Take a fresh look at your lifestyle.

சம்பளம் வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்!

‘ஜிவ்’வென உயரத்தில் பறக்கும் நேரத்தில் இறக்கங்களையும் சினிமா நடிகர்கள், அவ்வப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அந்த சவால்களை சந்தித்து மீண்டும் ஏறுமுகம் காண்பார்கள். அவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

‘இன்று நேற்று நாளை’ படத்தை டைரக்ட் செய்த ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அயலான்’.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

அறிவியல் புனைக்கதையான இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கொரோனோ தொற்று, கிராபிக்ஸ் பணிகளில் இழுபறி, பைனான்ஸ் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிக்கொண்டே போனது.

ஒருவழியாக பொங்கல் திருநாளில் ‘அயலான்’ வெளியாக உள்ளது.

தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் ரிலீசுக்கு உதவியுள்ளார்.

இது குறித்து அவர் மனம் திறந்து அளித்த பேட்டி:

‘அயலான்’ படத்தை ஆரம்பிக்கும் போது ‘பான் இந்தியா’ என்ற வார்த்தையே கிடையாது. அப்போது ‘பாகுபலி 1’ மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.

இது, தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட படைப்பு. நான் ஆசைப்பட்ட படம் என் கண் முன்பு தெரிகிறது. நானும் இதில் நடித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மது, புகைப்பிடித்தல், ரத்தம் சிந்தும் காட்சிகள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய உள்ளன.

இந்தப் படம் தொலைநோக்குப் பார்வை கொண்ட படம்.

சின்ன பட்ஜெட்டில், கோடம்பாக்கத்தில் இவ்வளவு பெரிய படத்தை உருவாக்க முடியும் என்று காட்டத்தான் ’அயலானை’ ஆரம்பித்தோம்.

இப்படி ஒரு படத்தை எடுத்தால் இது போன்று நிறைய படங்கள் தமிழில் தொடர்ந்து உருவாகும் என்ற நோக்கில்தான் இதனை உருவாக்கினோம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தப்படம் வெளிவர வேண்டுமானால், எனது ஊதியத்தை தருவதே ஒரே வழியாக இருந்தது.

எனவே ‘எனக்கு சம்பளம் வேண்டாம். படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டேன்’
என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இவரது அடுத்த படங்கள் என்ன?

ஒன்று – ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் ஆக்ஷன் படம்.

மற்றொன்று , ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம்.

அயலானுக்கும் சேர்ந்து அந்தப் படங்களில் சம்பளம் வாங்கிடுங்க பாஸ்.

– பாப்பாங்குளம் பாரதி.