Take a fresh look at your lifestyle.

இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ரூ. 700 கோடி நஷ்டம்!

தரமான திரைப்படங்களை வழங்குவதில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது, மாலிவுட் எனப்படும் மலையாள சினிமா உலகம்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மலையாளத் திரையுலகம் நல்ல படங்களைக் கொடுத்துள்ளது.

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, பிரம்மயுகம், மலைக்கோட்டை வாலிபன், ‘ஆடு ஜீவிதம்’, ‘வாழ’ என பல படங்கள் இந்தியளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன.

இவற்றில் சில படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்தது. கேரளாவில், மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கேரள சினிமாக்கள் வசூல் குவித்தன.

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ எனும் திரைப்படம் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்து, தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் குண்டு போட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் இது குறித்து கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ராகேஷ் பேட்டி அளித்தார்.

அவர் தெரிவித்த தகவல்கள்:

“2024ஆம் ஆண்டில் மலையாளத்தில் மொத்தம் 204 திரைப்படங்கள் வெளிவந்தன – இதில் 26 படங்கள் மட்டுமே ரூ.300 கோடியிலிருந்து 350 கோடி வரை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்தன.

மற்ற படங்களால் கேரளத் திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்த ராகேஷ், “மலையாளத் திரையுலகில் நடிகர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் சினிமா துறையை நிலைநிறுத்த பணம் தொடர்பான ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தொழில்துறையை சிறப்பாக நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க நடிகர்கள் முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

மலையாளத் தயாரிப்பாளர்களின் ஆதங்கம், இணையத் தளங்களில் வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 -பாப்பாங்குளம் பாரதி