Take a fresh look at your lifestyle.

“பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா…”!

527

திரைத் தெறிப்புகள் – 83 :

*

மலைச் சரிவில் ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசுவதைப் போலிருக்கிறது, இந்தப் பாடலைக் கேட்கும்போது.

அந்தக் காலத் திரைமொழியில் சொன்னால் – இது உற்சாகம் ததும்பும் ஜாலியான பாட்டு.

1961-ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘தேன் நிலவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடியவரும்,  இசையமைத்தவரும் ஏ.எம். ராஜா தான்.

“பாட்டுப் பாடவா. பார்த்துப் பேசவா.
பாடம் சொல்லவா. பறந்துச் செல்லவா.
பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா.
நான் பாதைத் தேடி ஓடி வந்த காளை அல்லவா…”

என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

மென்மையான காதலைப் பாட்டின் மூலம், எவ்வளவு மேன்மையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

இத்திரைப்படத்தில் ஜோடியாக வரும் ஜெமினி கணேசன் – வைஜெயந்தி மாலாவும் இப்பாடலுக்கு வாயசைத்தபடி, குதிரையில் பயணம் செய்தபடி வரும் காட்சியைப் பார்ப்பதே அவ்வளவு அழகாக இருக்கும்.

அதிலும் மலைச் சரிவின் கீழே மேகக் கூட்டங்கள் இருக்க, அதில் அவர்கள் நகர்ந்தபடி இருக்க, இந்தப் பாடலும் நகரும்.

“மேக வண்ணம் போலே மின்னும் ஆடையினாலே.
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே.

பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா?
இங்கே பார்வையோடு பார்வைச் சேரத் தூது வேண்டுமா?

மாலையல்லவா நல்ல நேரமல்லவா.
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா…”

ஏற்கனவே மென்மையாக இருக்கும் ஏ.எம். ராஜாவின் குரல் இந்தப் பாடலில், இன்னும் குழைந்து பதமான இளம் நுங்கைப் போல இன்னும் மென்மையாக இருக்கும்.

அதிலும் அவருடைய இசையில் அவரே பாடுவது, தனி சுகம் இல்லையா?

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே…”

இப்பாடலில் கதாநாயகியான வைஜெயந்தி மாலாவின் மிடுக்கான தோற்றமும், கம்பீரமான முகபாவனைகளும் பார்ப்பதற்கு அவ்வளவு ரசனையாக அமைந்திருக்கும்.

“கண்ணிறைந்த காதலனைக் காணவில்லையே,
இந்தக் காதலிக்குத் தேனிலவில் ஆசையில்லையா?
காதல் தோன்றுமா? இல்லை காலம் போகுமா?
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா…?

ஜென்டிலான இயக்குநர் என்று தமிழ்த் திரை உலகில் பெயர் வாங்கியிருக்கிற ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிற இந்தப் பாடலும்கூட, எவ்வளவு ஜென்டிலாக இருக்கிறது!

*

– மணா.

*