நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 AD’ திரைப்படம், அதன் உருவாக்கத்தால், இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி ‘கல்கி’ திரைப்படம் வெளியானது.
மகாபாரதம், கல்கி அவதாரம் ஆகிய புராணக் கதைகளுடன், எதிர்காலத்தை கற்பனை செய்து ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்பங்களுடன் உருவான படம் இது.
சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வெளியானது முதலே வசூலைக் கொட்டியது.
அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல் ஆகியோரின் நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும், கூட்டம் கூட்டமாக ரசிகர்களை, தியேட்டருக்குள் வரவழைத்தது.
படத்தின் நீளம், ஹாலிவுட் பாணி காட்சிகள் போன்றவை அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்டாலும், இவற்றைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
படம் வெளியாகி 17 நாள்களில் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் 1000 கோடி ரூபாயை சுலபமாக வசூலித்தது. பிரபாஸின், பாகுபலி பாகம் 2 திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது.
உலக அளவில் இந்தப்படம், 1800 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அந்த வரிசையில், இப்போது பிரபாஸின் இரண்டாவது படமாக ‘கல்கி’ 1000 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
இயக்குநரின் பாராட்டு:
இந்த நிலையில் படத்தின் டைரக்டர் நாக் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனை வானளாவ புகழ்ந்துள்ளார்.
“கல்கி படத்தை இயக்கும்போது, ஒரு மாணவனைப் போல் நான் உணர்ந்தேன். குறிப்பாக கமலைப் பற்றி சொல்ல வேண்டும்” என அந்த நேர்காணலில் சொன்னவர் தொடர்ந்து பேசினார்.
“சினிமாவின் அனைத்து விஷயங்களும் கமல்ஹாசனுக்கு அத்துப்படி – நடிப்பு, இயக்கம், நடனம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு என ஒவ்வொரு அம்சங்களையும் அவர் பூரணமாக அறிந்து வைத்துள்ளார்.
கமல்ஹாசன், நடமாடும் திரைப்பட பள்ளிக்கூடம் என்றே சொல்ல வேண்டும்” என நாக் அஸ்வின் அந்தப் பேட்டியில் சிலாகித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.