ஹரீஷ் கல்யாண், சித்தி இத்னானி, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, கோவை சரளா, வி.ஜே பார்வதி நடிப்பில் சசி எழுதி இயக்கி,
ஸீ 5 ஓடிடி தளத்தில் நவம்பர் ஆறாம் தேதி முதல் காணக் கிடைக்கும் திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’.
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி காபா மற்றும் அருண் அருணாச்சலம் புரடக்ஷன் சார்பில் அருண் அருணாச்சலம் தயாரிப்பு.
கோவாவை மையமாகக் கொண்டு இயங்கும் யூடியூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி இயக்குநராக இருக்கும் வினோ (ஹரிஷ் கல்யாண்) கொடுமைக்கார அப்பாவால் (சம்பத்) பாதிக்கப்பட்ட அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளை.
அப்பா இப்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ, அப்பாவையும் சித்தியையும் வெறுக்கிறான் வெறுக்கிறான் வினோ.
அதே கோவாவில், பக்கத்து வீட்டுச் சிறுவன் மேல் சிறுவயது நேசம் கொண்டு பின்னர் இளம்வயது முதல் காதலிக்க ஆரம்பித்த ஃபென்னிக்கு (சித்தி இத்னானி) டெலிவிஷன் ஆங்கர் ஆகவேண்டும் என்பது லட்சியம்.
ஆனால், காதலனுக்கு (ரினில் மோகன்) அதில் விருப்பம் இல்லை. இது குறித்த ஒரு விவாதத்தின் போது, காதலன் கோபம் கொண்டு இருசக்கர வாகனத்தில் பறக்க, ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்குப் போகிறான்.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவனோடு இருந்து அவனிடம் பேசுவது போல வீடியோ எடுத்து, அவனுக்கு நினைவு வந்தவுடன் போட்டுக்காட்ட தினமும் படமாக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாள் ஃபென்னி.

காதலனின் மருத்துவச் செலவு உட்பட பல காரணங்களுக்காக அவனுக்கு பிடிக்காத டெலிவிஷன் ஆங்கர் வேலைக்கு முயல்கிறாள். வினோ இயக்குநராக இருக்கும் சேனலில் அவளுக்கு வேலை கிடைக்கிறது.
கோவா ஸ்கூட்டர் கேர்ள் என்ற பெயரில், பொது மக்களின் ஆசைகளை நிறைவேற்றுதல், அல்லது சில நிமிடங்கள் பேசி ஒருவர் செய்யவிருந்த செயலைத் தடுப்பது என்ற கான்செப்டில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஹிட்டடிக்கிறது.
இதனிடையே வினோவுக்கும் ஃபென்னிக்கும் இடையே ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஒரு முத்த யத்தனிப்பு நேரத்தில் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் ஃபென்னி, விலகிப் போகிறாள். கோமா நிலையில் உள்ள காதலனிடம் அழுது மன்னிப்பு கேட்கிறாள்.
ஆனால், அவள் மேல் கொண்ட காதலை மறக்க முடியாமல் தவிக்கிறான் வினோ.
இந்த நிலையில் கோமா நிலையில் இருக்கும் காதலன் கண் விழிக்கிறான்.
தனக்கு பிடிக்காத டெலிவிஷன் ஆங்கர் வேலையை ஃபென்னி பார்ப்பதை அறிந்து, பழையபடியே பேசுகிறான். இனி அந்த நிகழ்ச்சி செய்ய வேண்டாம் என்கிறான்.
சேனல் அவளுக்கு தந்த பணம், ஒரு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலக வேண்டாம் என்ற தொழில் நேர்மை இவற்றால் சிக்கல் எழ, ஃபென்னியுடன் அவளது காதலனே நடிப்பதாக முடிவாகிறது. அதிலும் அவனுக்கு பிரச்சனைகள் எழ, ஃபென்னி – வினோ விஷயம் காதலனுக்கு தெரிய வர, நடந்தது என்ன என்பதே இந்த ‘நூறு கோடி வானவில்’.
அருமையாக திரைக்கதை, வசனம் எழுதி, நடிக நடிகையரிடம் வேலை வாங்கி மற்ற தொழில் நுட்பர்களைச் சரியாகப் பயன்படுத்தி இயக்கி அசத்தி இருக்கிறார் சசி.
