Take a fresh look at your lifestyle.

மாரி செல்வராஜை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது!

இயக்குநர் மணிரத்னம்

மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல், ராகுல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வாழை படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதனைத் தொடர்ந்து வாழை படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், நெல்சன் திலீப்குமார், நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வாழை படத்தைப் பற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜின் உழைப்பு பற்றியும் பேசினர்.

அதன்பின்னர் காணொலி வாயிலாக பேசிய இயக்குநர் மணிரத்னம், “மாரி செல்வராஜ் ஒரு சிறப்பான இயக்குநர். மிகத் திறமையாக கலைஞர்களைக் கையாளக்கூடியவர். மாரியின் மற்ற படங்களைப் போல தனித்துவமான கதைக்களம் இந்தத் திரைப்படத்திலும் உள்ளது. மாரி செல்வராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வாழை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராமத்தில் உள்ள அத்தனை மக்களையும் எப்படி மாரி செல்வராஜ் நடிக்க வைத்தார் என்பதை நினைத்து பொறாமையாக இருக்கிறது.

இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.