பாடகி ஸ்வர்ணலதாவை மிக அற்புதமாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் சிற்பிக்கு தனி இடம் உண்டு.
சட்டென்று சொன்னால் இந்த அரிய பாட்டு,
“கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
நினைவில் தோன்றியது”
நினைவில் தோன்றியது”
“இன்னும் அன்புள்ள மன்னவனே” (மேட்டுக்குடி), “புது ரோஜா பூத்திருக்கு” (கோகுலம்), “செட்டப்ப மாத்தி” (சுந்தர புருஷன்) என்று நீளும்.
சிற்பியை இசையமைப்பாளராக அடையப்படுத்திய ‘செண்பகத் தோட்டம்’ தந்த
“முத்து முத்து பூமாலை” – தொட்டு இந்த ராசி தொடர்ந்தது.
ஸ்வர்ணலதா என்றில்லை, ‘மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு’ பாடலை, வந்த காலத்தில் இருந்து கேட்கிறேன்.
அந்த ‘ஐயாக்கண்ணு ஐயாக்கண்ணு’ என்ற சுஜாதா குழையலோடு அசலில் மீனாவே பாடுவது போலக் கொஞ்சலாக இருக்கும்.
அப்படிப் பொருத்தமான பாடகரின் குரலைத் தேர்ந்தெடுப்பதும் கலை.
அது போலவே சித்ராவுக்கும்.
‘கேப்டன்’ படம் வரப் போகிறது என்றபோது அந்த நேரம் இசை ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு. அதை ஈடுகட்ட ஒரு பாட்டு வந்தது.
நான் நினைக்கிறேன் எமது வானொலிக் கலையகத்தில் குறு இசைத்தட்டு தேயத் தேய நான் போட்ட பாட்டுகளில் ஒன்று அதுவாகத் தானிருக்கும்.
அது,
“கன்னத்துல… வை ….
ஆ… வைரமணி மின்ன மின்ன”
இந்தப் பாட்டு குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைக் காலம் கடந்து, ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சிற்பி சார் சொன்னபோது வியந்து ரசித்தது.
அந்த “கன்னத்துல வை…”
– என்று பிரித்து ஒரு சிறு அமைதிக்குப் பின் மீள ஆரம்பிக்குமாறு ஆலோசனை சொன்னது சாட்சாத் சூப்பர் குட்ஸ் செளத்ரி தானாம்.
தொடர் வெற்றி படைத்த வணிகர் என்ற நினைப்பைப் பொய்யாக்கி ரசிகன்டா என்று மனசில் கூவினேன் அப்போது.
இந்தப் பிரித்துக் கொடுத்த வித்தை தான் பாடலை இன்னும் புதுமையாகக் காட்டியது.
இன்னொரு விஷயம். முதலில் இந்தப் பாட்டுக்காக அமைத்த பல்லவியை எஸ்பிபி பாட மாட்டேன் என்றாராம். பிறகு மாற்றி வந்ததில் தான் இப்படியொரு ஜாலம்.
கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் என்று இரட்டை மொழிகளில் ஆர்.பி.செளத்ரி எடுத்த முதல் பிரமாண்டமான படம் ‘கேப்டன்’ .
‘நாட்டாமை’ எல்லாம் எடுத்த பின் தான் பிரமாண்டம் ஆனது. படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் பாடல்களில் சிற்பி சார் அதகளம் பண்ணியிருப்பார்.
90-களில் ரஹ்மான் பாசறை வழி சாகுல் ஹமீது மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் ஆகிய இரண்டு பாட்டுக் குரல்களில் ரசிகர்கள் மோகித்துக் கிடந்த சூழலில், இங்கும் “இடுப்பு அடிக்கடி”, “உனக்கு ஒரு மச்சம்” என்று இருவருக்கும் தலா ஒரு பாட்டு.
சுரேஷ் பீட்டர்ஸ்-ற்கு “செட்டப்ப மாத்தி” போல “உனக்கு ஒரு மச்சம்” பின்னிப் பெடலெடுக்கும் பாட்டு. சாகுல் ஹமீதுக்கு எது அளவோ அப்படியான ர(ரா)கம் “இடுப்பு அடிக்கடி”.
ஒரு நல்ல இசையமைப்பாளர் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு அழகான இசை முத்திரையைப் பதித்து விடுவார். அது காலம் கடந்தும் நேசிக்க வைக்கும்.
அப்படியொரு பாட்டுத்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா பாடிய
“கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ”
அந்த “வார்த்தை” என்று ஸ்வர்ணம் பூரிக்கும் போது டிஸ்கவரி சேனலில் பூ விரியும் காட்சியை ஒளித்து வைத்த கேமராவால் எடுத்ததைப் பார்க்கும் அழகு.
எஸ்பிபி & ஸ்வர்ணலதா கூட்டணியில் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத பாட்டு.
– கானா பிரபா