Take a fresh look at your lifestyle.

‘பாரதிராஜா சார்’ என்னை கருப்பு ‘நாகேஷ்’னு பாராட்டினார்!

குதூகலத்தில் குதித்த வடிவேலு

‘வைகைப்புயல்’ வடிவேலுவை நான் 1990 களின் தொடக்கத்தில் சந்தித்தேன். எனக்கு சென்னை புதிது. அவருக்கும் புதிது.

அப்போது வடிவேலு, பனகல்பார்க் அருகே முருகன் இட்லி கடைக்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

அப்போது அந்த குடியிருப்பு –

நடிகர் –இயக்குநர் ராஜ்கிரணின் அலுவலகம். வடிவேலுவுடன் நடிகர் நம்பிராஜனும் உடன் இருந்தார். அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை எல்லாம் குவிந்து வைத்திருப்பார்கள். அங்கேதான் இருவரும் வாசம்.

நம்பிராஜன், ராஜ்கிரண் படங்களில் நாயகியின் தந்தை அல்லது வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
வடிவேலுவை விட அப்போது, நம்பிராஜன் கொஞ்சம் “வசதியானவர்’’. பேட்டிக்காக வடிவேலுவை சந்திக்க செல்லும்போது நம்பிராஜன் தான் ‘டீ சப்ளை’.

ராஜ்கிரணால் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட வடிவேலு, அந்த நேரத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆர்.வி.உதயகுமார் இயக்கி விஜய்காந்துக்கு ஒரு மாமாங்கத்துக்கு பிறகு வெற்றிப்படமாக அமைந்த ‘சின்ன கவுண்டர்’ படத்திலும் சில காட்சிகளில் தோன்றி இருப்பார், வடிவேலு.

சினிமாவில் தொடர் வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

ராஜ்கிரணின் அடுத்தடுத்த படங்களில் நடித்து, உடல் மொழியாலும், மதுரை மண்ணின் உச்சரிப்பாலும், ரசிகர்களை ஈர்த்திருந்த வடிவேலுவுக்கு புதிய படங்கள் குவிந்தன.

அத்தனையும் பெரிய இயக்குநர்கள், உச்ச நடிகர்களின் படங்கள்.

கமல்ஹாசனின் ‘தேவர்மகன்’ அவர் நடிக்க சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சிங்காரவேலன்’, ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

‘இயக்குர் இமயம்’ பாரதிராஜா, தனது படங்களில் தனி காமெடி டிராக் வைப்பதில்லை.

கொஞ்ச நாட்கள் வெற்றியைக் கொடுக்காமல் சோர்ந்திருந்த பாரதிராஜாவுக்கு அந்த நேரத்தில் ‘கிழக்கு சீமையிலே’ படம் இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு.

மற்ற இயக்குநர்கள் போலவே வடிவேலுவின் உடல்மொழியில், ஈர்க்கப்பட்டிருந்த பாரதிராஜா, தனி காமெடி டிராக்கை உருவாக்கி அதில் வடிவேலுவை நடிக்க வைத்தார்.

வெளியூர் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய வடிவேலு, “அண்ணே! பாரதிராஜா சார், என்னை ‘கருப்பு நாகேஷ்’னு பாராட்டினாருண்ணே” என்று என்னிடம் குதூகலித்தார்.

வடிவேலுவின் முகத்தில் ஒருசேர ஆயிரம் நட்சத்திரங்கள், நூறு நிலவுகளைப் பார்க்க முடிந்தது.

புதிய புதிய உயரங்களைத் தொட்டார், வடிவேலு. வசதிகளும் சேர்ந்தன. ராஜ்கிரண் அலுவலகம் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் (ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு எதிர்புறம்) தனி வீடு எடுத்து, ஜாகை மாறினார்.

தனது மதுரைக்கார நண்பர் முருகேசனை, தனக்கு துணையாக வரவழைத்துக் கொண்டார். முருகேசனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“அண்ணே! மதுரையில் நான் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் –காய்கறி வியாபாரம் பண்ணி இருக்கேன் –போட்டோக்களுக்கு பிரேம் போடும் கண்ணாடி அறுக்கும் தொழிலில் நீண்ட அனுபவம் உண்டு. – அறுத்த கண்ணாடியை கொண்டுபோய் கொடுத்து காசு வாங்கிட்டு வந்தாத்தான் வீட்டில் அடுப்பு எரியும்.

நான் கஷ்டப்பட்ட காலத்தின் செழிப்பாக இருந்தவன் முருகேசன் – எனக்கும், எங்க சேக்காளிகளுக்கும் சினிமா மற்றும் செலவுகளை அவன் தான் செய்வான் –இப்போ அவன் கஷ்டப்படுறான். நான் நல்லா இருக்கேன். அதான் அவனை எனக்கு துணையா கூட்டிட்டு வந்திருக்கேன்”.

(தனது நண்பனை கவுரவிக்கும் வகையில் ‘சந்திரமுகி படத்தில், முருகேசன் என்ற கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார்).

புதிய படங்கள் குவிந்தன. கையில் தாரளமாக காசு புரண்டது.

