மாஸ்டர் திஹான், மிக்கி மக்கிஜா, கிரி துவாரகீஷ், அபினவ் கோஸ்வாமி, சின்னி நடிப்பில்,
கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து பொன் சங்கர் இயக்க,
ஐ அன்ட் ஐ மூவீஸ் சார்பில் கிருஷ்ணவேணி மற்றும் வைர பிரகாஷ் தயாரிக்க,
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மொழிகளில் வெளியாகும் “சாரே சஹான்ஸே அச்சா…” வகையிலான படம்.
திருவள்ளுவரின் பெருமையைச் சொல்லி, ‘மம்மி என்று சொல்லக்கூடாது; மம்மி என்ற சொல்லுக்கு பிணம் என்று பெயர்; அம்மா என்றுதான் கூப்பிட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து பிள்ளை வளர்க்கும் பெற்றோரின்,
ஒரே மகனாகிய சிறுவன், சுமார் பத்து வயசான மோகனவேலு (திஹான்)
இந்தியா முழுமைக்கும் அனுப்பப்படும் தேசியக்கொடியை நெய்கிற, கர்நாடகாவின் தார்வாது மாவட்டத்தில் ஹூப்ளி அருகில் உள்ள பெங்கேரி என்ற ஊரில் செயல்படும், கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கத்தில், தேசியக்கொடி நெய்யும் பணியில் இருக்கிறார், மோகன வேலுவின் அம்மா வழித் தாத்தா (மிக்கி மக்கிஜா).
மோகனவேலுவின் அம்மா, அப்பா இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட, தாத்தாவோடு கர்நாடகா போகிறான் மோகனவேலு.
அங்கே சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு, தேசியக் கொடியின் பெருமை எல்லாம் சொல்லும் தாத்தா, ‘டெல்லி இந்தியா கேட்டில் தேசியக்கொடி ஏற்றப்படுவதை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை’ என்று கூறுகிறார்.
ஆனால், அவரது உடல்நிலை அதற்கான வாய்ப்பை தராத நிலையில், தாத்தா ஆசைப்பட்டபடி நாம் போய் பார்த்து விடுவோம் என்று,
தாத்தாவிடம் சொல்லாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ரயிலில் கிளம்புகிறான் சிறுவன் மோகனவேலு.

டெல்லி என்று எண்ணி கேரளாவில் ரயிலில் இருந்து இறங்கி விடுகிறான். ரயிலில் செல்போனைத் தொலைக்கிறான்.
அங்கிருந்து லாரியில் ஏறி டெல்லி இண்டியா கேட்டுக்கு போவதற்கு, பதில் மும்பை கேட் வே ஆப் இந்தியாவுக்கு போய்விடுகிறான்.
அவனிடம் பல ஆயிரம் பணம் இருப்பது தெரிந்தும் அந்த இந்திக்கார லாரி டிரைவரும் கிளீனரும் அவன் பணத்தைத் திருடாமல் நல்லவர்களாக நடந்து கொள்கிறார்கள்.
‘நாம் போக வேண்டிய இடம் மும்பை கேட் வே ஆப் இந்தியா இல்லை..’ என்பது அவனுக்கு தெரிந்த நிலையில், அவன் தமிழ்ப் பையன் என்பதை அறிந்த ஒரு மும்பை போலீஸ் அதிகாரி அவனிடம் அன்பாக நடந்து கொள்கிறார்.
அதே நேரம் மும்பை கடற்கரையில் தமிழும் நன்றாக பேசும் ஒருவன் மோகனவேலுவை தன் இடத்துக்கு இழுத்து சென்று அடைத்து வைக்கிறான்.
அங்கே பபூஷா ஒரு டீன் ஏஜ் பெங்காலி பெண்ணை (சின்னி) ஒரு கூட்டம் கடத்தி வைத்து பாலியல் ரீதியாக விற்க முயல்கிறார்கள். பபூஷாவும் மோகனவேலுவும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.
பபூஷாவை அவளது அக்கா கணவனே விற்றிருப்பது தெரிகிறது. அவளும் அவனோடு பயணத்தில் இணைகிறாள்.
அவர்களுக்குள் ஓர் இனம்புரியாத நேசம் வருகிறது. எனினும் அக்கா கணவன் அவளைக் கொண்டு போய் விடுகிறான்.
இந்த நேரத்தில் தீவிரவாதக் குழு ஒன்று டெல்லியில் குண்டு வைக்கத் திட்டமிடுவது தெரிந்து, தீவிர போலீஸ் விசாரணை நடக்கிறது.
