லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், லொள்ளு சபா மனோகர் நடிப்பில் ஏ.ஆர்.ஜீவா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘லாக்டவுன்’.
படிப்பை முடித்து வேலை தேடும் ஆர்வத்தில் இருக்கும் இளம்பெண் ஒருத்தி (அனுபமா பரமேஸ்வரன்).
யதார்த்தமான முதலாளிக்கு (லிவிங்ஸ்டன்) விசுவாசமான அவளது அப்பா (சார்லி). அம்மா (நிரோஷா). ஒரு தங்கை மற்றும் பாட்டி.
முதலாளியின் மகள் எம்.பி.பி.எஸ் படிக்கிறாள். அந்த பெருமையில் முதலாளி இருக்க, அந்த டாக்டர் பெண்ணோ ஒரு லோக்கல் ரவுடி பையனைக் காதலித்து, சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்துகொண்டு, பெற்றோரையும் நேரில் அவமானப்படுத்தி விட்டுப் போய் விடுகிறாள்.
முதலாளி மனம் உடைய, அதைப் பார்க்கும் அப்பா கலங்கிப் போகிறார். வீட்டுக்கு வந்து மனைவியிடம் ”நம்ம பிள்ளைகள் இப்படி பண்ணினா நம்மால தாங்க முடியாது” என்கிறார். வேலை தேடும் நாயகி அதைக் கேட்கிறாள் அவளுக்கு அந்த கவனம் இருக்கிறது.
ஏரியாவில் பல இளைஞர்கள் காதல் வலை வீசியும் அவள் கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில், வேலை விஷயமாக தோழி ஒருத்தியைப் பார்க்க, அவள் தன் பாஸை பார்க்க வரச் சொல்ல, இவள் போக, அங்கே பார்ட்டி நடக்க, எல்லோரும் நாயகியை குடிக்க வற்புறுத்த, இவளும் ஒயின் குடிக்கிறாள். ஓவராகக் குடிக்கிறாள். ஆடுகிறாள், பாடுகிறாள் மட்டையாகிறாள்.
வீடு வந்து சேர்ந்த சில நாட்களில் வயிற்றுக்குள் விழுந்த விதை முளைக்க ஆரம்பிக்கிறது. கர்ப்பம்.!
காரணம் யார் என்றே தெரியவில்லை.

பதறிப்போன நாயகி, நெருங்கிய தோழியிடம் சொல்லி, அவள் உதவியோடு எப்படியாவது கருவைக் கலைக்க அலைய, அந்த நேரம் பார்த்து கொரோனா வந்து லாக் டவுன் விழுந்து யாரும் யாரையும் சந்திக்க முடியாமல் போக, வயிற்றுக்குள் குழந்தை வளர்கிறது.
விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால், மானம் ஒன்றே முக்கியம் என்று வாழும் குடும்பம் என்ன ஆகும்? அடுத்தவர் கதையில் ஆர்வம் காட்டும் அக்கம் பக்கத்து வீட்டார் மனோபாவம் பெற்றோர்களை என்ன எல்லாம் செய்யும்?
– என்ற நிலையில் துடித்துப் போகிறாள் நாயகி.
கருவை வீட்டுக்குத் தெரியாமல் கலைக்க, நாயகி முயல, அந்த முயற்சிக்கு குறுக்கே இமயம் என லாக் டவுன் சூழல் நிற்க, அவளும் தோழியும் சந்திக்கும் பிரச்னைகள், சூழல்கள், மனிதர்கள், அவர்களின் விதவிதமான முகங்கள், குணங்கள், கோரங்கள்…
கடைசியில் அவள் சிக்கலில் இருந்து மீண்டாளா? சின்னாபின்னமானாளா என்பதே படம்.
மிகச் சாதாரணமாக, வழக்கமாக ஆரம்பிக்கிறது படம். அழகான பெண், காதல் முதல் காமப் பார்வை வரை வீசும் ஆண்கள்… என்று போகும் படத்தில்,
தொழிலாளிகளுக்கு உதவும் குணம் உள்ள முதலாளியின் மகள் காதல் கல்யாணம், பெற்றோரைப் புறக்கணிப்பது அதன் தொடர்ச்சி என்று, அந்த பகுதியே கனக்க வைக்கிறது.
அதை வைத்து மெயின் கதையை இணைக்கும் அந்த உத்தி ஓல்டு என்றாலும் எப்போதும் கோல்டுதான்.
இப்படிப்பட்ட பெண், போன இடத்தில் அப்படி மூச்சு முட்டக் குடித்துவிட்டு மயங்குவாளா என்பதும், அந்த மயக்கச் சூழலில் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டது, அந்தப் பெண்ணுக்கு நினைவு வந்த பிறகும் அதை உணர முடியவில்லை என்பதும் லாஜிக் இல்லை என்றாலும் அதுதான் கதை.
அதைக் கடந்து போனால்தான் இந்தக் கதையின் நோக்கம் நிறைவேறும் என்பதால் அது ஓகேதான்.
தவிர, அப்படி பெண்கள் சின்ன விஷயம் என்று நினைத்துக் குடிக்க ஆரம்பித்து எல்லா சிக்கல்களுக்கும் ஆளாவது, ஏதாவது வகையில் நடந்துகொண்டே இருப்பதால் அதை ஏற்கலாம்.
கர்ப்பம் ஆகி லாக்டவுன் வந்து அவளும் தோழியும் படும் சிரமங்கள் என்ற அந்த கதைப்போக்கு தான் இந்தப் படத்தின் ஜீவாதாரம். பிரமாதமாக எழுதி இருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா.
அதுவும் போகப்போக அந்த டென்ஷன் ஏறிக்கொண்டே போகும் விதமும் சபாஷ் போட வைக்கிறது.

