Take a fresh look at your lifestyle.

‘சிரித்து வாழ வேண்டும்’: எம்.ஜி.ஆர். புகுத்திய புதுமைகள்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கி நாயகனாக நடித்து 1973 ஆம் ஆண்டு வெளியாகி, அன்று வரைக்குமான தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப உச்சம் மற்றும் வரலாற்றைப் புரட்டிப் போட்ட வெற்றியைப் பெற்ற படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

அதில் புலவர் புலமைப் பித்தன் எழுதிய ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடல், எம்.ஜி.ஆர். பாணியில் குழந்தைகளுக்கு நல்லறிவுரை கூறும் பாடலாக புகழ் பெற்றது. (படத்தில் அத்தனைப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்!)

அந்த ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடலின் முதல் அடியைப் படத்தின் பெயராகக் கொண்டு 1974, நவம்பர் 30 ஆம் தேதி எம்.ஜி.ஆர். இரு வேடத்தில் நாயகனாக நடிக்க, லதா, நம்பியார், காஞ்சனா நடிப்பில் வந்த படம் ‘சிரித்து வாழ வேண்டும்’.

ஐம்பத்தி ஒரு ஆண்டுகள் கடந்து இன்றும் பல காரணங்களுக்காக பாராட்டப்படும் படம் இது.

1967 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான இத்தாலியப் படம் Death Rides a Horse.

Giulio Petroni என்பவர் இயக்கத்தில், Luciano Vincenzoni என்பவர் எழுத்தில் Lee Van Cleef மற்றும் John Phillip Law ஆகியோரின் நடிப்பில் வந்த அந்தப் படம் அது.

இந்தப் படத்தின் அடிப்படையில் அமிதாப் பச்சன், பிரான், ஜெயபாதுரி நடிப்பில் சலீம் ஜாவேத் எழுத்தில் பிரகாஷ் மெஹ்ரா தயாரித்து, இயக்கி 1973 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி வெளிவந்த இந்திப் படம் ஜன்ஜீர். சூப்பர் ஹிட் படம் இது.

மேலே சொன்ன இரண்டு படங்களின் அடிப்படையில் ஜன்ஜீர் படத்தை உரிமம் பெற்று தமிழில் வந்த படம் ‘சிரித்து வாழ வேண்டும்’.

படத்தை இயக்கியவர் பாலு என்கிற எஸ்.எஸ். பாலன். அமரர் எஸ்.எஸ்.வாசனின் மகன்.

தந்தைக்கு அடுத்து ஆனந்த விகடன் ஆசிரியராக வந்து ஜுனியர் விகடனை உருவாக்கி விகடன் குழுமத்தை மிக மிகப் பிரபலமாக்கியவர்.

Gharana என்ற இந்திப் படத்தில் கதாசிரியராக அறிமுகமாகி, நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ என்ற சிறப்பான படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அவ்ரத் என்ற இந்திப் படத்தின் மூலம் தயாரிப்பாளரானவர் பாலன்.

ஹிந்தி, தமிழ், பெங்காலி மொழிகளில் ஆறு படங்களைத் தயாரித்தவர். மேற்சொன்ன மொழிகளோடு தெலுங்கிலும் சேர்த்து ஏழு படங்களுக்கு எழுதியவர். இந்த நான்கு மொழிகளிலும் பத்துப் படங்களை இயக்கியவர்.

ஆனால், ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைத் தயாரித்தது வித்வான் வே.லட்சுமணன் மற்றும் இதயம் பேசுகிறது மணியன் ஆகியோர்.

எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய ‘நாடோடி மன்னன்’ படம் முதல் கொண்டு அவரது எல்லா தயாரிப்புகளிலும் கதை விவாதத்தில் முக்கிய பங்காற்றியவர் லட்சுமணன்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை அயல் நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்தபோது அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மணியன்.

இருவரையும் சேர்த்து உதயம் புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துக் கொடுத்து கால்ஷீட் கொடுத்தார் எம்.ஜி.ஆர். முதல் படம் இதயவீணை. மூன்றாவது படம் பல்லாண்டு வாழ்க. ‘சிரித்து வாழ வேண்டும்’ இரண்டாவது படம்.

போலி மருந்துக்கு கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் மகள் அந்த போலி மருந்துக்கே இரையாகிறாள்.

