‘பியூட்டிபுல் பீயிங்ஸ்’ என்ற திரைப்படம் இன்றைய இளைஞர்கள், உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டதாகும்.
இந்தப் படம், கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘சினிமா ஆஃப் தி வேர்ல்ட்’ பிரிவில் பிரீமியர் காட்சியாகத் திரையிடப்பட்டது. முன்னதாக, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும்(2022) ‘பியூட்டிஃபுல் பீயிங்ஸ்’ திரையிடப்பட்டது.
“நட்பின் மகிழ்ச்சிகளையும் எல்லைகளையும் நுட்பமான முறையில் ஆராயும் கதை இது” என்கிறார் இந்த ஐஸ்லாந்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் அன்டன் மேனி ஸ்வான்சன்.
“எந்தவொரு உறவிலும் ஒருவருக்கொருவர் எல்லைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், அதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது” என்கிறார் அவர்.
கூடவே, படத்துக்கு குழந்தை நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த சவால்களே அவரது பெரிய பிரச்சினையாக இருந்தது என்கிறார்.
இந்தப் படத்தின் இயக்குநர் குட்முண்டூர் அர்னார் நுண்கலையில் பட்டம் பெற்றவர். இவரது படங்கள் பல விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன.
இந்தப் பாராட்டுக்களில் கேன்ஸ் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரை ஆகியவையும் அடங்கும்.
அவரது முதல் படமான ‘ஹார்ட்ஸ்டோன்’ வெனிஸில் திரையிடப்பட்டது. இந்தப் படம் உலகளவில் 50 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.