Take a fresh look at your lifestyle.

‘இன்ஸிடென்ட் அட் அவுல் க்ரீக்’: ஒரு ராணுவக் கைதியின் கதை!

‘இன்ஸிடென்ட் அட் ஔல் க்ரீக்’  (INCIDENT AT OWL CREEK)

இந்தப் பிரஞ்சுப் படத்தில் ராணுவக் கைதி ஓருவன் தூக்கிலிடப்படக் காத்திருப்பதும், அவன் மனப் போராட்டங்களும்  சொல்லப்படுகின்றன.

தூக்கு மரத்துக்கு அருகில் கை நிறுத்தப்படுகிறான். அவனது கை கட்டப்படுகின்றன. கால்கள் கட்ட படுகின்றன.

கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரி சைகை செய்கிறார். கைதி தூக்கிலிடப்படுகிறான்.

ஆனால், தூக்குக் கயிறு அறுந்து விழுகிறது. கீழே ஓடும் ஆற்றில் அவன் கை, கால் கட்டுகளுடன் விழுகிறான். கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறான் ஆற்றில் நீச்சல் போடுகிறான்.

கரையில் துப்பாக்கி ஏத்தி நிற்கும் சிப்பாய்கள் குறி பார்த்துச் சுடுகிறார்கள். ஆனால், அதிர்ஷ்ட வசமாக ஒரு குண்டு கூட அவன் உடலை  துளைக்கவில்லை.

ஆற்றின் போக்கிலேயே நீந்திச் சென்று கரையை அடைந்து விடுகிறான்.

மேலே சூரியன் சிரிக்கிறான். செடி, கொடிகள், தாவரங்கள், பூக்கள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிகின்றன.

எழுந்து நின்று, தலை தெறிக்க ஓடிச் செல்கிறான். ஓட்டத்தின் வேகத்தில் விழுந்து விடுகிறான். மீண்டும் எழுந்து ஓடுகிறான்.

இதோ, கொஞ்சம் நேரத்தில் அவன் வீடு வந்துவிடும்.

கொடூரமான மரண தண்டனையிலிருந்து அவன் தப்பி விட்டான். சரியான நேரத்தில் தூக்குக் கயிறு அறுந்து விழுந்ததால் அவன் தப்பி விட்டான்.

இதோ! வீடு வந்து விட்டது.

அவன் மனைவி அவனை நோக்கிக் கைகளை அகல விரித்துக் கொண்டு ஓடிவருகிறாள். இதோ, கிட்ட வந்து விட்டான். கணவனும், மனைவியும் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.

இதோ தூக்குக் கயிறு இறுகுகிறது கழுத்தை நெரிக்கிறது! அவன் பிணமாகத் தொங்குகிறான்.

ஆம்! சாகுமுன் அவன் கற்பனையில் நடந்ததுதான் மேற்சொன்ன சம்பவங்கள் அத்தனையும். இந்தச் சின்னஞ்சிறு படம் நம்மை உலுக்கி எடுத்துவிடும்?

– எஸ். குரு

-புதிய பார்வை 1994-ம் ஆண்டு மே மாத இதழில் வெளிவந்த கட்டுரை.