Take a fresh look at your lifestyle.

திரைத்துறை வளர்ச்சிக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?

சினிமா ஆய்வாளரான நிழல் திருநாவுக்கரசு சமூக அக்கறையுள்ள இளம் திரைக் கலைஞர்களை உருவாக்குதல், உலகளாவிய சினிமா ரசனையை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கத்துடன் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார்.

அவரை பீட்டர் துரைராஜ் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி.

திரைத்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் நம்மிடம் இல்லை. திரைப்படச் சுருளில் கிடைக்கும் வெள்ளிக்காக சிலர் எரித்து விடுவார்கள்.

அந்தப் படங்களை பிரசாத் ஸ்டுடியோ போன்றவைகளில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் பாதுகாக்க வாடகை கட்ட வேண்டும். இதற்காக தயாரிப்பாளர்கள் தேவையற்றது என நினைப்பார்கள்.

1942-ல் வந்த ‘என் மனைவி’ என்ற படத்தைப் பார்த்தால், பல விவரங்கள் நமக்கு கிடைக்கும். ‘ஜனசந்தடி மிகுந்த மயிலாப்பூரை விட்டுவிட்டு, கிராமப்புறமான கோடம்பாக்கத்திற்கு ஏன் வந்தாய்?’ என்று ஒரு கதாப்பாத்திரம் பேசும்.

அப்போது கேமரா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை காட்டும். அதற்கு அருகில் இருந்த இரண்டு ஏரிகளை காண்பிக்கும்.

இப்போது அந்தப் படம் தான், அங்கு ஏரி இருந்ததற்கு சான்று. எனவே எல்லாப் படங்களையும், அது எப்படிப்பட்டதாக இருந்ததாலும், டிஜிடலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் அவை ஆவண மதிப்பு மிகுந்தவை. இதற்கு அதிகம் செலவாகாது.

1970-களில் திமுக அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சி.எஸ்.ஜெயராமன், சேலம் ஜெயலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், குடந்தை சுந்தரேசன் போன்றவர்களின் கச்சேரிகளை பதிவு செய்து ஆவணப்படுத்தினார்கள்.

பல நாட்டுப்புற கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. மன்மதன் எரியும்போது பாடும் ‘லாவணி’, குற்றாலக் குறவஞ்சியில் சிங்கன் சிங்கி பாடும் பாடல், ஈரோடு மாவட்டத்தில் ‘ஜிமுக்கி’ போன்ற பல கலைகளை ஆவணப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை இவைகளைச் செய்ய வேண்டும்.

ஆந்திரா மாநில அரசு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்து வருகிறது. ஒரு கட்டத்தில் என்ன ஆகும் என்றால், ஆந்திராவில் தான் இப்படிப்பட்ட கலைகள் இருந்தன, தமிழ்நாட்டில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படும்.

ஆவணப்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன.

நன்றி : அறம் இதழ்