Take a fresh look at your lifestyle.

என் மீது நம்பிக்கையில்லாமல் தான் நடித்தேன்!

‘அக்கா’ தொடர் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம்.

இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள் பவானி.

தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் இதுவரை இல்லாத அளவுக்குச் சோதனைகளை எதிர்கொள்பவள்தான் பவானி.

‘மகாநதி’, ‘சாணி காயிதம்’, ‘தசரா’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இதுவரை முயற்சி செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’அக்கா’ தொடரில் நடிப்பதற்கு முன்பு தன்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என தான் நம்பவில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தலைமுறை தலைமுறையாகப் பெண்களே ஆட்சி செய்து, தங்களுக்குச் சொந்தமானவற்றைப் பாதுகாத்து வரும் ஒரு அரசாட்சியின் பின்னணியில் ‘அக்கா’ தொடர் உருவாகியுள்ளது.

அதிகாரம் என்பது பாரம்பரியமாகக் கைமாறும், விசுவாசம் என்பது அனைத்தையும் விட முக்கியமானதாகக் கருதப்படும் இந்த உலகில், தங்களது பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்குப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழலும் உருவாகிறது.

தான் நம்பும் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் பவானி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பெர்னூருவின் ஆட்சிக்கு ராதிகா ஆப்தே நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய சவால் உருவாகிறது. அவளுடைய லட்சியங்களும் நம்பிக்கைகளும் பவானியின் அதிகார அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

இதனால், அதிகார போட்டியைத் தாண்டி பெரும் மோதல் உருவாகிறது. பதற்றம் அதிகரித்து, விசுவாசங்கள் சோதிக்கப்படும் நிலையில், இந்த அரசாட்சியின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய போராட்டத்தின் மையப்புள்ளியாக பவானி மாறுகிறார்.

அக்கா தொடர் குறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், “பவானி தன் பக்க நியாயம் என்ன என்பது குறித்து தெளிவாக அறிந்த ஒரு பெண். தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாப்பதற்காக அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பாள்.

அவளிடம் இருக்கும் வலிமையும் அதிகாரமும் அவள் எடுக்கும் கடினமான முடிவுகளும் சுவாரஸ்யமானது” என்றார்.

தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இத்தொடரில் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர் மற்றும் மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.