Take a fresh look at your lifestyle.

‘கட்டபொம்மன்’ உருவாகக் காரணமான கார் பயணம்!

பேசும் படம் :

சேலம் நகர் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தன. பழைய பஸ் நிலையப் பகுதியில் மட்டும் 20-க்கும் அதிகமான தியேட்டர்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. இது 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.

1916-ம் ஆண்டு அதேப் பகுதியில் கிச்சிபாளையம் செல்லும் சாலையில் ஒரு தியேட்டர் கட்டப்பட்டது. அதன் உரிமையாளர் வேலாயுதம். நகரில் பிரபலமானவர்.

அப்போது சேலம் நகரில் மின்சார விளக்குகளைப் பார்ப்பதே அரிது. அந்த நேரத்தில் இந்தத் திரையரங்கத்தில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் அதற்கு ‘மங்கள விலாஸ் எலெக்ட்ரிக் தியேட்டர்’ என்று பெயர் வைத்தார்.

1-11-1926 அன்று அது புதுப்பிக்கப்பட்டு ஓரியண்டல் தியேட்டராக பெயர் மாற்றம் பெற்றது. சேலத்தில் முதல் தியேட்டர் என்ற பெருமை அதற்கு உண்டு.

ஆரம்பத்தில் ஊமைப் படங்களே காட்டப்பட்டு வந்தன. 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன. காளிதாஸ் அங்கு திரையிடப்பட முதல் பேசும் படம். காலை காட்சியாக குறவஞ்சி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

வேலாயுதம் பிள்ளை தியேட்டர் தொழிலுடன், சுப்பாராய முதலியார் என்பவருடன் இணைந்து ஏஞ்சல்ஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் நடத்திவந்தார்.

1933-ம் ஆண்டு அவர்களுடன் சேர்ந்து டி.ஆர்.சுந்தரம் படங்களைத் தயாரித்தார். அப்போது கல்கத்தா நகரில்தான் ஸ்டூடியோக்கள் இருந்தன.

அதன்பிறகே ஏற்காடு அடிவாரத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ என்ற சினிமாப் படப்பிடிப்பு ஸ்டூடியோவை டி.ஆர்.சுந்தரம் நிறுவினார் என்பது வரலாறு.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் 16-5-1959 அன்று ஓரியண்டலில் வெளியானது.

அப்போது, தியேட்டரின் வாசல் முகப்பு கோட்டை போன்று ‘செட்’ போடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.100 நாட்கள் அந்தப் படம் அரங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

வெற்றி விழாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நேரில் வந்து கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

அதற்காக ஓரியண்டல் தியேட்டர் முன்பு மெயின் ரோட்டில் விசேஷ பந்தல் அமைத்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

ஒரு சினிமா தியேட்டரில் ரசிகர்களுக்கு இவ்வாறு விருந்து கொடுத்தது வேறு எங்கும் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

சேலத்துக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒருமுறை சிவாஜி கணேசனும், வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியும் கயத்தாறு வழியாக காரில் சென்றனர்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தைப் பற்றி அவர்களிடையே பேச்சு எழுந்தது அப்போது சக்தி கிருஷ்ணசாமி கட்டபொம்மன் கதையை நாடகமாக ஆக்கலாம் என்ற விருப்பத்தை சிவாஜியிடம் சொல்ல, உடனே அவரும் நாடகமாக தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி உருவானதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன்!

குறிப்பு: வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்ற சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்.