Take a fresh look at your lifestyle.

கே.பாலசந்தரை ஈர்த்த தேங்காய் சீனிவாசன்!

தான் அறிமுகப்படுத்தும் நடிகர்களிடம் தனித்துவமான நடிப்பு பாணி இருந்தால் அதில் குறுக்கீடு செய்ய விரும்பாதவர் கே.பாலசந்தர்.

ஆனால், ‘வசன உச்சரிப்பு’ என்று வரும்போது அத்தனை நடிகர்களை ஒரு குறிப்பிட்ட தோரணைக்குள் இழுத்துப் பிடித்து அடக்கிவிடுவார்.

அவரது கதாபாத்திரங்களின் உரையாடலில் இயக்குநர் கே.பி.யின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஆனால், தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் அதில் விதிவிலக்குக் கொடுத்ததை ‘தில்லுமுல்லு’ படத்தின் நினைவலைகளில் பதிந்து சென்றிருக்கிறார்.

அந்தப் படத்தில் கண்டிப்பான, பக்திச் சிரத்தை கொண்ட, ஏமாளி முதலாளியாக வந்து, நடிப்பு ராட்சசியான சௌகார் ஜானகியையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் தேங்காய் சீனிவாசன்.

“தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் வசன மாடுலேஷனை நான் மாற்ற விரும்பல. அந்தக் கேரக்டரை அவரோட பாணியிலேயே செய்யணும்னு விரும்பினேன்.

கதாபாத்திரத்தை விளக்கிச் சொல்லிட்டு, வர்ற ஒவ்வொரு காட்சியையும் உன்னோட ஸ்டைல்லயே போயிடுப்பா அது இந்தப் படத்துக்கு வேணும்னு கேட்டு வாங்கினேன்.

அவரோட தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு, கண்களை, உதடுகளை, புருவங்களை அவர் பயன்படுத்துவதில் வசனத்தின் வீச்சு இன்னும் வேகமாகத் தாக்கும்.

படப்பிடிப்பில அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிச்சவன் நான். அது மட்டுமில்ல; எல்லா வேடங்களுக்கும் பொருந்திவிடக் கூடிய ஒரு உடலமைப்பும் உடல்மொழியும் தோற்றமும் தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு வரப்பிரசாதம். சில சமயம் மிகை நடிப்புபோல தோணும்.

ஆனால், உணர்ச்சிய அவர் சரியான இடத்தில் சமப்படுத்தி, தேவைப்படும் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமும் மென்மையும் அந்த எண்ணத்தை அடுத்த நொடியே இல்லாம ஆக்கிடும். அதுதான் சீனுவோட மேஜிக்.

அவருடன் இன்னும் பல படங்களில் வேலை செய்ய விரும்பியவன். காலம் அனுமதிக்கல. 50 வயசுல குட் பை சொல்லிட்டான்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.

– ஆர்.சி. ஜெயந்தன்

நன்றி : இந்து தமிழ் திசை இதழ்