Take a fresh look at your lifestyle.

முதல் படைப்பிலேயே முழுக்க அன்பை விதைத்த இயக்குநர்!

188

தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு. அடுத்தடுத்து வரும் புது இயக்குனர்கள் திரைக்கதையிலும் திரைமொழியிலும் அட்டகாசப்படுத்துகிறார்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

அடிக்கடி ‘ஒன் லைன்’ கதையை வச்சுட்டு சேட்டன்மார்கள் பிரமாதமாக விளையாடுகிறார்கள் என்று மலையாள சினிமா குறித்து எழுதுவேன் அல்லவா.

தமிழ் சினிமாவில் அந்தக் குறையை போக்கியிருக்கிறார் போகுமிடம் வெகுதூரமில்லை இயக்குனர் மைக்கேல் கே ராஜா. அவரே கதைக்கான நாயகன் போல்தான் இருக்கிறார்.

வெளியூருக்குப் பிணத்தை டெலிவரி செய்ய செல்லும் டிரைவருக்கும் வழியில் லிப்ட் கேட்டு ஏறும் ஒரு நாடகக் கலைஞனுக்கும் இடையிலான பயண நேரமே போகுமிடம் வெகுதூரமில்லையின் ஒன் லைன்.

சொல்வதற்கு எளிதானதாக இருக்கும் இந்த ஒருவரிக்கதையை இரண்டரை மணி நேரப் படமாக்குவது அத்தனை எளிதானதல்ல.

ஆனால், இயக்குனர் மைக்கேல் தனது திரைக்கதை வடிமைப்பின் மூலம் இறுதிக் காட்சி வரை நம்மை நாற்காலியின் நுனியில் அமரச் செய்திருக்கிறார்.

பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளோ, குத்துப் பாட்டுகள் உள்ளிட்ட மசாலாக்களோ இல்லை. ஆனால், படம் முடியும் வரை விறுவிறுப்பாக இருக்கிறது காட்சி அமைப்புகள்.

நெல்லையைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் சென்னையில் சாலை விபத்தில் தலை நசுங்கி இறந்து போகிறார்.

இரண்டு மனைவி கொண்ட அந்த நபரின் உடலுக்காக இரண்டு மனைவியின் மகன்கள் வெறித்தனமாக ஊரில் காத்திருக்கிறார்கள் கொள்ளி வைப்பதற்காக.

பயணத்தின் இடையில் வரும் திடீர் பஞ்சாயத்துகளால் அந்த உடல் போய்ச் சேர்ந்ததா, இல்லையா?  என்பதுதான் கதை.

அந்த உடலை கொண்டுபோகும் டிரைவராக விமல் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

அவரது அமரர் ஊர்தியில் லிப்ட் கேட்டு ஏறும் கருணாஸ் தான் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கிச் சுமக்கிறார்.

நெல்லை மொழி நடையில் எல்லோரையும் நேசிக்கும் மனிதராக ஐந்து முக பாவனைகள் காட்டும் நவரச நாடகக் கலைஞன் நளினமூர்த்தியாக படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார்.

சக மனிதர்களுக்கு துன்பம் நேர்கையில் வருந்தும்போதும் உதவும்போதும் அன்பான தேவதையாக சிறகுகள் விரித்து உயர பறக்கிறார்.

கருணாஸ் இப்படியெல்லாம் நடிப்பாரா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். (நிஜத்தில் அரசியல்வாதியாக அவர் பேசும் சாதி அரசியலுக்கு எதிராகவே நடித்திருக்கிறார் என்பது கொசுறு தகவல்.)

கதாநாயகி மேரி ரிக்கெட்ஸ் கர்ப்பிணி மனைவியாக பொருத்தமாக இருக்கிறார். அழும்போது உருக வைக்கிறார்.

தீபா அக்கா வழக்கம் போல் நெல்லை மொழி நடையில் சகோதரி பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன், பவன், அருள் தாஸ், வேலா ராமமூர்த்தி, சார்லஸ் வினோத், தாத்தாவாக வருபவர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசையும் “ஏன்டி இப்படிப் பார்க்கிற” பாடலும் அருமை. டெமல் சேவியரின் ஒளிப்பதிவும், எம்.தியாகராஜனின் எடிட்டிங்கும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

தந்தையின் உடலுக்காக காத்திருக்கும் மகன்களின் குடும்பப் பின்னணி மூலம் சமூகப் பின்னணியையும் எதார்த்தமாக பதிவு செய்திருப்பது, இடையில் வரும் காதல் ஜோடிக்கு நடக்கும் தாக்குதலின் மூலம் கள எதார்த்தத்தை பதிவு செய்தது என இந்தப் படத்தில் சர்ச்சையாக்குவதற்கு சிலருக்கு வாய்ப்புகள் இருந்தாலும்,

அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் யாரையும் காயப்படுத்தாமல் காட்சி அமைத்ததும், கடைசி வரைக்கும் எப்படிதான் விமல் அந்த உடலை கொண்டுபோய் சேர்ப்பார் என்று நம்மை பரபரப்பாக வைக்கும் அந்த காட்சி அமைப்புகள் எல்லாம் இயக்குனர் மைக்கேலின் புத்திசாலித்தனம்.

12 ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வேறு நடிகர்களால் நடிக்கப்பட்டு கிடப்பில் கிடந்தது என்பதை அறியும்போது, அந்த கதைக்கு இப்போது உயிர் கொடுத்த தயாரிப்பாளர் சிவா கிளாரி அவர்களின் நம்பிக்கையை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும்.

இதுபோன்ற எளிய மனிதர்களின் கதைகளை தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது இந்த படம்.

மொத்தமாக நல்ல சினிமாவை நோக்கி தமிழ் சினிமா போகுமிடம் வெகு தூரமில்லை என்று நம்பிக்கை அளித்திருக்கிறது இந்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ அவசியம் குடும்பத்தோடு பார்க்கலாம்.

இரத்த பூமியாக மாற்றப்பட்டிருக்கும் நெல்லையில் இருந்து வந்து இங்கு அன்பை விட உயர்ந்தது எதுவுமில்லை என்று தன் முதல் படைப்பில் முழுக்க அன்பை விதைத்திருக்கும் இயக்குனர் மைக்கேல் கே ராஜா தமிழ் சினிமாவில் உயரப் போகும் காலம் வெகுதூரமில்லை. வாழ்த்துகள். 

நன்றி: கார்ட்டூனிஸ்ட் பாலா