பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் ‘நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி’.
இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர்: ராமபத்ர செட்டியார் குப்பம்மாள்.
சிறு வயதிலேயே படிப்பை விட நடிப்பே அவரை அதிகம் கவர்ந்தது. 7 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு 6 ஆண்டுகள் நடித்தார். பின்னர் அங்கிருந்து விலகி, டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற நாடகம், 1935-ல் திரைப்படமாகியது.
அதில் கே.ஆர். ராமசாமி சிறு வேடத்தில் நடித்தார். அவருடைய முதல் படம் இதுதான். குமாஸ்தாவின் பெண் படத்தின் துணை இயக்குனர்களாகவும், எடிட்டர்களாகவும் இருந்த கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள், ‘பூம்பாவை’ என்ற படத்தை டைரக்ட் செய்தனர்.
அவர்களுடைய சிபாரிசின் பேரில் இந்தப் படத்தின் கதாநாயகன் வேடம் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது.
கதாநாயகியாக நடித்தவர் யூ.ஆர். ஜீவரத்தினம். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ‘தெய்வநீதி’, ‘கிருஷ்ண பக்தி’, ‘கங்கணம்’ ஆகிய படங்களில் நடித்தார்.
‘கிருஷ்ணன் நாடக சபா’ என்ற பெயரில் சொந்தத்தில் நாடகக் குழுவை தொடங்கினார். (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது பேரன்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அதனால், தன் நாடகக் குழுவுக்கு அவர் பெயரை வைத்தார்.)
திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன.
புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார். நாடகமாக வெற்றி பெற்ற ‘வேலைக்காரி’யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.
திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.
படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர். வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர்.
அவர் செய்த கொடுமையால் ஆனந்தனின் (கே.ஆர். ராமசாமி) தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதற்குப் பழி வாங்க, ஆனந்தன் ஆள் மாறாட்டம் செய்து, வேதாசலத்தின் மகள் சரசாவை (வி.என்.ஜானகி) மணக்கிறான். அவளை கொடுமை செய்கிறான்.
பல திருப்பங்களுடன் கதை செல்கிறது. வேலைக்காரியை (எம்.வி.ராஜம்மா) காதலிக்கும் மூர்த்தி (எம்.என்.நம்பியார்) ஒரு போலிச்சாமியாரின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறான்.
போலிச்சாமியார் கொலை செய்யப்படுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்படும் மூர்த்தியை, வக்கீலாக வாதாடி விடுவிக்கிறான், ஆனந்தன். வேதாசல முதலியாரின் ஆணவம் அழிகிறது.
25-2-1949-ல் வெளியான வேலைக்காரி பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.
கே.ஆர்.ராமசாமி கடைசியாக நடித்த படம் ‘நம் நாடு’. எம்.ஜி.ஆர். நடித்த இப்படத்தில் கவுரவ வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.
1960-ல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக, சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.ஆர். ராமசாமி. நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக, சங்கீத நாடக சங்கத்தின் (இயல் இசை நாடக மன்றம்) விருது பெற்றார்.
57- வது வயதில் கே.ஆர்.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் சதை வளர்ச்சி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில காலம் சிகிச்சை பெற்றார்.
பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
5-8-1971 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. நள்ளிரவு 12 மணிக்கு காலமானார். கே.ஆர்.ராமசாமியின் மனைவி பெயர் கே.ஆர்.கல்யாணி. இவர் பிற்காலத்தில் வாரிய தலைவராக இருந்தவர். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி முகநூல் பதிவு