”இது நூற்றி முப்பதாவது நாள்…” என்ற ரீதியில் ஃபென்னி வீடியோ போடுவதில் படத்தை ஆரம்பிப்பதில் ஆகட்டும்… டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு குட்டிக் குட்டி ஐடியா பிடித்த விதமாகட்டும்…
ஃபென்னி – வினோ இருவருக்கும் ஏற்படும் நெருக்கத்தை கண்ணியமாக உணர வைத்ததாகட்டும்… வினோவில் அப்பா அம்மா கதையைக் கடைசியில் கொண்டு வந்து இணைத்த விதமாகட்டும்… அபாரமான திரைக்கதை மற்றும் காட்சிகள்.
வினோவும் காதலனும் அடித்துக் கொள்ளும் காட்சியில் ஃபென்னிக்கு சசி கொடுத்திருக்கும் நகர்வுகள், உடல் மொழிகள் மேதமைத்தனமானது. மிகச் சிறப்பான இயக்கம்.
”உன் மேல வந்த காதலை மறக்கவும் முடியாம, உன்னை சமாதானப்படுத்தவும் முடியாம, ஒரு கால்ல செருப்பு போட்டுட்டு இன்னொரு பக்கம் வெறுங்காலோடு நடக்கிற மாதிரி தவிக்கிறேன்”
– என்பது உள்ளிட்ட உள்ளம் ஊடுருவும் உரையாடல்கள்.
இப்படி சிறப்பான வசனங்கள் கேட்டு நாளாச்சு.

சித்து குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
பின்னணி இசைக்கான ஒலிகள், பாடகர்களின் குரல்களை அவர் பயன்படுத்தும் விதம் இரண்டும் தனித்தன்மையோடு இருக்கிறது. அருமை.
வண்ணப்பயன்பாடு, ஒளி ஆளுமை, காட்சிகளின் உணர்வுகளுக்கு பலம் சேர்த்தல் என்று எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு.
அதோடு தியாகராஜனின் கலை இயக்கம், நந்தினியின் ஆடை வடிவமைப்பு, இயக்குநரின் இயக்க நேர்த்தி என யாவும் சேர்ந்து வண்ணமயமாக ஜொலிக்கிறது படம்.
படத்தில், இயக்குநர் வினோ கட் சொல்வது மாதிரி ஷார்ப்பாக இருக்கிறது சுபாரக்கின் படத்தொகுப்பு.
வினோ கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் ஹரீஷ் கல்யாண். கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
அட்டகாசமான அழகு, மிகச் சிறப்பான நடிப்பு என்று ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறார் சித்தி இத்னானி.
அந்த கன்னக்குழியில் ஒரு யானைப்படையே விழுந்து விடும் போலிருக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் மாதிரியான அழகு மட்டுமல்ல. நடிப்பும் கூட.
வி.ஜே. பார்வதி ஆங்காங்கே காமெடி வெடி வைக்கிறார். திருநர் கதாபாத்திரம் நோக்கம் இல்லாமல் இருந்தாலும் கவனிக்க வைக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலவீனம் புதுமை இல்லாத பழகிய கதைதான். இந்தப் படத்தின் முடிவு என்ன என்பது பாதிப்படத்திலேயே புரிந்து விடும். அதற்கு மாறாக எடுக்க இந்த கதையில் வழி இல்லை.
அதே போல அடுத்து என்ன வரும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.
காதலன் எப்போது கண் முழிப்பான்; கண் முழித்து என்ன சொல்வான் என்பது எல்லாம் மிக எளிதாக எல்லோருக்கும் புரிந்து விடும்.
இந்த No Other Go தன்மை படத்தின் முக்கிய பிரச்சனை.
புதிதாக எதையும் சொல்லவும் வழியில்லை; எதிர்பார்க்கவும் வகையிலை. கடைசிக் காட்சியை எல்லாம் எளிதாக யூகிக்க முடிகிறது.
நூறை பத்தால வகுத்தால் ஈவு பத்து; மீதி பூஜ்யம். அவ்ளோதான் என்பது போல படம் தியேட்டரிலேயே முடிந்து விடுகிறது. உணர்வு ரீதியாக கொஞ்ச நேரம், கொஞ்ச தூரம் கூட, கூடவே கொண்டு வர எதுவும் இல்லை.
இந்தக் குறைகள் இல்லாவிட்டால் இப்படி ஓடிடி-யில் வெளிவராமல் நான்கு வருடம் முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படம் நேரடியாக தியேட்டருகே வந்து பட்டையைக் கிளப்பி இருக்கலாம்.
நூறு கோடி வானவில் – வண்ணம் எல்லாம் அருமைதான். சைசுதான் துக்கடா.
— சு. செந்தில்குமரன்
