திரைத் தெறிப்புகள்-27:
*
தாய்மையை மையப்படுத்திய பல திரையிசைப் பாடல்கள் தமிழில் இருந்தும் கூட, 1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘அன்னை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் அருமையான ஒன்று.
இந்தப் பாடலை வெகு இனிமையாகப் பாடியிருப்பார் பானுமதி.
இளையராஜா அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்த் திரை இசையில் தனக்கு மிகவும் பிடித்த பெண் குரல்களில் ஒன்றாக பானுமதி அவர்களின் குரலைக் குறிப்பிட்டுருப்பார்.
உண்மையில் அதற்கு மிகவும் பொருத்தமான வசியம் நிறைந்த அபூர்வக் கலவையோடு திகழ்ந்தது பானுமதியின் குரல்.
இசையமைப்பாளர் ஆர். சுதர்சனத்தின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் பாடலை பானுமதி பாடியிருக்கும் விதமே இதற்கு சான்று.
“பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று.
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று.
காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா..
கனிந்து விட்ட சின்ன மரம்
கண்ணீரில் வாடுதடா…”
– என்று தொடரும் இந்தப் பாடலை திரைப்படத்திலும் பாடியபடி நடித்திருப்பார் பானுமதி.
குழந்தை இல்லாத, அதே சமயம் குழந்தைக்காக மிகவும் ஏங்கித் தவிக்கும் தாயாக ஒரு குழந்தையை அன்போடு அரவணைத்துக் கொஞ்சியபடி அவர் பாடும் பாடல் காட்சி கருப்பு, வெள்ளை நிழல் ஓட்டமாக மனதில் நிற்கிறது.
“பெற்றெடுக்க மனம் இருந்தும்
பிள்ளைக் கனி இல்லை.
சுற்றமென்னும் பறவையெல்லாம்
குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டித் தாலாட்டும்
பேறு மட்டும் இல்லை…”
என்று நகரும் பாடல்
“வேண்டும் என்று கேட்பவர்க்கு
இல்லை இல்லை என்பார்.
வெறுப்பவர்க்கும், மறுப்பவர்க்கும்,
அள்ளி அள்ளித் தருவார்.
ஆண்டவனார் திருவுள்ளத்தை
யாரறிந்தார் கண்ணே?
யார் வயிற்றில் யார் பிறப்பார்
யார் அறிவார் கண்ணே?”
–
என்று நிறைவடையும் இந்தப் பாடலை பானுமதியின் மிக இனிமையான குரலில் கேட்பதும் கனிந்த முகத்துடன், குழைவான முகபாவத்துடனும் அவர் நடிப்பைப் பார்ப்பதும் பரவசமான கணம் தான்.
இப்போதும் பானுமதியின் துல்லிய உச்சரிப்போடு, இந்தப் பாடலைக் கேட்கும்போது பரந்த வெளியில் ஒரு கரும் பறவை தனது சிறிய பறவையோடு இணைந்து சிறகடித்துப் பறப்பதைப் போன்று மனதில் ஒரு சித்திரம் எழுகிறது.
-யூகி.