Take a fresh look at your lifestyle.

வெளியானது இந்தியன்-2 சிறப்பு வீடியோ!

இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வருகிறது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், விவேக், எஸ்.ஜே சூர்யா, மனோபாலா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், பாபு சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் படம் பாதியிலேயே முடங்கியது. விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இந்தியன்-2 திரைப்படம் மீண்டும் எழுச்சி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கட்டங்களாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், படத்தின் நீளம் காரணமாக திரைப்படத்தை 2 பாகங்களாக, அதாவது இந்தியன்-2 மற்றும் இந்தியன்-3 என வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்தது.

இதற்கிடையில் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் தொடங்கினார்.

ஆனால் இந்தியன்-2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக பிரிக்க இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்திடமும் கமல்ஹாசனிடமும் தெரிவிக்க, கமல்ஹாசன் அதற்கு குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்கி நடிக்க ஓகே சொல்லி உள்ளார்.

அந்த வகையில் சென்னையில் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்கான படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்.

இதன் அடிப்படையில் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக தயாராவது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்தியன்-2 படத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனை தமிழில் நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் கிச்சா சுதீப் மற்றும் இந்தியில் அமீர்கான் வெளியிட்டனர்.

இந்தியன்-2 படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்