குரு சோமசுந்தரம், அனுமோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா, அர்ச்சனா நடிப்பில் சரஜ் சீலன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
தண்டர் மீடியா மற்றும் எல்வி என்டர்டைன்மெண்ட் சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் லிங்கேஸ்வரன் தயாரிப்பு.
அமெரிக்காவில் வேலை நிமித்தம் வசிக்கும் காதல் ஜோடி கவின் – ஒளி (விஜய் விஷ்வா – அர்ச்சனா).
அர்ச்சனாவின் அம்மா, அப்பாவான தாரா – கவுதம் (அனுமோள் – குரு சோமசுந்தரம்) சென்னையில் இருக்கிறார்கள். கவுதம் ஒரு அரசு மருத்துவர். தாரா எப்போதும் நீதி நேர்மைக்காக போராடும் சமூக சேவகி.
காதல் திருமணம் செய்து கொண்டு அந்தக் காதல் குறையாமல் வாழும் தம்பதிகள் இவர்கள்.
இந்நிலையில் திடீரென்று அப்பாவை விட்டு அம்மா போய் விட்டதாக தகவல் வர, அதை நம்ப முடியாமல் அமெரிக்காவில் இருந்து கிளம்புகிறாள் ஒளி. உடன் கவின்.
பிரிவுக்குக் காரணம், கவுதம் பாரிஸ் போனபோது அங்கு பார்த்த ஒரு காதல் ஜோடியின் போட்டோ.
சாதி மாறிக் காதலித்ததற்காக ஆணவக் கொலைக்கு ஆட்பட்ட ராஜ்குமார் – சியாமளா (சாய் விக்கி – நயனா சாய்) என்ற காதல் ஜோடி அது.
அதற்கு தற்கொலை என்று சான்றிதழ் கொடுத்தது டாக்டர் கவுதம்தான்.
காரணம் அப்படி கொடுக்காவிட்டால் தாராவையும் ஒளியையும் கொன்று விடுவதாக சம்மந்தப்பட்டவர்கள் மிரட்டி இருப்பார்கள்.
அப்போது அதை தாராவிடம் மறைத்து விட்ட கவுதம் இப்போது சொல்ல, ‘எனது கணவன் இப்படிப் பட்ட அயோக்கியனா?’ என்று, தாரா கவுதமை பிரிந்து போயிருப்பது ஒளிக்கும், கவினுக்கும் தெரிய வருகிறது.

மீண்டும் கவுதமுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ஆணவக் கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்; அதற்கு துணை போன குற்றத்துக்கான தண்டனையை கவுதமும் எதிர்கொள்ள வேண்டும் என்று தாரா சொல்ல, கவுதமும் சம்மதிக்க,
அதன்படி தாராவே பொது நல வழக்கு தொடர, நடந்தது என்ன என்பதே படம்.
பெரும்பாலோர் எப்படி வாழ்கிறார்கள் என்பது யதார்த்தம். எல்லோரும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது கொள்கை.
இந்தப் படம் இரண்டாவதான கொள்கை வகை.
”மகளுக்கே கல்யாண வயசு வந்துருச்சு. மாப்பிள்ளையும் வந்துட்டான். இனிமே பெருசுங்க நாம வாழறது முக்கியமா? பிள்ளைகள் நல்லா வாழறது முக்கியமா?
நீ என் கூட வாழணும்னா நானும் கிடைக்கிற தண்டனையை ஏத்துக்கணுமா? லூசு. ஒரு வேளை நான் ஜெயிலுக்கு போயிட்டா நீ என் கூட ஜெயிலுக்கு வந்தா வாழப் போற.? அதுக்கு நான் தனியாவே இருக்கேன். நீயும் எங்கயோ இருந்துக்கோ. மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழட்டும்”
– என்றுதான் கவுதம் தாராவிடம் சொல்வான் என்பதுதான் யதார்த்தம். அப்படிப் பார்த்தால், இந்தக் கதை ஆரம்பத்திலேயே சில்லு சில்லாக நொறுங்கி விடும்.
ஆனால், இது கொள்கைக் கதாபாத்திரங்கள் கொண்ட படம்.

“நாங்க பாத்துக்குறோம் நீ உன் கேரியரைப் பாரு…” என்று அம்மா அப்பா இருவரும் சொல்லியும், ‘அவர்கள் எப்பேர்ப்பட்ட காதல் தம்பதிகள் என்பதை சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த மகள், ‘அப்பேர்ப்பட்ட அம்மா அப்பா பிரிந்து வாழும்போது அதைவிட எனக்கு அமெரிக்க வேலை முக்கியமில்லை’ என்று கிளம்பி வரும் மகள்,
அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உடன் வரும் காதலன்,
காதல் கணவனே ஜெயிலுக்குப் போனாலும் சரி, நியாயம் ஜெயிக்க வேண்டும் என்று போராடும் மனைவி – இப்படிப்பட்ட கேரக்டர்கள் கொண்ட கதை இது.
வெகுஜனப் பார்வையில் படத்தின் பலவீனமும் இதுதான். அதேநேரம் பலமும் இதுதான்.
சரி, தப்பு பார்க்கும் மனசுகளுக்கு இந்தக் கதை பிடிக்கும். ஆனால், எத்தனை பேர் சரி தப்பு பார்க்கிறார்கள்?
ஒரு புள்ளியில் கதையைத் துவங்கி அப்படியே ஒவ்வொரு விஷயமாய் வளர்க்கும் திரைக்கதையை சிறப்பாக செய்து இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
அது சரியாக வெளிப்படுவதில் சாபு ஜோசப்பின் படத்தொகுப்புக்கும் பங்கு உண்டு.
படம் முழுக்க சரியான முகங்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய வகையிலும் கவனம் கவர்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
வெளிநாட்டுப் ‘பின்னணி’க்கு மேட்ச் செய்கிற தரத்தில் சிறப்பான ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார் சதீஷ். தவிர மொத்தப் படத்திலும் அழகனான வண்ணங்களில் ஜொலிக்கிறது சதீஷின் ஒளிப்பதிவு.
கே கொடுத்திருக்கும் இசையிலும் குறையில்லை.
சற்றும் குறை காண முடியாத பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் குரு சோமசுந்தரம். இந்த வாக்கியத்தை சற்று மலையாள வடையில் சொன்னால் அது அனுமோளுக்கும் பொருந்தும்.

சாய் விக்கி, நயனா சாய் இயல்பான நடிப்பு.
உற்சாகமாக அர்ச்சனா நடிக்க, உடன் ஈடு கொடுக்கிறார் விஜய் விஸ்வா.
படம் முழுக்க ஆங்காங்கே காமெடிகள் வைத்து முக்கிய திருப்பத்துக்குள் கதை போனதும் எமோஷனலாக சீரியசாக முடிய வேண்டிய படம் இது.
மாறாக, கடைசி நேரத்தில் வில்லனை எல்லாம் காமெடி ஆக்கி குரு சோமசுந்தரம் கையில் துப்பாக்கி கொடுத்து என்னமோ செய்து படத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்.
அதே நேரம் படத்தின் இடையே வந்த ஒரு சிறு கதாபாத்திரம் மூலம் ஒரு கிளை எடுத்து, அற்புதமாக ஒரு போஸ்ட் கிளைமாக்ஸ் காட்சியைக் கொடுத்து பாராட்டுப் பெறுகிறார் இயக்குநர். அங்கேயும் ஒளிப்பதிவாளர் சதீஷும் அசத்தி இருக்கிறார்.
மொத்தத்தில்… பாரீஸ் கஃபே – மூலிகை பானம்.
— சு.செந்தில்குமரன்