Take a fresh look at your lifestyle.

‘பிரேமம்’ மலர் டீச்சரை இழந்திருப்போம்…!

நடனக் கலைஞராக முதன் முதலாகத் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன்பின், கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி.

இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே., கார்க்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளர்.

தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படம் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படிப் பங்கேற்ற புரமோஷன் நிகழ்ச்சியில், தான் சினிமாவில் அறிமுகமான ‘பிரேமம்’ படத்தில் நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்ததாக சாய் பல்லவி கூறியுள்ளார்.

இது பற்றிப் பேசிய சாய் பல்லவி, “அந்த நேரத்தில், நான் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது இயக்குநர் புத்திரனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை நான் ஒரு மோசடி அழைப்பு என்றே நினைத்தேன். அப்படி ஒரு விஷயம் நடப்பது சாத்தியமில்லை என்று நினைத்து மறுப்பு தெரிவித்தேன்.

அதன் பின்னர், அது உண்மைதான் என்பதை உணர்ந்து அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.