துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிப்பில் இயக்குநர் சற்குணம் எழுதி இயக்க, அமேசான் பிரைம் தளத்தில் மே பதினைந்து முதல் காணக் கிடைக்கும் தொடர் EXAM.
வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பு.
உதகம் மலை பகுதியில் உள்ள தைக்காராவுக்கு உயர் போலீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்க வரும் மரமல்லி என்ற பெண் போலீஸ் அதிகாரியை (அதிதி பாலன்), வழியில் கடத்தும் ஜான்சி (துஷாரா விஜயன்),
தனது ஆட்கள் சிலர் உதவியோடு அவரை ஓர் இடத்தில் அடைத்து வைத்துவிட்டு, மரமல்லியாகப் பதவி ஏற்கப் போகிறாள்.
பத்து நாட்களுக்குள் ஜான்சி மரமல்லியாக செயல்பட்டு ஒரு பெரிய சதியை முறியடிக்க வேண்டி இருக்கிறது.
எத்தனையோ குடும்ப ஏழைப் பிள்ளைகள் ஒரு அரசு வேலைக்குப் போனால் தலைமுறையே முன்னேறி விடும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து படித்து அரசாங்க வேலைக்கான தேர்வுகளை எழுதுகின்றனர்.
ஆனால், பணம் மட்டுமே உள்ள நபர்கள் RPSC (ரீஜனல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) என்ற அந்த நாடு தழுவிய தேர்வில் கூட பணம் கொடுத்து பதவிக்குப் போய் விடுகின்றனர்.
எல்லா தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி பணத்துக்காக இதைச் செய்து தகுதிவாய்ந்த எளிய பிள்ளைகள் வயிற்றில் அடிக்க, அரசாங்கத்தின் பல்துறை ஆட்களும் சில புரோக்கர்களோடு இணைந்து அநியாயத்துக்கு துணை போய், கோடிக் கோடியாக சம்பாதிக்கின்றனர்.
இதனால் தகுதியான பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு துணை போகும் மரமல்லியை அடைத்து வைத்துவிட்டு அந்த இடத்துக்கு போய் அநியாயத்தைத் தடுக்க முயலும் ஜான்சிக்கு என்ன ஆனது?
பாதிக்கப்படும் தகுதியான மாணவர்கள் கதி என்ன ஆனது என்பதே இந்த ஏழு அத்தியாயத் தொடர்.
படத்தின் முதல் ஷாட்டிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறது சற்குணத்தின் படமாக்கல்.
சற்குணம் படங்களில் ஒரு காட்சியிலாவது மீன் இல்லாமல் இருக்காது. வாகை சூடவா படத்தில் வந்த பனை (மரம்) ஏறிக் கெண்டை (மீன்) ஷாட் இன்றும் மறக்க முடியாதது.
ஆனால், இந்தத் தொடரில் ஆரம்பத்தில் இடம் பெறும் அந்த மீன் சம்மந்தமான முக்கியக் காட்சி அதை வைத்து ஏழாவது அத்தியாயத்தின் கடைசியில் அவர் வைத்து இருக்கும் ஒரு கனமான காட்சி… அதிரவும் நெகிழவும் வைக்கிறது.
அட்டகாசமான எழுத்து டெக்னிக்கலான கிளைமாக்ஸ் வசனங்கள் பலே.
சில வருடங்களுக்கு முன்பு நாமக்கல்லில் துவங்கி ஊட்டி பைக்காரா மற்றும் வட இந்தியா வரை UPSC தேர்வில் நடந்த ஒரு மாபெரும் ஊழலை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது இந்த சீரிஸின் மதிப்பு மிக்க விஷயம்.
உதகமண்டலத்துக்கு உதகம் மலை, பைக்காராவுக்கு பதில் தைக்காரா, நாமக்கல்லுக்குப் பதில் ராமக்கல், சம்மந்தப்பட்ட நடராஜன் என்ற பெயருக்கு பதிலாக அம்பலவாணன் என்ற பெயர்.
இப்படி, நடந்த உண்மையின் பிரதிபலிப்பாக இந்தத் தொடரை எடுத்திருக்கிறார் சற்குணம்.
மீன் பிடிக்கும் போது நடக்கும் விபத்து, இறந்த உடல்களை ஆற்றில் விடுதல் என்று பாரம்பரிய கிராமிய கலாச்சார நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் சிறப்பாக தொடரில் பதித்து இருக்கிறார்.
அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு கண்களை விட்டு அகல மறுக்கிறது. முழு சீரிஸுக்கும் தனது இசையால் டெம்போ ஏற்றி இருக்கிறார் சாம் சி.எஸ்.
ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங்கும் சிறப்பு.
அதிதி பாலன் – துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை சிறப்பாக எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ்.
குறிப்பாக காருக்குள் நடக்கும் சண்டைக் காட்சி அசத்தல்.
துஷாரா விஜயன், அதிதி பாலன், கிராமத்து தம்பி அக்காவாக நடித்தவர்கள் என எல்லோரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.
ஜெயிலர் கேரக்டரில் அப்பாஸும், போலீஸ் அதிகாரி கேரக்டரில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒரு உயர் போலீஸ் அதிகாரியை இன்னொருவரால் ஆள் மாறாட்டம் செய்ய முடியுமா? ஏதோ ஒரு மணி நேரம், ஒரு நாள் என்றால் கூட ஓகே. பல நாட்களுக்கு சாத்தியமா?
பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் கேரக்டருக்கு மரமல்லி, ஜான்சி இருவரையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்.
ஆனால், மரமல்லியாக வந்திருப்பது வேறு ஆள் என்று மட்டும் தெரிகிறது. ஜான்சி என்பது மட்டும் அவருக்கு தெரியவில்லை என்று சொல்வது பொருத்தமாக இல்லை
UPSC, TNPSC யில் தவறு நடப்பது என்பது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதைக் கருத்தியல் விஷயமாகவே இன்னும் சிறப்பாக விளக்கி இருக்க வேண்டும்.
ஆனால், ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் பாதிக்கப்படும் இரண்டு கேரக்டர்களின் கதையாக மட்டும் சுருக்கிப் பார்த்திருக்கத் தேவை இல்லை.
ஒட்டுமொத்த அளவில் ஏற்படும் பாதிப்பை சொல்லிவிட்டுக் கூட, பிறகு ஆக்ஷன் செண்டிமெண்ட் ரூட்டுக்கு வந்திருக்கலாம்.
முதல் மூணு அத்தியாயங்கள் மிக பரபரப்பாக கனமாக சிறப்பாக இருந்தது. நான்காவது கூட ஓகே. ஐந்தாவது ஆறாவது சோதனை. ஏழாம் அத்தியாயம் தக்க வைத்துக் கொள்கிறது.
அண்மையில் TNPSC தேர்வில் நடந்த குளறுபடிகள், இப்போது நீட் தேர்வில் நடந்த அயோக்கியத்தனம் இவற்றால் தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் இந்த எக்ஸாம் வெப் தொடர் மிக முக்கியமான ஒன்றாக ஆகிறது.
அப்படி ஒரு விழிப்புணர்ச்சி விஷயத்தை சிறப்பான படமாக்கலோடு சொல்லி இருக்கும் வகையில் SCAM செய்யாமல் முறைப்படியே பாஸ் ஆகிறது இந்த EXAM.
— சு.செந்தில்குமரன்