தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு. சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது.
அந்த அற்புத நடிகன் ராமசந்திரன் நடித்த முதல் படமான சதிலீலாவதியிலே நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் மீரா படத்தில் நடித்தார்.
அதாவது 1940களிலே அறிமுகம் ஆகியிருந்தார், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார்.
திருநெல்வேலி சுப்பிரமணியன் பாலைய்யா என்கிற டி.எஸ்.பாலையா.
நாகர்கோவில் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரைக் கொடுத்தாலும் நெல்லை கொடுத்த கலைச்சொத்து பாலையா. நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அவர்.
1940-களில் அவர் நடிக்க வந்து தடுமாறினாலும், 1950-க்கு பின் வெற்றிபடிகளில் ஏறினார். ஒருவித வித்தியாசமான நடிப்பு அவருடையது.
உணர்ச்சி வேகமோ, இல்லை ஆக்ரோஷமோ சிவாஜி, ராதா போல இருக்காது. மாறாக உணர்வில் ஒன்றி அமைதியாக, ஆனால் அழுத்தமாக பதியும் நடிப்பினை கொடுத்தார்.
பின்னாளைய மனோரமா, ரகுவரன் போன்றோர் அந்த ரகம். ஆழமான, ஆனால் அமைதியான நதி நடப்பது போன்ற நடிப்பு அது.
நடிகர்களில் முதலில் பகுத்தறிவு பேசியது அவர்தான். ‘வேலைக்காரி’ படத்தில் அவர் தொடங்கிய பகுத்தறிவு பாத்திரத்தை பின்பு யார் யாரெல்லாமோ பேசினார்கள்.
மதுரை வீரன் அவருக்கு தனி இடம் பெற்றுகொடுத்தது. “வெள்ளிகிழமை என தெரியாமல் வாளை உருவிவிட்டேன்” என்ற அவரின் வசனமும் அந்த உடல்மொழியும் கிளாசிக்.
தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறினார். நகைச்சுவையும் வில்லத்தனமும் ஒருசேர செய்யும் பாத்திரங்களில் அவரும் எம்.ஆர் ராதாவும் பின்னி எடுத்தார்கள்.
ராதா எனும் ஜாம்பவான் முன் தன் அமைதியான நகைச்சுவை மற்றும் வில்லதனம் மூலம் தனித்து நின்றார் பாலையா.
பின் பீம்சிங் படங்கள் பாலையாவுக்கு அழியா குணசித்திர வேடங்களைக் கொடுத்தன.
பாலும் பழமும், பாக பிரிவினை போன்ற படங்களில் குடும்ப பெரியவராக வந்து பண்பட்ட நடிப்பினைக் கொடுத்த பாலையா, அக்கால பெரிசுகளைக் கண்ணிலே காட்டி நின்றார்.
பாகப் பிரிவினையில் சொத்தினைப் பிரிக்கும் பொழுது அவர் கலங்கும் அந்த காட்சி பாசப் போராட்டத்தைக் கண்முன் கொண்டு வந்த ஒப்பற்ற காட்சி.
தாய், தந்தையர் படத்தைக் காட்டி பாலையா தம்பியிடம் பேசும் அந்த காட்சிக்கு கலங்காதோர் இருக்க முடியாது.
‘பாவ மன்னிப்பு’ அவரின் மறக்க முடியா படங்களில் ஒன்று. சிறிய வேடமென்றாலும் தனித்து நின்றார்.
தனக்கு காமெடி அட்டகாசமாக வரும் என அவர் காட்டிய படம் ‘காதலிக்க நேரமில்லை’.
நாகேஷூடன் அவர் இணைந்து செய்த அந்த காமெடி என்றுமே தமிழக சினிமாவில் நம்பர்1. எந்தக் காமெடிக் காட்சியும் அதை நெருங்கமுடியாது.
அந்தப் படத்தை கவனித்தால் தெரியும், மிக நுண்ணிய காமெடிகளை எல்லாம் அசால்ட்டாக செய்தார்.
அசோக் என்பவன் பணக்காரனின் மகன் என்றதும் “அவரு அசோகரு” என குனியும் காட்சி ஒன்று போதும்.
