“சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்து, பின்னாளில் அரசியல் கட்சியைத் துவக்கித் தனி இடத்தைப் பிடித்திருக்கிறவர் விஜயகாந்த்.
அவருடன் சேர்ந்து ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். கே.சங்கர், சி.வி.ராஜேந்திரன் ஆகியோருடைய இயக்கங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.
அப்போதிருந்து எனக்கு அவரைத் தெரியும். ஆனால் அவருடன் நெருக்கம் ஏற்பட்டது என்று சொல்ல மாட்டேன்.
அவருக்கு அப்போது சினிமாவில்தான் விருப்பம் இருந்தது. அரசியலில் ஈடுபாடு இருக்கிற மாதிரி அப்போது தெரியவில்லை.
ஆனால் பிற்காலத்தில் அவருக்கு அரசியலில் ஈடுபாடு உண்டாகி, தே.மு.தி.கவை உருவாக்குகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக அவரைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். போனிலும் தொடர்ந்து பேசியிருக்கிறேன்.
அப்போதுதான் அவருடைய அணுகுமுறை எனக்குப் புரிந்தது. அவரைப்பற்றி “இஷ்டப்படி முடிவெடுக்கிறார். குழப்புகிறார்” என்றெல்லாம் வெளியே பேச்சு இருக்கிறது.

ஆனால் அவருடன் பழகியபோது அவர் அப்படியில்லை என்பது புரிந்தது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக பலருடன் விவாதிப்பார்.
அவருக்கு நேர் எதிரான கருத்தை நாம் சொன்னாலும், அதை மறுக்காமல் அது குறித்து நேர்மையுடன் விவாதிப்பார்.
அந்த விவாதங்கள், சமயங்களில் நீண்டு கொண்டே போவதால் ஒருவேளை அவரைப் பற்றி மேலே சொன்ன கருத்து பரவி இருக்கலாமோ என்னவோ, தெரியவில்லை?
நான் விஜயகாந்தைச் சந்தித்த சமயங்களில் எல்லாம் அவருடைய மனைவி பிரேமலதாவும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
அவரும் அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாா். பேச்சில் அவர் பங்கெடுக்கும்போது அது புலப்படும்.
ஒருமுறை விஜயகாந்த் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் முடிவை மாற்றிக் கொள்ளும்படியான சூழ்நிலை கூட வந்தது.
அப்போது திரும்பவும் அவரிடம் பேச வேண்டியிருந்தது. பேசினோம். அப்போது என் முடிவை மாற்றிக் கொள்கிறேன் என்பதை அவர் விளக்கிவிட்டு அதன்பிறகு கூட்டணியில் சேர்ந்தார்.
நான் எடுத்துக்கொண்ட முயற்சி நல்லவிதமாக முடிந்தது. அவரிடம் எனக்குத் தெரிந்த நல்ல அம்சம், எதையும் வெளிப்படையாக பேசுகிற விதம்.
எதையும் மறைத்து, ஒளிவு மறைவாக பேசுகிறவர் இல்லை. ஏதோ ட்ரிக் பண்ணுகிற மாதிரி பேசாமல் மனம் திறந்து அவர் நினைப்பவற்றைச் சொல்வார்.
அவருடைய வாதங்களை அவர் முன்வைப்பார். என்னுடைய வாதங்களை நான் முன் வைப்பேன். பேசிக் கொண்டிருக்கும்போது மறுத்துப் பேச மாட்டார்.

அதன்பிறகு யோசித்து அவருடைய முடிவை எடுப்பார். அப்படித்தான் எங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நகா்ந்தது.
அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். அவருடைய அரசியலை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம்.
ஆனால் அவருடன் பேசிப்பழகியவன் என்ற முறையில், மற்றவர்கள் சொல்கிற கருத்துக்களை முதலில் கேட்டுக்கொண்டு, அதில் அவருக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட, அதையும் விவாதித்துப் பொறுமையாக இருந்து அவரால் முடிவெடுக்க முடிகிறது என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.
பல தலைவர்களிடம் பழகியபோதும் இப்படிப்பட்ட சுபாவம் அவர்களிடம் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அந்தப் பண்பு விஜயகாந்திடம் இருக்கிறது.
– தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நடிப்பு மற்றும் அரசியல் வளர்ச்சி குறித்து, துக்ளக் ஆசிரியர் சோ ‘ஒசாமஅசா’ நூலில் குறிப்பிட்டுள்ள பகிர்வு இது.
மணாவின் ‘ஒசாமஅசா’ நூலிலிருந்து