பல பாடல்களை ஒரே நாளில் எழுதி எம்.ஜி.ஆரிடம் ஓ.கே வாங்கிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு.
ஆனால், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு பாடலை முடிக்க ஒரு மாதம் தேவைப்பட்டது.
சோழ நாட்டிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டை மீட்பதற்குத் தயாராகும் சுந்தரபாண்டியன், பாடல் பாடி தனது மக்களைப் போருக்குத் தயார் படுத்துவது போன்ற சிச்சுவேஷன்.
நான்கு வாரங்களில் பத்து முதல் பதினைந்து பல்லவிகள், சரணங்கள் எழுதியும் எதுவுமே தான் நினைத்த மாதிரி வரவில்லை என்று எம்.ஜி.ஆர். கூறிவிட்டார்.
இறுதியாக நான்கைந்து பல்லவிகள், நான்கைந்து சரணங்களை எழுதி எடுத்துக்கொண்டு மைசூா் சென்றேன். அதில் ஒரு பாடலை எம்.ஜி.ஆர். ஓகே செய்தார்.
‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று ஒரு வரி எழுதி இருந்தேன்.
சென்சார் போர்டு அதிகக் கெடுபிடி செய்து கொண்டிருந்த காலகட்டம். அதனால் எம்.ஜி.ஆர். அந்தவரி குறித்து யோசித்தாா்.
“இதில் நமது கொடி என்பதற்கு பதிலாக மீன் கொடி என்று போட்டுக் கொள்ளலாம்” என்றார்.
நான் உடனே “மீன் கொடிக்குப் பதிலாக மகரக் கொடி என்று போட்டால் வாயசைப்பில் வித்தியாசம் தெரியாது” என்றேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
ஆனாலும் எனக்கு திருப்தி இல்லை. நான் மீண்டும் தயங்கியபடியே “மகரக்கொடி என்பது பாண்டிய மன்னன் பாடும் சிச்சுவேஷனுக்கு சரியாக இருக்கும். ஆனால் ‘நமது கொடி’ என்றால்தான் தொண்டர்கள் மத்தியில் கட்சிக் கொடி என்ற ஃபீல் வரும். அப்போதுதான் ஆர்ப்பரித்து எழுந்து, கை தட்டுவார்கள்” என்றேன்.
அவரும் “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சென்சாரில் வெட்டிவிட்டால் என்ன செய்வது? வேண்டுமானால் மகரக்கொடி, நமது கொடி என்று இரண்டு விதமாக ரெக்காா்ட் செய்து கொள்ளலாம். சென்சாரில் நமது கொடியை வெட்டி விட்டால் மகரக்கொடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
நானும் சரி என்று கூறி விட்டுக் கிளம்பிவிட்டேன். பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டு எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டப்பட்டது.
அதில் நமது கொடி என்று மட்டுமே இருந்தது. எம்.ஜி.ஆர். “மகரக்கொடி என்று ஒன்று ரெக்கார்ட் பண்ணச் சொன்னேனே அது எங்கே?” என்று கேட்க எம்.எஸ்.விஸ்வநாதன், “முத்துலிங்கம் அப்படி ஏதும் சொல்லலையே” என்று கூறியிருக்கிறார்.
உடனே எம்.ஜி.ஆரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் போனேன். இன்டர்காமில்தான் பேசினார். குரலில் கோபம் தெறித்தது. “நமது கொடி, மகரக்கொடி என்று இரண்டு விதமாக ரெக்கார்டிங் பண்ணச் சொன்னேனே? அதை நீங்கள் விஸ்வநாதனிடம் சொல்லவே இல்லையாமே?” என்றார் கோபமாக.
“அதுவா தலைவரே, நான் நேரடியாக சென்சார் அதிகாரியைச் சந்தித்துப் பாடலைக் காட்டிவிட்டேன். அவா் ‘நமது கொடி’ என்பதை வெட்ட மாட்டோம், தைரியமாக சூட் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்” என்றேன். எம்.ஜி.ஆர். அமைதியாகிவிட்டார்.
இந்த ஐடியா எனக்கு எப்படி தோன்றியது என்றால், ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தில் முதலில் “நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்றுதான் வாலி எழுதியிருந்தார்.
ரெக்கார்டிங் முடிந்ததும் அந்த வாிகளை சென்சார் அனுமதிக்குமா? என்ற சந்தேகம் தயாாிப்பாளருக்கு எழுந்தது.
உடனே அவர் சென்சாா் அதிகாாியிடம் சென்று அந்தப் பாடலை காட்டியிருக்கிறார். அவரோ “இப்போதுள்ள (காங்கிரஸ்) ஆட்சியில் ஏழைகள் வேதனைப்படுவதாக அர்த்தம் வருகிறது. எனவே நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்துதான் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று மாற்றம் செய்தார்கள். அந்த பாணியில்தான் நானும் முன்கூட்டியே சென்சார் அதிகாரியிடம் சென்று அனுமதி கேட்டேன்.
நன்றி துக்ளக்