திரைத் தெறிப்புகள் – 52:
*
கே.ஜே. ஜேசுதாஸின் மிக மென்மையான குரலில் தாலாட்டுக்கு இணையான இந்தப் பாடலைக் கேட்கும் போது, மனம் தியானத்திற்கு மிக அருகில் நெருங்கியதைப் போல் இருக்கும்.
மெல்லிசை மன்னராக எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் 1976-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ திரைப்படத்தில் நடித்திருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றுவிடும் இந்தக் குறும்பாடலை எழுதியிருப்பவர் ‘கருப்பு மலர்கள்’ முதற்கொண்டு பல புதுக்கவிதை தொகுப்புகளை எழுதியவரான நா. காமராசன்.
“இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்.
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்.
காத்திருப்பாள் என்று தேவதைக்கு.
தென்றல் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்….”
தொடர்ந்து மெல்லிய “ஹம்மிங்”.
மிகக் குறைந்த வாத்தியக் கருவிகளின் பின்னணி இசையோடு இந்தப் பாடலைக் கேட்கும்போது ரம்மியமாக இருக்கும் கேட்கும் கணம்.
“புத்தனின் முகமோ..
என் தத்துவச் சுடரோ..
சித்திர விழியோ!
அதில் எத்தனை கதையோ.”
– என்று நிறைகிற பாடலைத் திரையரங்குகளில் கேட்கும்போது அவ்வளவு நிசப்தமாக இருக்கும். மெல்லிய தென்றல் நம் காதோரம் வருடுவதைப் போலவும் இருக்கும்.
இந்த அற்புதப் பொழுதின் அருமையை உணர நீங்களும் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
*
– மணா