தில்லானா மோகனாம்பாள் படத்தின் தவில் வித்துவானை மறக்க முடியுமா? இல்லை திருவிளையாடல் ஹேமநாத பாகவதரை மறக்க முடியுமா?
நிச்சயம் அந்தக் காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலங்கள்.
சிவாஜி என்ற வைரம் இருந்தாலும், இதர முத்தும் பவளமும் வைடூரியமும் இன்னபிற ரத்தினங்களும் அழகாக ஜொலித்தன.
அந்த வைடூரியத்தில் ஒருவர்தான் பாலையா.
அவரிடம் நாம் அதிசயித்தது ஒன்றுதான். டி.ஆர்.சுந்தரம் காலத்தில் நடிக்க வந்தவர் பீம்சிங் காலம், ஸ்ரீதர் காலம் அடுத்து பாலசந்தர் காலத்திலும் கலக்கினார்.
அவரின் ஆகச்சிறந்த படங்கள் 1960க்கு பின்பேதான் வந்தன.
பாமா விஜயம் போன்ற படங்கள் அப்பொழுதுதான் வந்தன. மிகச் சிறந்த நடிப்பினை அதில் கொடுத்திருந்தார்.
பாலையாவை நாமெல்லாம் அதிகம் பார்த்தது முதிர்ந்த வேடங்களிலே. ஆனால், அவர் சிறிய வயதிலே முதுமைப் பாத்திரம் ஏற்றிருந்தார்.
அவ்வகையில் ரங்காராவ் என்பவருக்கும் பாலையாவுக்கும் ஒரே ராசி.
பாலையா முதல் படத்தில் நடிக்கும் பொழுது 25 வயது. 40 வயதில் 70, 80 வயதுக்கான கதாபாத்திரங்களை ஏற்றிருந்தார்.
இதனால் முதியவராக தெரிந்தார். அவரின் உடல்வாகும் குரலும் அதற்கு ஒத்துழைத்தன. அந்த அற்புத நடிகன் சாகும் பொழுது வயது 57. ஆம் முதியவனாக நடித்தும் முதுமையினை எட்டாமலே மறைந்தான் அந்த பாலையா.
வில்லத்தனம், கொடூரம், நயவஞ்சகம், நகைச்சுவை, பக்தி, பெருமிதம், பாசம், குடும்ப உணர்வு, கோபம், அழுகை, கண்ணீர் என எல்லா வேடத்திலும் மிக அழகான உடல்மொழியோடு நடித்த அந்த பாலையாவை மறக்க முடியாது.
ராமசந்தினை ஆரம்ப காலத்தில் இருந்து அறிந்தவர் பாலையா. ராம்சந்திரன் சினிமாவின் முதல் படத்தில் நடித்ததில் இருந்து அவரின் எல்லாமும் பாலையா ஒருவருக்கே தெரியும்.
காங்கிரஸ் மேல் பற்றுகொண்டிருந்த பாலையாவுக்கு ஒரு வருத்தம் இருந்தது. காமராஜர் தோற்றதை அவர் ரசிக்கவில்லை. அந்த சீனிவாசனிடமே கடுமையாகப் பேசியவர் பாலையா.
என்.எஸ்.கிருஷ்ணன், கே.வி.மகாதேவன் இருவரும் நாகர்கோவில் அடையாளங்கள், அவர்களுக்கு இன்றும் சில நினைவுச் சின்னங்கள் உண்டு.
சந்திரபாபு எனும் மகா கலைஞனுக்கு தூத்துகுடியில் சில நினைவுத் தூண்களாவது உண்டு.
ஆனால், நெல்லையில் பாலையாவுக்கு அப்படி ஏதுமில்லை.
எவ்வாறாயினும் நெல்லையின் கலைமுத்து பாலையா என்பதில் மாற்றமில்லை. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் அவரைப் பிடித்திருந்தது.
இன்றும் அவரை மனமார ரசிப்பவர் உண்டு, எந்நாளும் உண்டு.
தன் மிகச் சிறப்பான நடிப்பாலும் உடல் மொழியாலும் மிக நுட்பமான வார்த்தைகளில் உணர்ச்சியினைக் கொட்டிய அந்த வித்தையாலும் அவர் எக்காலமும் வாழ்வார்.
நன்றி: முகநூல் பதிவு