Take a fresh look at your lifestyle.

கமல் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்!

கோடம்பாக்கத்தில் 2024 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனின் ஆண்டாக இருக்கப்போகிறது. அடுத்தடுத்து அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

முதல் படம் ‘இந்தியன்-2’. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹீரோவாக நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், இது.

2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு 2019 ஆம் ஆண்டு ‘இந்தியன் – 2 ‘ ஷுட்டிங் தொடங்கியது. மேக்கப்பில் கமலுக்கு திருப்தி இன்மை, கொரோனா,  நிதி நெருக்கடி, போரூர் விபத்து என நிகழ்ந்த தொடர் சிக்கல்களால் படம் தாமதமாகிக்கொண்டே வந்தது.

அத்தனை தடைகளையும் தாண்டி, படப்பிடிப்பு முழுதாக முடிந்து விட்டது. டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் முழு மூச்சாக நடந்து வருகிறது. பொங்கலில் ரிலீஸ் ஆகிறது.

இதனை தொடர்ந்து அவர், ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க உள்ளார். ஒன்று, தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, எச். வினோத் இயக்கும் படம். அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2829 ஏடி’.

இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் ஷுட்டிங் தொடங்கி விட்டது. பிரபாஸ்,  அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிடோர் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

கமல்ஹாசன், வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்து விட்டு மணிரத்னம் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க உள்ளார், கமல்ஹாசன்.

மணிரத்னத்தின் சொந்த படநிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் ஆகிய மூன்று பிரமாண்ட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

கமல் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தின் புரோமா வீடியோவுக்கான ஷுட்டிங் சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது.

இந்த வீடியோ கமல் பிறந்த தினமான வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.

எச். வினோத் இயக்க, கமல் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக வீடியோவும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.

கமலின் 2 புதிய படங்களின் தோற்றத்தை காண அவரது ரசிகர்கள், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.