முக்கியமாக அப்படி ரகசியகமாக கருக் கலைக்க பெண்கள் மட்டும் போனால் அவர்கள் சந்திக்க வேண்டிய மனிதர்கள் அவர்களது கொடூர முகங்கள் என்று அந்தப் பகுதி மிரள வைக்கிறது.
கருக்கலைக்கும் உத்திகள், மருந்துகள் என்று நன்றாக ஹோம் ஒர்க் செய்து இறங்கி அடித்து இருக்கிறார்கள் அருமை.
மிகச் சிறப்பாக இயக்கி பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா.
நாயகி கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். உதாரணமாக கர்ப்பம் என்று தெரிந்ததும் அது குடும்பத்துக்கு தெரியாமல் இருக்க அவர் பதறும் விதமும் அந்த வயிற்றைப் படுத்தும் பாடும் அபாரம்.
அந்த தோழி கேரக்டர் அருமையாக எழுதப்பட்டுள்ளது. ஆகச் சிறந்த கேரக்டர் அது. தோழியாக நடித்துள்ள பிரியா வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார்.
சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், ரேவதி பாட்டி என்று எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். சக்திவேலின் ஒளிப்பதிவு படத்துக்கான மூடை அழகாக செட் செய்கிறது.
என்.ஆர்.ரகுநாதன், சித்தார்த் விபின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் தேவையில்லாமல் வருவதால் அவை மோசமில்லை என்றாலும் மனம் கவரவில்லை.
பாடல்கள் விஷயத்தில் ஏற்படும் பலவீனம் படத் தொகுப்பிற்கு ஒரு குறை தான் என்றாலும் மற்றபடி காட்சிகளைப் பரபரப்பாக தொகுத்து அசத்துகிறார் எடிட்டர் சாபு ஜோசப்.

கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகி வந்திருக்கும் பெண்ணிடம் – அதுவும் படத்தின் கதாநாயகி வேறு.
ஒரு டாக்டரே, “எல்லாம் சரி.. பாதுகாப்பா இருக்கணும் ன்னு கூடவா தெரியாது?” என்று கேட்பது, இந்தப் படத்தின் நோக்கத்துக்கு நேர்மாறானது தூக்கி எறியப்பட வேண்டிய வசனம் அது.
இந்தப் படத்துக்கு இன்னும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கலாம். அனால், அவர்கள் யதார்த்தத்தின் வழியில் உறுதியாக நின்று படத்தை வளர்த்திருப்பது நன்றாகவே இருக்கிறது.
பிரச்னையின் தீவிரம் தானாகவே சுவாரசியம் ஆகி விடுகிறது.
குழந்தை ஒரு குறிப்பிட்ட கால அளவு வயிற்றுக்குள் வளர்ந்தால் அப்புறம் கலைக்க முடியாது என்பது மட்டுமல்ல…
ஓரளவுக்கு மேல் வளர்ந்த பிறகு கருக்கலைப்பு செய்தால், உயிர் பிழைத்தாலும் அப்புறம் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லை என்ற உண்மையையும் அழுத்தமாக சொல்லி, பயத்துக்கு இன்னொரு எக்ஸ்ட்ரா கோட்டிங் அடித்து இருக்கலாம்.
மொத்தத்தில் ‘லாக் டவுன்’ – எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
கல்லூரிப் படிப்பு முடிந்து சுயமாகப் பறக்க நினைக்கும் இளைய தலைமுறை, முக்கியமாகப் பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
– சு.செந்தில் குமரன்