ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பிரம்மாண்டமான அரங்கில், என் இடப்புறம் சிவாஜி அவர்களும், வலப்புறம் திரு.துளசி வாண்டையார் அவர்களும் அமர்ந்திருக்க நான் கவியரங்கத்தைத் தொடங்கினேன்.
என் தலைமைக் கவிதை இதுதான்.
‘ஓ !
அர்த்தமுள்ள நடிகனே!
அவதார புருஷனே!
நீ
அஜந்தா எல்லோரா போல்-
அபூர்வமானவன்.
நீ-
பெரியாருக்குப்
பிரியமானவன்;
இருப்பினும்-
பெருமாள்தான்
உன்னைப்-
பெரும் ஆள் ஆக்கினார்.
நாங்களெல்லாம்-
பிறந்ததால் நடிக்கிறோம்;
நீ-
நடிக்கவே பிறந்தவன்.
உன்-
நிஜத்தில் நடிப்பில்லை;
உன்-
நடிப்பில் நிஜமிருக்கிறது.
நீ-
அழுதாலும், சிரித்தாலும்
மெய்யென எண்ணுகிறோம்;
காரணம்-
அதில் உயிர் இருக்கிறது;
ஆயினும்-
நீ
அக்கான்னா போல்
தனித்து நிற்கும்
அற்புதக் கலைஞன்!
பால்ய வயதில்
கல்வி கற்க
வாய்ப்பில்லாத நீ-
பிறகு ஒரு
கல்லூரியாகவே
மாறியிருக்கிறாய்!
அன்று நீ-
நாடகத்திலிருந்து
வந்திருக்கலாம்;
இன்று-
உன்னிடமிருந்துதான்
நாடகங்கள்
உற்பத்தியாகின்றன.
உன்
விழிகளைக் காட்டிலும்
அதிக
மொழிகள் தெரிந்தவன்
மாநிலத்தில் இல்லை!’
– இப்படி சிவாஜியைப் பற்றி எவ்வளவோ பாடினேன்.
அப்போது சிவாஜி, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்தபோதும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கும் அவருக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.
அதை பற்றி கீழ்க்கண்டவாறு பாடினேன்.
‘பதவி பழம் வேண்டி
பாரெல்லாம் சுற்றிய
பழனியாண்டி அல்ல நீ;
அன்னையை மட்டுமே
வலம் வந்து
அருட்கனி வாங்கிய
கணேசன்!’
– இப்படி நான் பாடியவுடன் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே, கூட்டத்திலிருந்து ஒரு நடுவயதுப் பெண்மணி மேடைக்கு ஓடி வந்தார்.
முற்றிலும் யாரும் எதிர்பாராத வண்ணம், அந்தப் பெண்மணி ஒரு சிறிய பேனாக் கத்தியால் தன் இடது கையைக் கீறி, அதில் வெளிப்போந்த உதிரத்தை வழித்தெடுத்து சிவாஜியின் நெற்றியில் திலகமிட்டார்.
‘ரத்தத் திலக’த்தில் நடித்த நடிகனின் நெற்றியில் ரத்தத் திலகம் இடப்பெற்று, உதிரம் சிவாஜியின் நீண்ட நாசி வழியே வழிந்தது.
– வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ நூலிலிருந்து…