‘நான் ஈ’ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டிலும் கதாநாயகனாக அறியப்பட்ட நடிகராக இருக்கும் நானி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் வாங்கிய முதல் சம்பளத்தைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நேர்காணலில் பகிர்ந்த நானி, ”முதன் முதலில் சினிமாத் துறையில் உதவி இயக்குநராக என் பயணம் தொடங்கியது. அப்போது நான் வாங்கிய முதல் சம்பளம் 4 ஆயிரம் ரூபாய். அது எனக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டது.
அதனை என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு பைக்கில் சென்றேன். அப்போது பாதி ஐதராபாத்தை வாங்கிவிடும் அளவிற்கு நான் பணக்காரனாக உணர்ந்தேன்.
அதன்பிறகு என்னுடைய வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்த போதிலும், அந்த 4 ஆயிரம் ரூபாய் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எந்தப் பணமும் ஈடாகவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.