தமிழின் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ஜிகர்தண்டா 2” திரைப்படம்.
இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம்வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை தந்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில் முதல் முறையாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தினை முன்னதாக பார்த்த நடிகர் தனுஷ், தன் சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் பாராட்டிப் பதிவு செய்துள்ளார் அப்பதிவில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன்.
@karthiksubbaraj இன் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழக்கமானதாகி விட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் பதிவுக்குப் பதிலளித்த ராகவா லாரன்ஸ், “சகோதரரே, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டு முன்னணி நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த உரையாடல்களை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டிப் பகிர்ந்துவருகின்றனர்.