வாழ்நாள் முழுவதும் பெருமிதம் அடையக்கூடிய வெற்றி!
மறக்க முடியாத இசைமைப்பாளர் சலீல் சௌத்ரி நினைவுப் பதிவு
“மானஸ மயிலே வரு” – மெல்லிய இறகு வருடுவதைப் போலிருக்கும் சலீல் சௌத்ரி இசையமைத்த அந்த மலையாளப் பாடலை மறக்க முடியுமா?
அபூர்வமான திரைக்காவியமான ‘செம்மீன்’ மலையாளப் பட விமர்சனம்.
1965-ம் ஆண்டு ஆகஸட் மாதம் வெளியான ‘செம்மீன்’ மலையாளப் படவுலகின் ‘கிளாஸிக்’. தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை அதன் சுவை குறையாமல் திரைமொழி இயற்றியவர் இயக்குநர் ராமு காரியத்.
ஷீலா, சத்யன், மது என்று எத்தனை இயல்பான நட்சத்திரங்கள்? சலீல் சௌத்ரியின் “மானஸ மயிலே வரூ” போன்ற எத்தனை ரம்யமான பாடல்கள்?
எவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவு?
செம்மீன் – இன்றும் மலையாளப் படவுலகின் தவிர்க்க முடியாத கடலோர உப்புக்காற்றைப் போன்ற படம்.
அதைப் பற்றி அப்போது ‘தினமணிக்கதிர்’ இதழில் வெளிவந்த விமர்சனம்.
செம்மீன்:
பணத்தாசை பிடித்த தந்தை. தந்தைக்கு உதவி செய்யும் ஓர் இளம் முஸ்லிம் முதலாளி; அவனை அந்த மீனவப் பெண் விரும்புகிறாள்.
ஆயினும் முரட்டுத் தன்மையும், நல்ல குணமும் உடைய வேறொருவனை மணந்து கொள்ள நேரிடுகிறது.
காதல், கடமை, கற்பு இவற்றிற்கிடையே சிக்குண்டு தவிக்கும் அந்த மீனவப் பெண்ணின் கதையே செம்மீன்.
‘ஒரு பெண் தன் கற்பை இழந்த மாத்திரத்தில் அவளுடைய கணவனை கடலம்மை ஆட்கொள்வாள்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது இப்படம்.
பணத்தாசை பிடித்த தந்தையின் வற்புறுத்தலின் பேரில், தான் காதலித்தவனை மணக்க முடியாமல், யாரோ ஒருவனின் கைப்பிடித்து அவன் ஊருக்குப் போய்ச் சேருகிறாள் அந்தப் பெண்.
அத்துடன் தான் காதலித்தவனை மணப்பதற்கு அந்தக் காதலன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதும் ஒரு தடையாகிறது.
கணவனுடன் புதுவாழ்வைத் தொடங்கும் கருத்தம்மா தன் பழைய நினைவுகளை மறந்து வாழ்கிறாள்.
ஊரார் அவளைப் பற்றித் தவறாகப் பேசியபோதும், அவள் கணவன் அவளைச் சந்தேகிக்க இடமில்லாமல், அவனைத் தெய்வம் போல் போற்றி அன்பு செலுத்துகிறாள்.
ஆனால், அவள் தன் வாயினாலேயே தன் தங்கையிடம் பரிக்குட்டியைப் பற்றி விசாரிக்கும்போது, மறைந்திருந்து கேட்ட கணவனின் ரத்தம் கொதிக்கிறது. கோபத்துடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விடுகிறான்.
கருத்தம்மாவைப் பழைய நினைவுகள் ஆட்கொள்கின்றன. தூரத்தே அவளையே நினைத்துப் பாடிக் கொண்டிருக்கும் பரிக்குட்டியின் குரல் கேட்கிறது. வெளியே வந்து பரிக்குட்டியைப் பார்க்கிறாள். அவர்கள் வாழ்வில் விரும்பிய அந்த ஒரு கணம், அவள் அவன் அணைப்பில் சிக்கிவிடுகிறாள்.
அதே சமயம் கடலம்மை அவள் கணவனை எடுத்துக் கொண்டு விடுகிறாள். பரிக்குட்டி கருத்தம்மாவின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக, அவர்களுடைய உடல்கள் கரையில் இணைந்தபடி ஒதுங்கியிருக்கின்றன.
நம் உள்ளத்தை உலுக்கி விடும் கதை இது. உணர்ச்சி மயமான இந்தக் கதையில் வரும் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுக்கு, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வாங்கிய படத்தில் நடித்த பெருமை உண்டு.
தந்தையாக வரும் கொட்டாரக்கராவும், கருத்தம்மாவாக ஷீலாவும், பழனியாக சத்யனும், நம் மனதில் நிலைத்துவிடும் அழியாச் சித்திரங்களாகி விடுகின்றனர்.
கேரள நாட்டுக் கடற்கரையின் எழிலைக் காமிராவில் வடித்து எடுத்திருக்கிறார் காமிராவைக் கையாண்டவர். கடல் அலைகளும், மணலும், பறவைகளும், நண்டும் நம்முடன் பேசுகின்றன.
பரிக்குட்டியின் மனம் குமுறும்போது கடல் கொந்தளிக்கிறது. அவன் அழும்போது, அலைகள் கரையைத் தொட்டுக் கண்ணீர் வடிக்கின்றன.
கருத்தம்மாவின் தந்தை தான் செய்த தவறுக்காக வருந்திக் குமுறும்போது, கடல் நண்டுகள் மணலை அரிக்கும் காட்சியைக் காட்டும் உத்திக்கு இணை அது தான்!
படம் பார்க்கும்போது எங்கோ கேரளக் கிராமத்தில் நடக்கும் ஒரு குடும்பச் சிக்கலில் நாமும் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு தோன்றுகிறது.
இதை டைரக்ட் செய்துள்ள ராமு காரியத்துக்கு இது மாபெரும் வெற்றி.
வாழ்நாள் முழுவதும் எண்ணிப் பெருமிதம் அடையக்கூடிய வெற்றி.”
02.12.1966 தேதியிட்ட ‘தினமணிக்கதிர்’ வார இதழில் வெளிவந்த சினிமா விமர்சனம்.
அந்த இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருப்பவர் ‘செம்மீன்’ படக் கதாநாயகியான ஷீலா.