பிள்ளையை இழந்த தகப்பன், போலி மருந்து தயாரிக்கும் முதலாளிக்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராகிறான்.

விஷயம் அறிந்த கம்பெனி முதலாளி ஒரு தீபாவளி நாளில் ஊழியரின் வீட்டுக்குள் நுழைந்து அவரையும் அவர் மனைவியையும் சுட்டுக் கொள்கிறான்.

பெற்றோர் சுட்டுக் கொல்லப்படுவதை ஒளிந்திருந்து பார்க்கும் மகனான சிறுவனுக்கு, கொலைகாரனின் முகம் தெரியவில்லை.

ஆனால், கொலைகாரனின் துப்பாக்கி ஏந்திய கையின் மணிக்கட்டில் தொங்கும் ஒரு வெள்ளை நிறக் குதிரை பொம்மை மட்டும் தெரிகிறது.

போலீஸ் அதிகாரியால் வளர்க்கப்படும் அவனுக்கு, புகை மண்டலப் பின்னணியில் ஒரு வெள்ளைக் குதிரையில் கருப்பு நிறத்தில் ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் உடை மற்றும் கவசங்கள் அணிந்து வர, குதிரை முன் கால்களை உயர்த்தி எம்பிக் கனைக்கும் கனவு ஒன்று அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது.

வளர்ந்து போலீஸ் அதிகாரியான பின்னரும் அந்தக் கனவு வர, அவர் என்ன செய்தார் என்பதே கதை.

இந்தப் படத்தின் மூலமான இந்திப் படத்தில், அமிதாப் பச்சன் – விஜய் கண்ணா என்ற போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் பிரான் – ஷேர்கான் என்ற இஸ்லாமியராகவும் நடித்தனர்.

தமிழில் இரண்டு கேரக்டர்களிலும் எம்.ஜி.ஆரே நடித்தார். இஸ்லாமியர் கேரக்டருக்கு தனது நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல் ரகுமான் பெயரை வைத்தார்.

புலமைப் பித்தன் எழுதிய ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம்’ பாடலும் அதில் எம்.ஜி.ஆரின் நடிப்பும் கொண்டாடப்பட்டது.

தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளும் அப்துல் ரகுமான், “மாளிகை வாசம் இல்லை. மங்கையின் நேசமில்லை. மதுவின் மேல் பாசமில்லை.” என்று கூறும் வசனம் அபாரமானது.

ஜெமினி ஸ்டுடியோவில் நடைபெற்ற பட ஆரம்ப விழாவில், சிலேடை மன்னர் என்று அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர், கவிஞர், எழுத்தாளர் கி.வா. ஜகந்நாதன் குத்து விளக்கேற்ற, பிரபல தயாரிப்பளார், இயக்குநர், ஸ்டுடியோ அதிபர் எல்.வி.பிரசாத் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

படத்தில் இடம்பெற்ற “கொஞ்ச நேரம்” என்ற பாடல் முதன் முதலாக படமாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் பட்டப் பெயரான பொன்மனச் செம்மல் என்பதை வைத்து வாலி எழுதிய ”பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ” என்ற பாடல், அன்றைய நிலையில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டதை குறி வைத்து காதல் பாட்டில் கொண்டு வரப்பட்ட வரிகள். அது அன்று மிகவும் பாராட்டப்பட்டது

படத்தில், இன்ஸ்பெக்டராக எம்.ஜி.ஆர்.  மஃப்டியில் வரும் காட்சிகளில் எல்லாம் கழுத்தில் ஒரு மஃப்ளரும் டையும் கலந்த மாதிரி கட்டிய ஒரு ஸ்டைலில் வருவார். அப்போது அது கொண்டாடப்பட்டது.

இதைத்தான் பாக்யராஜ் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பின்பற்றினார்.

படத்தின் வசனங்கள் பல நவீனமாக – ரகளையாக இருக்கும்.

“இவன் ஏன் இப்படி பேசிட்டுப் போறான்? சூடா ஒரு டம்ளர் ஞானப்பால் குடிச்சிருப்பானோ?”

