Take a fresh look at your lifestyle.

காந்திமதிக்கு நிகரான நடிகை இன்னும் வரவில்லை!

அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை… காந்திமதி.

ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த ‘இரவும் பகலும்’ தான் ஜெய்சங்கரின் முதல் படம். ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல… காந்திமதிக்கும் இதுவே முதல்படம்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்தத் திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’.

படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.

மயிலின் அம்மா குருவம்மா… அச்சு அசலான கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று பார்த்துவிடுகிற ஆவேச அம்மா.

மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக, குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.

கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்த இரண்டு படங்களும் காந்திமதி எனும் நடிகை, சாதாரணரில்லை என்பதை தெளிவுற பறைசாற்றின.

கே.பாக்யராஜ் முதன் முதலாக இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.

‘இன்று போய் நாளை வா’ உள்ளிட்ட படங்களிலெல்லாம் இவரும் தனித்துத் தெரிந்தார். இவர் நடிப்பும் புதுபாணி என்று பேரெடுத்தது. மளமளவென படங்கள் குவிந்தன.

முன்னதாக, ‘சட்டம் என் கையில்’ படத்தில் கமலுக்கு அம்மாவாக, அசோகனுக்கு மனைவியாக, குடிசை வாழ் பெண்மணியாக வெளுத்து வாங்கியிருப்பார்.

இந்த சமயத்தில்தான் எம்.ஏ.காஜாவின் ‘மாந்தோப்பு கிளியே’ வந்தது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில், லவுட் ஸ்பீக்கரில், ‘மாந்தோப்பு கிளியே’ காமெடியும் ‘16 வயதினிலே’ ஒலிச்சித்திரமும் ஓடின.

ஊரே அமைதியாகக் கேட்டு ரசித்தது. கஞ்சக் காமெடியைக் கேட்டு வெடித்துச் சிரித்தது. சுருளிராஜன் – காந்திமதி இல்லையென்றால், ‘மாந்தோப்புக் கிளியே’ வெற்றிப் படமாக அமைந்திருக்காது. இன்றைக்கும் மனங்களில் நின்றிருக்காது.

மணிவண்ணனின் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில், பிரபு, சத்யராஜ் அம்மாவாக அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார்.

‘அக்கா…’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம் பிரபலம். அந்த அக்காவாக, ராமராஜனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் காந்திமதி.

அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார்.

‘கால்கேர்ள்’ வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக் குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல் அசத்துவார். நல்ல கதாபாத்திரமோ நெகட்டீவ் கதாபாத்திரமோ… அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார்.

செட்டிநாட்டு பாஷை, மதுரை பாஷை, கோவை பாஷை, சென்னை பாஷை என்பதெல்லாம் காந்திமதிக்கு சரள பாஷை. சகஜ பாஷை.

ஆனால், எந்த பாஷையில், எந்தக் கேரக்டராக இருந்தாலும், கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்… டாப்டக்கர்!

எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக ஆக்கியிருந்தார்.

கையில் கோல், காதில் தண்டட்டி, சுருக்கம் விழுந்த பார்வை, கூன் விழுந்த முதுகு… வார்த்தைக்கு வார்த்தை பழமொழிகள்… என மண்வாசனை’யில் ஒச்சாயிக் கிழவி எடுத்ததெல்லாம் விஸ்வரூபம்.

இரண்டரை மணி நேர ‘தேவர் மகன்’ படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில், தேரோட்டம் நடைபெறும் காட்சியில், ஒரேயொரு காட்சியில் வருவார் காந்திமதி.

‘யாரு தேவர்மகன்… கூப்பிடு அவரை’ என்பார். ‘உங்க அப்பாருதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு’என்று சொல்லுவார்.

வடத்தைப் பிடித்துக் கொண்டு, ‘நான் காசு பணமா கேட்டேன். தேரை இழுக்க இடம்தானே கேட்டேன். போற வழிக்கு புண்ணியம் கிடைச்சாப் போதுமே’ என்பார்.

அந்த க்ளைமாக்ஸ், தேர் வெடிக்கும் காட்சி, காந்திமதிக்கான காட்சி. அவர் நடிப்புக்கான சாட்சி.

இப்படி எத்தனையோ படங்கள். எந்த சாய்ஸும் இல்லாத, எவர் சாயலுமில்லாத நடிகை காந்திமதி.

2011ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காலமானார்‌.

காந்திமதி அவர் நடித்துக் கொண்டிருந்தபோதும் சரி… காலமாகிவிட்ட இனி வரப்போகும் காலங்களும் சரி… காந்திமதியின் நடிப்புக்கு நிகரான நடிகை இன்னும் வரவில்லை; இனியும் வரமாட்டார்.

இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள், தமிழ்த்திரையுலகம் கொடுத்திருந்தால், ‘நடிப்பு ராட்சஷி’ என்று தமிழ்த் திரையுலகமே இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கும்.

காந்திமதி எனும் கலைநயமிக்க நடிகையைப் போற்றுவோம்.