Take a fresh look at your lifestyle.

இதயம் தொட்டதா? அதர்வாவின் ‘இதயம் முரளி’!

அதர்வா, பகத் பாசில், கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், நட்டி நடராஜ், தமன், ரக்ஷன் நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம்.

1991-ம் ஆண்டு கதிர் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இதயம் படத்தில், நேசித்த பெண்ணிடம் காதலைச் சொல்ல முடியாமல் போன ராஜா கதாபாத்திரதத்தைப் போன்ற மனநிலை கொண்டவன் இந்தப் படத்தின் நாயகன் அந்தப் படத்தில் ராஜாவாக நடித்த முரளியின் பெயர்தான் இவனுக்கு. இதயம் முரளி (முரளியின் மகன் அதர்வா)!

அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் நீண்ட விமானப் பயண விமானத்தில் இதயம் முரளியும் அவனது நண்பர்களும் (தமன், ரக்ஷன் உள்ளிட்டோர்), சூர்யா என்ற பிசினஸ்மேனிடம் (பஹத் பாசில்), தயக்கத்தாலேயே நிறைவேறாமல் போன இதயம் முரளியின் பல காதல் கதைகளைச் சொல்கிறார்கள்.

பிளாஷ்பேக்கில் மேற்படி நண்பர்களோடு பள்ளி மாணவனாக இருக்கும் இதயம் முரளிக்கு டீச்சர் (ஜோனிட்டா) மீது ஈர்ப்பு. அதை சொல்ல முடியாதுதான். பரவாயில்லை. சிறுவனாக இருக்கும்போது சக சிறுமி மீது வந்த காதலையும் சொல்ல முடியவில்லை.

அதன் பின்னர் டீன் ஏஜ் வயதில் உடன் படித்த ஒரு பெண்ணை (பிரீத்தி முகுந்தன்) காதலிக்கிறான். ஒன்றாக டியூஷன் படிக்கிறார்கள். சேர்ந்து பானி பூரி சாப்பிடுகிறார்கள். அந்தக் காதலையும் தயக்கம் காரணமாகவே சொல்லாமல் விட்டு விடுகிறான்.

அதன் பின்னர் இளைஞனாக ஆன பின்னர் அமுதா (கயாடு லோஹர்) என்ற பெண்ணைத் தீவிரமாக காதலிக்கிறான். இதையாவது சொல்வான் என்று பார்த்தால், இதயம் படத்து நாயகன் முரளி மாதிரி, ரயில்வே ஸ்டேஷனில் வைத்து கடைசிவரை சொல்லாமலேயே அவளை அனுப்பி விடுகிறான்.

இதற்குள் அவன் நண்பர்கள் காதல், பிரேக்கப், வேறு பெண்ணோடு கல்யாணம், அந்த கல்யாணத்துக்கு பிரேக்கப் செய்து கொண்ட காதலியே வருவது என்று நியோ நார்மல் லைஃப் வாழ்கிறார்கள்.

ஆனால், இவன் மட்டும் இதயம் முரளி மாதிரியே இருக்கிறான். (ஆனால் இதயம் படம் முரளி ஒரே பெண்ணைத்தான் காதலித்தார். அதனாலதான் அந்தப் படம் கிளாசிக் வரிசைக்குப் போனது)

ஒரு நிலையில் இதயம் முரளிக்கே ரோஷம் வருகிறது. ‘இனி காதலித்தால் காதலை சொல்வது’ என்ற முடிவுக்கு வருகிறான்.

மதுரையில் நடக்கும் நண்பனின் கல்யாணத்தில் டீன் ஏஜ் காலக் காதலியை மீண்டும் சந்திக்கிறான். மீண்டும் அவனுக்கு காதல் வருகிறது. இருவரும் படித்த டியூஷனுக்குப் போய் பார்க்கிறார்கள். பானி பூரி சாப்பிடுகிறார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் வாயைத் திறக்கும் முரளியால் இப்போதும், காதலைச் சொல்ல வாயைத் திறக்க முடியவில்லை. அவள் நாசாவில் வேலை செய்யப் போய்விடுகிறாள்.

அப்பா அம்மா இல்லாத இதயம் முரளியை வளர்த்து ஆளாக்கிய தாய்மாமன் (நட்டி நட்ராஜ்) அவனுக்கு ஒரு பெரிய அரசியல்வாதியின் மகளை (மாளவிகா மோகனன்) திருமணம் செய்து வைக்க, நிச்சயம் செய்கிறார்.

இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக, ரயிலில் அனுப்பி வைத்த காதலியை இதயம் முரளி சந்திக்கிறான். கல்யாணம் நிச்சயமான நிலையில் அவளை பார்த்ததும் முரளி அதிர, அவளோ ”நான் உன்னைக் காதலித்தேன்” என்கிறாள்.

“ஆனாலும் அதை சொல்லாதது எனக்கு இன்னும் வலிக்கிறது. இப்போது எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனாலும் உன்கிட்ட அதை சொல்லணும் போல இருந்தது. இப்பதான் ஃபிரீயா இருக்கு” என்று சொல்லிப் போகிறாள் .

அதனால் உந்தப்பட்ட இதயம் முரளி, நாசாவில் பணியாற்றும் தனது பள்ளிக்காலக் காதலியைப் பார்த்து தான் அவளை ‘காதலித்த விஷயத்தை சொல்லி விட்டு அப்புறம் நிம்மதியாக வந்து கல்யாணம் செய்து கொள்வோம்’ என்று போகிறான்.

ஆனால், அங்கே அவன் சொன்ன சில பொய்கள் நாசா காலத்துக் காதலியைக் காயப்படுத்த, சொல்ல வந்ததை சொல்லாமலே கிளம்புகிறான். ஆனால், மனசுக்குள் ஒரு ரசவாதம் நிகழ்கிறது.

