சினிமாவில் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்வது சகஜமானது, இப்போது இசை அமைப்பாளர்கள் சீசன் போலும். சில ஆண்டுகளுக்கு முன்னார் இளையராஜாவின் மகனும், இசை அமைப்பாளருமான யுவன் ஷங்கர்ராஜா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்,
இதன் தொடர்ச்சியாக டி.இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர், தங்கள் துணையை பிரிந்தனர். அந்த வரிசையில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்திலும் புயல் வீசியிருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய திலிப்குமார், பின்னர், விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தார்.
தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக்கொண்டு, ‘ரோஜா’ திரைப்படம் மூலம் சினிமா இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே தேசிய விருது வென்று சாதனை படைத்தார். அதேபோல் ‘ஹாலிவுட்’டில் அறிமுகமான முதல் படத்திலேயே, கோல்டன் குளோப் விருதினையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தவர்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சென்னை சாமியார் மடத்தில் உள்ள ரஹ்மான் வீட்டுக்கு நேரில் சென்று, புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார்.
ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதிக்கு கதிஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், 29 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிவதாக, ரஹ்மான் மனைவி சாய்ரா பானு ‘திடீர்’ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து, நான், ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘இத்தனை ஆண்டுகள் வாழ்க்கையை நகர்த்திய பிறகு அண்மைக்காலமாக, எங்களுக்குள் வலியும், கவலையும் அதிகமானது – இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால், மிகக் கடுமையான மனவலியில் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷாவும், இந்த விவகாரம் குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார் – அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
‘ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது – வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா கருதுகிறார் – தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார் என சாய்ராவின் வழக்கறிஞர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
இந்தப் பிரிவை ஏ.ஆர். ரஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மிகப்பெரிய 30 ஆம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம் – ஆனால் எல்லா விஷயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன’ என கூறியுள்ளார்.
‘உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும் – எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம்.
எங்களுடைய நண்பர்களே! நாங்கள் இந்த பலவீனமான அத்தியாயத்தைக் கடக்கும்போது உங்களுடைய கனிவுக்கும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி’ என ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பிரபலங்களின் விவாகரத்துக்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கும். ரஹ்மான் விவகாரத்தில் என்ன காரணம் என்பது தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.
#சினிமா #Cinema #நட்சத்திரங்கள் #Celebrities #விவாகரத்து #Divorce #இசையமைப்பாளர் #Musicdirector #ஏஆர்_ரஹ்மான் #AR_Rahman #சாய்ரா_பானு #Shahira_banu #வழக்கறிஞர்_வந்தனா_ஷா #Advocate_vandhana_shah