Take a fresh look at your lifestyle.

மக்கள் மனதில் படைப்புகளாக வாழும் ரவி சங்கர்!

பாடலாசிரியரும் இயக்குநருமான ரவி சங்கர் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடத்தி வந்த ‘பாக்யா’ வார இதழில் சிறுகதை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இவரின் படைப்புகள் கவிதை நடையில் பிரமாதமாக இருந்ததன் காரணமாக நடிகர் பாக்யராஜ் இவரை உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

இதையடுத்து பாக்யராஜ் இயக்கிய இது நம்ம ஆளு மற்றும் விக்ரமன் இயக்கிய சூரியவம்சம் படத்திலும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.

சூரியவம்சம் படத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார். அதில் இடம்பெற்று பட்டி தொட்டியெங்கும் இன்று வரை பிரபலமாக உள்ள ரோஜா பூ சின்ன ரோஜா பூ என்ற பாடலை எழுதியவர் ரவிசங்கர்தான்.

இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சினிமாவில் இவருக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கித் தந்தது. இப்பாடல் பழைய காதலை நினைவுபடுத்தும் பாடலாகவும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

பிறகு இயக்குனராக மாறிய ரவிசங்கர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கி அப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் எழுதி அசத்தினார். 

இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் குறிப்பாக எங்கே அந்த வெண்ணிலா.. என்ற பாடல் மனதை வருடக்கூடிய பாடலாகவும், அனைவர் மனதையும் ஈர்த்தது.

இயக்குநர் ரவிசங்கரின் நண்பரான கல்யாண் குமார் அவரைப் பற்றிக் கூறியவை:

ஒரு வார இதழ் ஆரம்பித்த புதிது. அதில் நான் அசோசியேட் எடிட்டர்.

தபாலில் வந்திருந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் ‘குதிரை’ என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும் ரவிசங்கர் என்ற ஒரு இளைஞர்.

உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து படிக்க வைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்து வரச் செய்தார். சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார்.

இது நம்ம ஆளு உட்பட சில படங்கள் வேலை செய்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார் ரவி சங்கர்.”

திறமையான படைப்பாளரான ரவி சங்கர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.