Take a fresh look at your lifestyle.

ரஜினி படம் வெளியாகாத பொங்கல், தீபாவளி!

‘முரட்டுக்காளை’ படத்துக்கும் ‘கழுகு’ படத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

ஹீரோ – ரஜினி. நாயகி – ரதி. இசை – இளையராஜா. இயக்கம் – எஸ்.பி.முத்துராமன். வசனம் – பஞ்சு அருணாசலம். இரண்டு படத்திலும் சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தனர்.

இரு படங்களின் ஷுட்டிங்கும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எண்பதுகளில் தென்காசி பகுதியில் நடந்தன.

காளையை ஏவிஎம் நிறுவனமும், கழுகை பஞ்சு அருணாசலமும் தயாரித்தனர்.

குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார்.

அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான் ‘கோலார்’ எனும் பெயரில் கையெழுத்து இதழ் நடத்தி வந்தேன்.

அந்த இதழுக்காக ரஜினியைப் பேட்டி காண்பதற்கு மூன்று நண்பர்களுடன் குற்றாலத்துக்குக் கிளம்பிப் போனோம். எங்கள் ஊரில் இருந்து குற்றாலம் முக்கால் மணி நேரப் பயணம்.

மாலை மங்கி, இரவு நேரமாகி இருந்தது. ஷுட்டிங் முடிந்து ரஜினி வந்திருப்பார் என ஒரு யூகம். விருந்தினர் மாளிகைக்குச் சென்று விசாரித்தோம். அன்று, ரஜினிக்கு இரவு நேர படப்பிடிப்பு என சொல்லப்பட்டது.

அறையில் ரஜினியை சந்தித்தோம், பேட்டி கேட்டோம். கோலார் இதழைக் காண்பித்தோம். பக்கம் பக்கமாக புரட்டிப் பார்த்தார், எங்களையும் பார்த்தார்.

“வெளியே வெயிட் பண்ணுங்க.. மேக்கப் போட்டுட்டு வந்திடுறேன்”.

மூவரும் தலா 10 கேள்விகளுடன் வரவேற்பு அறையில் காத்திருந்தோம்.

சில நிமிடங்களில் ரஜினி வெளியே வந்தார்.

“ஓகே… ரெடி”

மொத்தம் 30 கேள்விகள். ரஜினிக்கே உரிய ஸ்டைலில், படுவேகமாக பதில்கள் வந்து விழுந்தன. 10 நிமிடங்கள் பேசி விட்டு, கை கொடுத்துவிட்டு ஷுட்டிங் கிளம்பிச் சென்றார்.

சிகரெட் பற்ற வைத்த ரஜினி

ரஜினியுடன் எனது இரண்டாவது சந்திப்பு ஒகேனக்கல்லில் நிகழ்ந்தது. அப்போது நான் சேலத்தில் மாலை தினசரி ஒன்றின் நிருபர்.

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான ‘பிளட்ஸ்டோன்’ படத்தின் சில காட்சிகள் ஒகேனக்கல்லில் எடுக்கப்பட்டன.

கடைசி நாள் ஷுட்டிங்கின் போதுதான் ரஜினி ஒகேனக்கல் வந்திருக்கும் தகவல் தெரிந்தது.

அரக்கப் பரக்க போட்டோகிராபரை அழைத்துக்கொண்டு ஒகேனக்கல் சென்றேன். பரந்து விரிந்த ஒகேனக்கல் நதி, குட்டி குட்டித் தீவுகளைக் கொண்டது.

ஒரு குட்டித் தீவில் படப்பிடிப்பு. பரிசல் எடுத்து நாங்கள் சென்றபோது, ஷுட்டிங் முடிந்து, ரஜினி, தனது மனைவி லதாவுடன் எதிரில் பரிசலில் வந்து கொண்டிருந்தார்.

அவர் தங்கி இருந்த தமிழ்நாடு ஓட்டலுக்குச் சென்றபோது, ரஜினி பெங்களூரு கிளம்பிக் கொண்டிருந்தார்.

