தமிழ் சினிமாவில் தனிப்பெரும் பலம் கொக்கோ, கலைவாணரில் துவங்கி இன்று வரை நீட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு விதமான நகைச்சுவை நடிகர்கள்.
இதற்கெல்லாம் பின்னணியாக அமைந்தவை அப்போது நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த பாய்ஸ் கம்பெனிகள் அதிலிருந்துதான் பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்திருக்கின்றார்கள்.
1950-களை ஒட்டி தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்களில் ஒருவர் டி.ஆர். ராமச்சந்திரன்.
அப்பாவித்தமான முகம், உதட்டுக்கு மேல் மெல்லியக் கோடு போன்ற மீசை, பெரும்பாலும் புன்னகை ஈர்த்த முகம்.
சினிமாவில் க்ளோசப் காட்சிகளின்போது தன்னுடைய கண்ணை விரித்து அவர் முழிக்கும் விதமும் மிக மென்மையாக வசனங்களைப் பேசும் விதமும் அவரை தனித்துக் காட்டியிருக்கும்.
திருச்சிக்கு அருகிலுள்ள திருகாம்புளியூர் என்கின்ற கிராமத்தில் 1917-ம் ஆண்டில் பிறந்தவர் இவர்.
பிரகதி பிக்சர்ஸூம் ஏவிஎம் நிறுவனமும் இவருக்கு கை கொடுத்தனர்.
‘நந்தகுமார்’, ‘ஸ்ரீவள்ளி’ என்று இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.
இவரது தனித்துவ நடிப்பைப் பார்த்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அப்போது எடுத்த ‘சபாபதி’ படத்தில் டி.ஆர். ராமச்சந்திரனும் காளி என். ரத்தினமும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
அந்தப் படத்தில், கட்டியப் புது மனைவியின் மூலம் பரீட்சையில் வெற்றி பெறும் மாணவராக அனாயசமாக நடித்திருப்பார் டி.ஆர். ராமச்சந்திரன்.
அதோடு சிவாஜி கணேசன் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்திலும் சிவாஜிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டி.ஆர். ராமச்சந்திரன்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சரோஜா தேவியின் அப்பாவாக, தீவிர சாப்பாட்டுப் பிரியராக நடித்திருப்பார்.
ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘ராஜி என் கண்மணி’ என்ற படத்தில் குணச்சித்திர நடிக்கராகவும் நடித்திருக்கிறார்.
அப்போதைய நடிகர்கள் சொந்தமாக படம் தயாரிப்பத்தில் ஈடுபட்ட மாதிரியே டி.ஆர். ராமச்சந்திரனும் சொந்தமாகத் தயாரித்த ‘கோமதியின் காதலன்’, ‘பொன் வயல்’ போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெறாவிட்டாலும்கூட அவர் கையைக் கடிக்கவில்லை.
நடிகை அஞ்சலிதேவி தயாரித்து நடித்த ‘அடுத்த வீட்டுப்பெண்’ படத்தில் இவரும் தங்கவேலுவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அப்போது மிகவும் பிரபலம்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற “கண்களும் கவிப்பாடுதே” என்ற பாடல் காட்சியில் டி.ஆர். ராமச்சந்திரன் காட்டியிருக்கும் முகபாவங்களும் உடல் மொழியும் இப்போது பார்த்தால்கூட ரசனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.