.46 பைசா, ஏசி பாக்ஸ் ரூ.4.20 பைசா, பெஞ்ச் டிக்கெட் 31 புதிய காசுகள்.
 
ஒரு முறுக்கின் விலை மூன்று பைசா, காளி மார்க் கலர் 25 நயா பைசா, கடலை மிட்டாய் 2 பைசா.
 
அதில் வந்ததுதான் இந்தக் கோடிகள். பணம் மட்டுமல்ல விஷயம். கோடிக்கணக்கான மக்களின் எங்க வீட்டுப் பிள்ளையாக இதயக்கனியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுதான் உண்மையான சாதனை.
 
நன்றி: அந்திமழை, நவம்பர் – 2016 இதழ்.