Take a fresh look at your lifestyle.

பெரிய உயரத்தையும் உச்சக்கட்ட சரிவையும் சந்தித்து விட்டேன்!

மனம் திறந்த நடிகர் நகுல்.

நடிகர் நகுலின் நேர்காணலில் இருந்து ஒரு பகுதி…

சினிமாவுக்கு வந்தது திட்டமிட்டா? எதேச்சையாகவா?

என் அண்ணனை சினிமாவில் நடிக்க வைக்க அம்மா மிகவும் ஆசைப்பட்டார். ஷங்கர் சார் பாய்ஸ் படத்துக்காக ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த சமயம், என் அம்மா அவருக்கு எங்கள் குடும்ப புகைப்படத்தை அனுப்ப, எதிர்ப்பாராத விதமாக எனக்கு அழைப்பு வந்தது.

போய் கலந்துகொண்டேன். தேர்வானேன், காலம் எதேச்சையாக சினிமாவுக்கு என்னை அழைத்து வந்துவிட்டது.

சினிமா பின்னணி கொண்ட நடிகர்கள் / விமர்சிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. எல்லோருக்கும் விளக்கமும் தரமுடியாது. என்னதான் என் அக்கா (தேவயானி) நடிகையாக இருந்தாலும், எனக்காக சிபாரிசு செய்ததே இல்லை. குறையாக சொல்லவில்லை. நானாக முன்னேற வேண்டும் என்று நினைப்பவர் அவர். சொந்த முயற்சியில் வந்தவன் நான்.

சினிமாவை விட்டு ஒதுங்க / நினைத்தீர்களாமே…

‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் சும்மா போய்விட்டது. நான் நினைக்கும்படியான கதைகள் எனக்கு வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் ‘போதும்’ என்று வாழ்க்கையை வெறுத்துவிட்டேன்.

சினிமாவில் தான் சாதிக்க முடியவில்லை, நாட்டுக்காக எதையாவது செய்யலாமே என்று ராணுவத்தில் சேர பயிற்சி எடுத்தேன். உடலை தயார்படுத்தினேன். அந்தச் சமயம் தான் ‘காதலில் விழுந்தேன்’ பட வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

திடீர் ராணுவ மோகம் ஏன்?

சிறுவயதில் பைலட் ஆக வேண்டும் என்று நினைத்தேன். படிப்பு ஏறவில்லை. பின்னர் ராணுவத்தில் சேரவேண்டும் என்று கனவு கண்டேன். நான் மிகவும் தேசப்பற்றுக் கொண்ட நபர். என் மாமா விவேக், ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னலாக இருந்திருக்கிறார். அவரை பார்த்து, நாட்டுக்காக சேவையாற்றும் எண்ணம் இருந்தது.

வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்?

என் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தையும் எட்டிவிட்டேன். உச்சக்கட்ட சரிவையும் சந்தித்து விட்டேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடந்தே தீரும். என்னைப் பொறுத்தவரையில், எல்லாமே எனக்கான பாடம். அனுபவமே என்னைத் தேற்றி வைத்திருக்கிறது.

எதிர்காலத்தை பற்றி…

சினிமாவில் நாளை என்ன நடக்கும்? என்பது யாருக்குமே தெரியாது. எனவே எது செய்தாலும், அதை முழுமையாக, சிறப்பாக செய்யவேண்டும். நம்பியவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டும். எதிர்காலத்தை நினைத்து நினைத்து நிகழ்காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நிகழ்காலத்தை ரசித்து வாழ்கிறேன்.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

ராணுவ வீரராக நடிக்க ஆசைப்படுகிறேன். ‘குருதிப்புனல்’ கமல்ஹாசன் போல நடிக்க வேண்டும். பார்க்கலாம்.

உங்கள் வாழ்க்கையை மாற்றிய விஷயம்?

கல்லூரி வாழ்க்கையில் எனக்கும் காதல் இருந்தது. அவரது பெயரை சொல்லமாட்டேன். அந்த காதல் இன்றளவும் என் மனதில் மரியாதையாக இருக்கிறது.

அந்தக் காதல் என்னை மாற்றியது. என்னை பாட, நடனமாட வைத்தது. அந்தப் பெண் கொடுத்த ஊக்கமே, என்னை உந்தி தள்ளியது. காதல் கைகூடாதது முடிந்த கதை.

ஆனால் அவரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். நானும் அப்படியே இருக்கிறேன்.

இந்தக் காலத்தில் என்ன “செய்தீர்கள்?

‘செய்’ படத்துக்கு பிறகு நல்லக் கதைக்காக காத்திருந்த நேரத்தில், கொரோனா வந்துவிட்டது. இதனால் சினிமா மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது.

அந்த இடைவெளியில் எனது குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொண்டேன். அவர்களுக்காக நேரத்தை முழுவதுமாக செலவிட்டேன். அந்தச் சமயத்தில் எனது மனைவி கர்ப்பமாக இருந்தார். அதனால் எனது நேரத்தை குடும்பத்துக்காக செலவிட முடிந்தது. ‘படங்கள் நடிக்க வில்லையே’ என்று வருத்தப்படவில்லை.

குடும்பம் பற்றி சொல்லுங்க…

என் மனைவி ஷ்ருதி. மகன் அகிரா, மகள் அமோர். அழகான குடும்பம். ஆனந்தமான வாழ்க்கை.

நன்றி: தினந்தந்தி.

#நடிகர்_நகுல் #Actor_Nakul #சினிமா #Cinema #நடிப்பு #Acting #பாய்ஸ் #Boys #காதலில்_விழுந்தேன் #Kadhalil_Vizhunthen #ராணுவம் #Army #வாழ்க்கை #Life #குடும்பம் #Family