அறைக் கதவைத் தட்டினேன். ரஜினியே திறந்தார். எங்களைப் பற்றிய விவரங்கள் சொல்லி, “பேட்டி வேண்டும்” என்றேன்.

“நான் பெங்களூரு கிளம்பிட்டேன்ண” – என்றார் ரஜினி.

“சார்! சேலத்தில் இருந்து நாலு மணி நேரம் பஸ்சில் பயணம் செஞ்சு வந்திருக்கோம்” என்றேன்.

“இன்னொரு நாள் பார்க்கலாம்” – ரஜினி புறப்பட ஆயத்தமானார்.

“நாங்களும் உங்களோடு காரில் வர்றோம். பேட்டி முடிஞ்சதும் வழியில் இறங்கிக் கொள்கிறோம்”.

எனது முகத்தில் தெரிந்த வருத்தமும், பரிதவிப்பும் ரஜினியை இளகச்செய்திருக்க வேண்டும்.

“இங்கேயே வச்சுக்கலாம் – சீக்கிரம் முடிச்சிடுங்க” என்றார்.

ஒரு சிகரெட்டை அவர் பற்ற வைத்து, இன்னொன்றை எனக்கு நீட்டினார். வழக்கமாக கேட்கும், அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்வியைக் கேட்டேன்.

“நான் அரசியலுக்கு நிச்சயம் வரப்போவதில்லை” என ஒன்றுக்கு மூன்று முறை சொன்னார். பெங்களூரு புறப்பட்டுப் போனார்.

திரண்ட கூட்டம் – திகைத்த ரஜினி !

1990 என நினைக்கிறேன். மதுரையில் வேலை.

அப்போது ரஜினியின் நண்பரான அடைக்கலராஜின் குளிர்பான தொடக்க விழாவுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ மதுரை வந்திருந்தார்.

ரஜினி வரப்போவது குறித்தோ, அவரது நிகழ்ச்சி பற்றியோ எந்த விளம்பரமும் இல்லை.

ஆனாலும் வாய்மொழியாக தகவல் பரவி, அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி மைதானத்தில் பெருங்கூட்டம்.

நிகழ்ச்சிக்கு கிளம்பும் முன்பாக ரஜினி பேட்டி அளித்தார்.

அவரைக் காண திரண்டிருந்த மக்கள் வெள்ளம் குறித்து நான் குறிப்பிட்டபோது, “நானும் கேள்விப் பட்டேன்” என்றவர் முகத்தில் மலர்ச்சியையும் திகைப்பையும் ஒரு சேரக் காண முடிந்தது.

அப்போது ரஜினி, ‘தளபதி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

பிரஸ்மீட்டில் ரஜினிக்கு இடது, வலது புறங்களில் தயாரிப்பாளர் ஜீவியும், ஜெய்சங்கரும் அமர்ந்திருந்தனர்.

அப்போது முக்கிய பண்டிகை நாட்களில் ரஜினி படம் வெளியாத நேரம். இது குறித்த கேள்விக்கு ரஜினியின் சார்பில், ஜீவி பதில் சொன்னார்.

“ரஜினி படம் இல்லாம இனி தீபாவளி இல்லை… ரஜினி படம் இல்லாம இனி பொங்கல் இல்லை… ரஜினி படம் இல்லாம இனி தமிழ்ப் புத்தாண்டு இல்லை” என உரக்கச் சொன்ன ஜீவியின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

– பாப்பாங்குளம் பாரதி.

#ரஜினிகாந்த் #சூப்பர்ஸ்டார் #ஒகேனக்கல் #ரஜினிபேட்டி #ரஜினிஅரசியல் #அரசியல்பிரவேசம் #பிளட்ஸ்டோன் #முரட்டுக்காளை #கழுகு #தளபதி #இளையராஜா #பஞ்சுஅருணாசலம் #Rajinikanth #SuperstarRajinikanth #Hogenakkal #RajinikanthInterview #RajinikanthPolitics #Bloodstone #MurattuKaalai #Kazhugu #Thalapathi #Ilaiyaraaja