மோகனவேலு காஷ்மீர் எல்லாம் போகிறான். அங்கே அவன் சாலையைக் கடக்க உதவி செய்த ஒரு நபர் முஸ்லீம் தீவிரவாதி என்பது தெரிகிறது.
பயணத்தில் அவன் வாங்கிய புல்லாங்குழல், சிறு சிறு பொம்மைகள் போன்ற பொருட்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவது தெரிகிறது. எனவே மோகனவேலுவை சந்தேகப்பட்டு போலீஸ் கைது செய்கிறது.
அவனே அறியாமல் அவனை தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தியதா? மோகனவேலுவின் நிலை என்ன? அவனால் டெல்லி இந்தியா கேட்டில் தேசியக்கொடி ஏற்றப்படுவதைப் பார்க்க முடிந்தததா என்பதே இந்த ‘ஃப்ளாக்’.
கர்நாடகா பெங்கேரியில் செய்யப்படும் தேசியக்கொடி தான் இந்தியா முழுவதும் போகிறது என்பது சினிமாவில் பதிப்பதுவே படக்குழுவின் முக்கிய நோக்கம். தவறில்லை. பாராட்டலாம்.
ஒரு சிறுவனின் தேசியப் பயணம்தான் படம். தெற்கே இருந்து வடக்கே வரை பல ஊர்கள், நிலங்கள், மொழிகள், இனங்கள், மனிதர்கள், நீர்நிலைகள், கோவில்கள் என்று காட்டுகிறார்கள்.
தேடித் தேடி லொக்கேஷன் பிடித்து இயக்கி இருக்கிறார் பொன் சங்கர். இயக்கத்தைவிட ஒளிப்பதிவை சிறப்பாக செய்திருக்கிறார்.
ராஜா ரவிவர்மா மற்றும் பாலா சுப்பிரமணியம் ஆகியோரின் இசை, வரதராஜன் படத்தொகுப்பு இரண்டிலும் குறை இல்லை.
டோரதி உள்ளிட்ட பல படங்களில் கலக்கிய திஹான் வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார்.
தேசியத் தாத்தா கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார், உயர, ஒல்லி, வெள்ளை நிற மிக்கி மக்கிஜா.
பபூஷாவாக நடித்திருக்கும் சினி இயல்பாக இதயம் நுழைகிறார்.
மற்றவர்கள் வசனம் பேசிப் போகிறார்கள்.
எப்படி ஒரு பையன் அவ்வளவு தூரம், அவ்வளவு ஊர்களுக்கு, கையில் பல ஆயிரம் பணத்தோடு, அதுவும் பலரும் பார்க்கப் பார்க்க நோட்டுக்கட்டை எடுத்துக் காட்டிக் கொண்டு ரயில், லாரி, டூ வீலர் என்று பயணிக்க முடியும்?
அப்போ மும்பை வரை, அதாவது கேரளா, கர்நாடகாவில் எல்லாம் எல்லோரும் அவ்ளோ நல்லவர்களா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ‘அப்படிதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது…’ என்று சொல்வோரின் படம் இது.
தமிழ் மொழி, இனம் என்று பேசும் அப்பா அம்மாவை ஒரே காட்சியில் லாரியை ஏற்றி சாகடிக்கிறார்கள் (திரைக்கதையில்) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பயணம் முழுக்க மொழி தெரியாமல், ”என்னடா இந்தியாவுல இவ்வளவு மொழிகளா?” என்று பிரச்சனையை யதார்த்தமாக அணுகும் மோகனவேலு, படத்தின் இறுதியில் ”நான் இந்தியாவின் எல்லா மொழிகளையும் கத்துக்கப் போறேன்..” என்று மெய் சிலிர்த்து பேசுகிறான்.
நமக்குத் மெய் நடுக்கம் ஆகி விட்டது.

”வேணாம் ராசா தாய்மொழியை மட்டும் படிச்சா போதும்பா. நீ உன் மொழியில பேசினா அதை உலகத்தின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்துச் சொல்லும் காலம் வந்துருச்சுப்பா. இத்தனை மொழிகளையும் படிச்சுக்கிட்டு இருந்தா நீ எப்பப்பா, அறிவியல், வரலாறு, இலக்கியம் கணிதம் எல்லாம் படிப்ப?” என்று புலம்பத் தோன்றியது.
திரையரங்க ரசிகர்களைக் கவர்வது இவர்களின் முதன்மை நோக்கம் இல்லை. வேறு.?
அது இந்நேரம் நிறைவேறி இருக்கும்.
மொத்தத்தில் ஃப்ளாக் (Flag-கொடி)… சிலர் எண்ணப்படி பறக்கும் வண்ணக் கொடி.
— சு.செந்தில்குமரன்