சாலிகிராமத்தில் புதிதாக அலுவலகம் கட்டினார், கார் வாங்கினார்.

தனது கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ள வேலுச்சாமி என்ற மதுரைக்கார நண்பரை கேஷியராக பணி அமர்த்தினார்.

கொஞ்ச நாட்களில் அந்த பகுதியிலேயே பங்களா கட்டி மதுரையில் இருந்த குடும்பத்தை வரவழைத்துக்கொண்டார்.

ரஜினி, விஜய் கால்ஷீட் கிடைப்பதை விட வடிவேலு கால்ஷீட் கிடைப்பது கடினம் எனும் சூழல் கோடம்பாக்கதில் உருவானது.

அடுத்த உச்சமும் அவருக்கு காத்திருந்தது.

என்ன ?

ஹீரோ வேடம்.

ஷ்ங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார்.

படம் – வசூல் மழை கொட்டியது.

இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என அந்த நேரத்தில் வடிவேலு எடுத்த முடிவு, அவரது திரை உலக வாழ்க்கையின் தொடர் சறுக்கலுக்கு காரணமாக அமைந்தது.

ஆரம்பகால ஊடக நண்பர்களிடமும், முன்புபோல் பழகவில்லை.

இம்சை அரசனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த ‘இந்திர்லோகத்தில் நான் அழகப்பன்’ படுதோல்வி அடைந்தது.

தொடர்ச்சியாக வடிவேலு நாயகனாக நடித்த தெனாலிராமன், எலி, உள்ளிட்ட அனைத்து படங்களுமே ‘அட்டர் பிளாப்’.

அந்த நேரத்தில் இறங்குமுகத்தில் இருந்த வடிவேலு, இரண்டு இறப்புகளையும் எதிர்கொண்டார்.

அந்த இழப்புகள் அவருக்குள் சோகத்தையும், விரக்தியையும் உருவாக்கி விட்டன.

வலது கரமாகவும், இடது கரமாகவும் விளங்கிய முருகேசன், மற்றும் வேலுச்சாமியில் மரணங்கள்தான் அவை.

மதுரை நண்பன் முருகேசன், குளியறையில் தவறி விழுந்து இறந்து போனார்.

கொஞ்ச நாட்களில் கேஷியர் வேலுச்சாமி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பாதிப்புகள், வடிவேலுவை நிலைகுலைய செய்திருக்க வேண்டும்.

தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த ஷங்கரிடமே தகராறு செய்ய ஆரம்பித்தார்.

அவர், ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முற்பட்டார். கால்ஷீட் கொடுத்த வடிவேலு, “கதையை மாத்து.. காட்சிகளை மாத்து” என இயக்குநர் சிம்புதேவனிடம் வம்பு செய்ததால், அந்த படத்தையே கை விட்டார், ஷங்கர்.

அந்த படத்துக்காக கோடிகளில் பணத்தை விதைத்திருந்தார், ஷங்கர். ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார், ஷங்கர். முடியாது என வடிவேலு பிடிவாதம் காட்டினார்,

வைகைப்புயல் படங்களில் நடிக்க ‘ரெட் கார்டு’ போட்டது, தயாரிப்பாளர் சங்கம்.

சில பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அபராதத் தொகையை கட்டிய லைகா நிறுவனம், ரெட் கார்டை அகற்றி, வடிவேலுவை தன் படத்தில் ஒப்பந்தம் செய்தது.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடித்தார். படம்- படுதோல்வி.

‘நாயகன் வேடம் இனி வேலைக்கு ஆகாது’ என முடிவு செய்த வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களில் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார்.
அதுவும் ‘ஹிட்’ ஆகவில்லை.

ஆகச்சிறந்த உதாரணம் – ‘சந்திரமுகி -2’ ஆம் பாகம்.

வடிவேலு வனவாசம் சென்றிருந்த காலத்தில் அவரது இடத்தை யோகிபாபு, சூரி உள்ளிட்டோர் நிரப்பி விட்டனர்.

அவர்கள் காட்டில் இப்போது, மழை.

வடிவேலு தோட்டத்தில் வெயில்.

– பாப்பாங்குளம் பாரதி.

#வடிவேலு #Vadivelu #வைகைப்புயல் #VaigaiPuyal #தமிழ்நகைச்சுவை #TamilComedy #தமிழ்சினிமா #TamilCinema #வடிவேலுவாழ்க்கை #VadiveluLife #வடிவேலுவெற்றிப்பயணம் #VadiveluSuccessStory #வடிவேலுவீழ்ச்சி #VadiveluDownfall #இம்சைஅரசன்23ஆம் புலிகேசி #ImsaiArasan23amPulikesi #ராஜ்கிரண் #Rajkiran #பாரதிராஜா #Bharathiraja #ஷங்கர் #Shankar #சிம்புதேவன் #ChimbuDeven #சந்திரமுகி #Chandramukhi #யோகிபாபு #YogiBabu #சூரி #Soori #நடிகர்வாழ்க்கை #ActorLife #திரையுலகப்பயணம் #FilmJourney