இவ்வளவு கதைகளையும் கேட்ட பிசினஸ் மேன் தெறித்து ஓடுகிறார். ஆனால், அவரது மனைவியான – இதயம் முரளியின் பள்ளி வயசு டீச்சர், தனது மாணவனான இதயம் முரளிக்கு உதவச் சொல்கிறார்.

கல்யாணத்துக்கு வந்து சேரும் மாப்பிள்ளையான இதயம் முரளி கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தாய்மாமனிடம் சொல்ல, நடந்தது என்ன? என்பதே இந்த இதயம் முரளி.

இதயம் படத்தில் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட கதை திரைக்கதை. அதிலும் கல்லூரிக் காதலியை ரயில்வே ஸ்டேஷனில் பிரியும் போது, வின்டேஜ் இதயம் படத்தில் முரளியின் நண்பனாக நடித்த சின்னி ஜெயந்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனாயசமாக கனெக்ட் செய்கிறது

பிரீத்தி முகுந்தனின் இரட்டை வேடமும் அதை வைத்து கிளைமாக்ஸ் சமயத்தில் கொடுக்கும் டுவிஸ்ட்டும் சபாஷ். அந்த கடைசி ஷாட் ரகளை.

படம் முழுக்க அடுத்தடுத்து அழகழகான கதாநாயகிகள் வருவது ஒரு படத்துக்கு ரொம்ப பிளஸ். அதுவும் காதல் நாயகிகள் என்பது அசத்தலாக இருக்கிறது.

தங்கமும் தந்தமும் சேர்ந்த நிறத்தில் இருக்கும் அந்தக் கதாநாயகிகள் படத்தை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்கத்தில் மிதியடி போடும் சுல்தான் வீட்டுக் கல்யாணம் மாதிரி சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு கூட ஒரு கதாநாயகி லெவல் ஆர்ட்டிஸ்ட்டுகளை இறக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க நாசா என்று கதை அவ்வப்போது நிகழும் களமும் பிரம்மாண்டம்.

மனோஜ் பரமஹம்ஸா, சி ஹெச் சாய் ஆகியோரின் ஒளிப்பதிவு அழகியலோடு ஜொலிக்கிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதோடு சிறப்பான பொருத்தமான இசையையும் கொடுத்து இருக்கிறார் தமன்.

கலை இயக்கம், உடைகள் என்று எல்லா வகையிலும் படமும் ரிச் ஆக இருக்கிறது.

பெரிதாக பெர்பார்மன்ஸ் என்று யாரையும் கொண்டாட முடியாது. இது அப்படிப்பட்ட கதையும் அல்ல. எல்லோரும் சிறப்பாகவே நடித்துள்ளார்.

எனினும் பிரீத்தி முகுந்தனுக்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு. சிறப்பாக நடித்துள்ளார். மீண்டும் வரும் காட்சியில் கையோடு லோகரும் நடிப்பில் அசத்துகிறார். வசனம் எழுதிய டிராவிட் செல்வமும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பெரும் குறை அதீத நீளம். முடிப்பேனா என்கிறார்கள்.

இன்னைக்கு எல்லாம் எந்தப் பய இப்படி இருக்கான் என்ற கேள்வி இந்தப் படத்துக்கு பிளஸ் ஆகவும் மாறலாம். மைனஸ் ஆகவும் மாறலாம்.

இந்தப் படத்தை வேறு எப்படி எடுக்கலாம் என்று யோசித்தேன். பழைய இதயம் பட முரளி, இன்றைய இதயம் முரளியின் சித்தப்பா. காதலை சொல்ல முடியாத தவிப்பில் இதயம் பட முரளி செத்தே போகிறார்.

ஒரு பெண் ஆணிடம் காதலை சொன்னால் அவளது கோபத்துக்கு ஆளாகவும் வாய்ப்பு இருந்த காலம் அது. ஆனால், பெண் அப்படி சொன்னால் எந்த ஆணும் கோபப்பட மாட்டான். ஒன்று ஏற்பான் அல்லது மறுப்பான்.

அப்படி இருக்க, “கீதா (ஹீரா நடித்த கதாபாத்திரம்) ஏன் எனது சித்தப்பாவிடம் காதலை சொல்லவில்லை?” என்பது இன்றைய இதயம் முரளியின் கோபம்.

எனவே அவனுக்கு பெண்கள் மீது கோபம்.

எனவே பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அவர்களாகவே தங்கள் காதலை சொல்ல வைப்பது என்ற சவாலில் இறங்குகிறான்.  அதில் கிடைக்கும் வெற்றிகள் அதனால் நடக்கும் ரகளைகள் என்று ஒரு கதை பண்ணி இருந்தால் இன்னும் நன்றாக ஓடுகிற காலமப்பா இது. (காப்புரிமை எனக்கே. யாரும் தொடக் கூடாது).

இன்று நாற்பது பிளஸ் சில் இருப்போருக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தக் கதைக்கு இன்றைக்கு ஆடியன்ஸ் இருக்கிறார்களா என்ற கேள்வி மட்டும் எழுகிறது. அதை சரி செய்யத்தான் படத்தை இளம் அழகிகளால் நிரப்பி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.

அது ஒர்க் அவுட் ஆனால் படம் வெற்றி பெறும். இல்லை என்றால் நல்ல ஓப்பனிங் வந்து அப்படியே, இறங்கி விட வாய்ப்பு உண்டு.

இந்தப் படம் வெற்றி பெற்றால் வின்டேஜ் தன்மை கொண்ட படங்கள் மீண்டும் உருவாகும்.

மொத்தத்தில் இதயம் முரளி … துடிப்பு இருக்கத்தான் செய்கிறது.

– சு.செந்தில் குமரன்