முன்பெல்லாம், தமிழ்த் திரைப்படங்களில் பொது ஜனத் தொடர்பு என்று தனியாக இல்லை. விளம்பர ஏஜெண்டுகள்தான் இதைச் செய்வது வழக்கம்.
1957, 58-ல் நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தது. நடிகர் சங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். தான் பத்திரிகை வெளியீட்டாளர்.
பிரபல கதாசிரியரும் வசன கர்த்தாவுமான வித்வான் வே. லட்சுமணன்தான் ஆசிரியர். நடிகன் குரலுக்கு நான் தான் ஸ்டாஃப் போடோகிராபர்.
பத்திரிகையில் ‘வெள்ளித்திரையில், உங்களுக்குக் காணக் கிடைக்காத காட்சிகள்’ என்ற பகுதியில் நான் எடுத்த ஸ்டில் படங்கள் வெளியாகும்.
பத்திரிகை விஷயமாகப் பேசுவதற்கு வித்வான் வே.லட்சுமணன் தினமும் எம்.ஜி.ஆருடன் மாடிக்குப் பேசப் போய் விடுவார்.
நான் கீழே எம்.ஜி.ஆர். பிக்சர்சின் ஆபீஸ் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது ‘நாடோடி மன்னன்’ படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆர்.எம். வீரப்பன் சார் மேஜை மீது ‘நாடோடி மன்னன்’ ஸ்டில்கள் ஏராளமாக இருந்தன.
அப்போதெல்லாம் இந்த மாதிரி ஸ்டில் படங்களை நேரடியாக பத்திரிகைகளுக்குத் தர மாட்டார்கள்.
விளம்பர ஏஜெண்டு மூலம் தான் கொடுப்பார்கள். மேஜை மீது ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட ஸ்டில்கள் இருந்தன.
“இவற்றை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.
“சற்று நேரத்தில் எலிகண்ட் பப்ளிசிடீஸ் நிறுவனத்திலிருந்து வருவார்கள். அவர்களிடம் கொடுப்பதற்காக வைத்திருகிறேன்…” என்று சொன்னார்.
“இதை நான் செய்யட்டுமா?”
“யார் செய்தால் என்ன, தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள்..” என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
பத்திரிகையாளர் பலருடன் பழகுபவன் ஆகையால் ‘நாடோடி மன்னன்’ ஸ்டில்கள் நிறைய பத்திரிகைகளில் வர ஏற்பாடு செய்தேன்.
படத்திற்கு பிரமாதமான பப்பிளிசிட்டி கிடைத்தது. இந்த விஷயம் எம்.ஜி.ஆர். பார்வைக்கு போயிருக்கிறது. கூப்பிட்டுப் பாராட்டியதோடு நிற்காமல், ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு நான் தான் பிரஸ் ஷோ (PRESS SHOW) நடத்த வேண்டுமென்றும் கூறிவிட்டார்.
படம் 100 நாள் ஓடியது… அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாவற்றுக்கும் நான் தான் பிரஸ் ஷோ நடத்தினேன்.
-பிலிம் நியூஸ் ஆனந்தன் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: புதிய பார்வை
#வே_லட்சுமணன் #நடிகன்_குரல் #எம்ஜிஆர் #ஆர்எம்_வீரப்பன் #நாடோடி_மன்னன் #MGR #Nadodi_mannan #பிலிம்_நியூஸ்_ஆனந்தன் #Film_news_Anandan #பத்திரிகை #Magazine #எம்ஜிஆர்_படங்கள் #Mgr_movies