தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.
கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன் பேசும்போது, “பல சிறிய விஷயங்களுக்கு இந்த படம் முன்னுதாரணமாக இருக்கும்.
படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகர் தர்ஷன்: இந்தப் படம் அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அது பார்வையாளர்கள் கையில் தான் உள்ளது.
நடிகர் பாண்டி: ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களைத் தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்தப் படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை.
நடிகை சாஷா: கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
13 விருது விழாக்களில் இந்தப் படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்.
இயக்குநர் சஜீவ் பழூர்: ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது.
எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் என்பதால் அதனால்தான் தமிழ் மொழியில் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நடிகர் கருணாஸ்: 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது.
இந்தப் படம் சாமானியர்களைப் பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களைத் தேர்வு செய்துள்ளார்.

ஏழு கோடி ரூபாய் இந்தப் படத்திற்காக முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை.
இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்தப் படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது 20 ஆண்டு கால ஆசையை இந்தப் படம் நிறைவேற்றி இருக்கிறது.
படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி.
‘நந்தா’ படத்திற்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக பாராட்டி இருக்கிறார்.
நிமிஷா என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்தப் படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.