நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையிடப்பட்டது.
இதனை நடிகர் யஷ் – ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா மற்றும் தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர்.
தன் தந்தை ராவணனாக மிரட்டியுள்ள இந்த பிரம்மாண்டக் காவியத்தை நெகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்த இந்தத் தருணம், அவர்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்தின் ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராமரின் தம்பியான லட்சுமணனாக ரவி துபே, ராமரின் தீவிர பக்தனான அனுமானாக சன்னி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை அவரது குழந்தைகள் பார்த்திருப்பது நடிகர் யஷ்ஷின் நெகிழ்வான தருணமாக அமைந்துள்ளது.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம்தான். ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ஐராவதியிலிருந்தும், யதர்வ் என்ற பெயருக்கு ‘முழுமையானவன்’ என்றும் பொருள்.
மேலும், யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களை இணைத்தே யதர்வ் என்ற பெயரைத் தேர்வு செய்ததாகவும் யஷ் மற்றும் ராதிகா தெரிவித்துள்ளனர்.
இப்போது ‘ராமாயணா’ திரைப்படம் அவர்களின் நினைவுகளில் தனியிடம் பிடித்திருப்பதன் மூலம், இந்த இதிகாசத்திற்கும் யஷ் குடும்பத்திற்கும் இடையே அழகான தொடர்பு உருவாகியுள்ளது.
வரும் நவம்பர் 5 ஆம் தேதி ‘ராமாயணா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