“சரக்கு அடிக்க ஆண், பெண் பேதம் இல்லை, ஆனந்தம் எல்லோருக்கும் சொந்தம்”

“பத்தினிகள் ஆண்களிலும் உண்டு. ராமு அதில் ஒருவன்”

“இரண்டு அறிவாளிகள் ஒரே இடத்தில் இருந்தா அங்கே வேலை நடக்காது, விவாதம் தான் நடக்கும். அதனால அவரை நான் கொன்னுட்டேன்”

“சபாஷ் மிஸ்! குடியும் குடித்தனுமுமா வாழ்றீங்க”

”மனுஷன் தூங்கலாம், மனசாட்சி தூங்கக் கூடாது”

“பாஸ்… சாரி… அந்தப் பொண்ணு இப்படி ஏமாற்றுவாள்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” –  “ஏமாற்றுபவள் விரைவில் எதிர்பாருங்கள், நான் ஏமாற்றப் போகிறேன்னு போஸ்டர் ஒட்டி அறிவிச்சுட்டா ஏமாற்றுவா?”

“எதுவரை படிச்சிருக்கே?” – “எழுத்துக்கூட்டி படிப்பேன், பொள்ளாச்சினு இருந்தா பிள்ளைத்தாய்ச்சினு படிப்பேன்”

“ஒரு கசப்பான அனுபவம் 1000 புத்தகங்கள் படித்ததற்கு சமம்”.

“நிமிர்ந்து நின்று எதிர்க்க முடியலைனு தெரிஞ்சதும் வளையப் பார்க்கறியா? அதிகமா வளையற வில்லும், அதிகமா வளையும் மனிதனும் ஆபத்துக்கு அறிகுறிகள்”

“நீதிக்காகப் போராடுபவன் தனியா இருந்தாலும் அவனுக்கு 1000 பேர் பலம் வந்து விடும்”

– இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

படத்தில் வில்லனான நம்பியார் பெயர் நாகராஜன்.

நாகராஜுக்கு ஒரு பெண் மசாஜ் செய்து கொண்டு இருப்பாள். அப்போது ஒருவர் வந்து இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். பற்றி சொல்லி விட்டு கவனமா இருங்க என்பார்.

சரி என்று நம்பியார் சொல்ல, அவர் போக, நம்பியாருக்கு மசாஜ் செய்யும் ஒரு பெண் சட்டென்று நம்பியாரிடம், எம்.ஜி.ஆர். பற்றி, “ஆ யாள் ஒரி நாகமானு” என்பார்.

உடனே நம்பியார் “ஞான் நாக ராஜனானு…” என்று சொல்வது அசத்தலாக இருக்கும்.

எஸ்.எஸ். பாலனின் சிறு வயதுக் காலம் முதலான நெருங்கிய நண்பரான அண்ணி சேது என்பவர் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து இருப்பார்,

படத்தின் கிளைமாக்சில் வரும் “உலகம் எனும் நாடக மேடையில் நான் ஒரு நடிகன்; உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்” என்ற பாடல் எம்.ஜி.ஆர். தன்னைப் பற்றி கூறும் பாடலாகவே பொருள்படும்.

அதில் வரும், “சிலர் ஆடிடும் ஆட்டத்தை முடிக்கவே, நான் ஆடியும் பாடியும் நடிப்பது…” என்ற வரிகள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு கட்சி ஆரம்பித்த பின்னும் நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக அமைந்தது.

டெக்னிக்கலாகவும் அந்த பாட்டு ஒரு மைல்கல்.

இஸ்லாமியரான எம்.ஜி.ஆர். வில்லன்கள் இருக்கும் இடத்தில் கோரஸ் குரல்களோடு டி.எம்.எஸ். சவுந்திரராஜனின் உச்சஸ்தாயி குரலில் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருப்பார்.

இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். தனியாக ஒரு ரகசிய இடத்தில் சில் வண்டுகள் சத்தம் மட்டும் லைட்டாகக் கேட்கும் கனத்த அமைதியான இருளில் சற்றும் ஒலி எழுப்பாமல் பூனை போல் நடந்து ஆதாரங்களைத் தேடுவார்.

அந்த சத்தமும் இந்த அமைதியும் மாறி மாறி வரும் காட்சியில் ரசிகர்கள் காதில் ஆரவார இசைப் பாடல், பின்டிராப் சைலன்ஸ இரண்டும் மாறி மாறி விழும்.

அன்றைய ரசிகர்களுக்கு விவரிக்க முடியாத அனுபவம் அது.

சவுண்ட் எடிட்டிங்கில் அதற்கு முன் எந்தப் படமும் அப்படி ஒரு அற்புதம் நிகழ்த்தியது இல்லை.

– சு. செந்தில் குமரன்