1980-களில் எனது ‘அதிகாரபூர்வ’ ஊடகப்பயணம் கோவையில் இருந்து ஆரம்பமானது.
அது என்ன ‘அதிகாரபூர்வ’?
அதற்கு முன்னால் நான் கல்லூரிக் காலத்தில் சக தோழர்களுடன் இணைந்து கையெழுத்து இதழ் நடத்தியுள்ளேன்.
ஆனாலும், நிறுவனம் ஒன்றில் என்னை இணைத்துக் கொண்டு ஊடகக் குதிரையில் ஏறி பயணித்தது 1982-ம் ஆண்டில்தான்.
கோவையில் மாலை தினசரி ஒன்றில் பிழைத் திருத்துபவனாக ஓர் இனிய உதயம் தொடங்கியது.
அங்கிருந்து சேலம், நெல்லை, மதுரை, புதுச்சேரி என சுழன்று விட்டு, சென்னையில் 1990-களில் கால் பதித்தேன்.
தினசரிகள், வார, மாத இதழ்கள், ரசிகர் மன்ற மாதாந்திரிகள், பல்வேறு தொலைக்காட்சிகள் என தலைநகரில் என் கால் தடம் பதியாத ஊடக அலுவலகங்களே இல்லை என உரக்கவே சொல்வேன்.
அரசியல், சினிமா, கலை, இலக்கியம், ஆன்மிகம் என பல்வேறு துறைகளின் ஆளுமைகளோடு அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பை இங்கே சொட்டு சொட்டாக கொட்டுகிறேன்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் முதல் படம் தொடர்பான செய்தியில் இருந்து இந்தத் தொடருக்கு பிள்ளையார் சுழி போடுவோம்.
“என் மகன் விஜய்யுடன் சண்டை போட்டு உங்க நிரூபரால் ஜெயிக்க முடியுமா?” என ஆக்ரோஷமாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டபோது ஆடிப்போனேன்.
எனது ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்று தெரிந்தும், சாலி கிராமத்தில் உள்ள இயக்குநர் வீட்டுக்கு வந்தது, வரலாற்றுப் பிழை என்பதை உணர்ந்தேன்
அன்று காலை ஒரு படத்தின் துவக்க விழா.
அங்கு வந்திருந்த அண்ணன் எஸ்.எஸ்.சந்திரனுக்கு கும்பிடு போட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானபோது, அவர், “தம்பி ஒரு நிமிஷம்” என்று அழைத்தார்.
“நம்ம சந்திரசேகர், அவரோட மகன் விஜய்யை வச்சு ‘நாளைய தீர்ப்பு’ன்னு ஒரு படம் எடுத்திருக்கார்.. உங்க பத்திரிகை விமர்சனத்தில் விஜய்யைப் பத்தி மட்டமா எழுதி இருக்கீங்க” என்றவரை இடைமறித்து, “அந்த விமர்சனம் நான் எழுதலைண்ணே..” என்றேன்
“இருக்கட்டும் தம்பி; எஸ்.ஏ.சி, நம்ம ஆளு.. தலைவர் (கலைஞர் கருணாநிதி) மேலே பிடிப்புள்ளவர். விமர்சனத்தைப் படிச்சிட்டு எஸ்.ஏ.சி. ரொம்ப வருத்தப்பட்டார். அவரைக் கொஞ்சம் போய் பாருங்க” என்றார்.
நான் அண்ணன் எஸ்.எஸ்.எஸ். மீது பிடிப்புள்ளவன். அவரும் என் மீது பாசம் உள்ளவர்.
அதனால் சந்திரசேகர் சாரை பார்க்க வந்து இந்த அனுபவம்.
“என் பையன் ஒப்பி பிச்சான் மாதிரி இருக்கானாம்.. நாலைந்து ரவுடிகளை அடிச்சு வீழ்த்துறது காமெடியா இருக்குன்னு” விமர்சனத்தில் எழுதி இருக்கீங்க’’ என்றவரிடம், “விமர்சனம் எழுதியது வேறு நிருபர்” என்றேன்.
“விஜய்யுடன் உங்க நிருபரை சண்டை போட்டு ஜெயிக்கச் சொல்லுங்க பார்ப்போம்” – என்று இயக்குநர் கோபம் தணியாமலேயே பேசிக்கொண்டிருந்தார்.
“எல்லாத்தையும் எஸ்.எஸ். அண்ணன் சொன்னார். அதனால தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றதும் தனது ரூமுக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது அவர் கொஞ்சம் கூலாகி இருந்தார்.
எஸ்.ஏ.சி.யை நான் சேலத்தில் வேலை பார்த்தபோது சந்தித்ததை நினைவு கூர்ந்தேன். இப்போது கொஞ்சம் நெருக்கமானார். அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அவரது பேட்டி எங்கள் சினிமா வார இதழில் 2 பக்கங்கள் பிரசுமாகி இருந்தது.
இதழுடன் மீண்டும் எஸ்.ஏ.சி. சாரை சந்தித்தேன்.
“நல்லா இருக்கு” என பாராட்டினார். காபி கொடுத்து உபசரித்தார்.
விஜய்க்கு அது ஆரம்பக்கட்டம் என்பதால், அவருக்கு பத்திரிகையாளர்களிடம் பழக சங்கோஜம் இருந்தது. அவருக்கான கதைகளைக் கூட எஸ்.ஏ.சி சார் தான் கேட்டு ஓ.கே. செய்வார் என கேள்விப்பட்டுள்ளேன்.
விஜய் ரசிகர் மன்ற இதழுக்காக விஜய்யை அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து உரையாடியது உண்டு.
அந்தக் கால கட்டத்தில் விஜய் பெயரில் அரை டஜனுக்கும் மேற்பட்ட மாத இதழ்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
பண்டிகை கால சிறப்பு ரயில்களில், முன்பதிவு சில நொடிகளில் தீர்ந்து போவது போல், விஜய் புகழ் பாடும் இதழ்களும் கடைக்கு வந்த சில மணித்துளிகளில் விற்றுத்தீர்ந்து போகும்.
அவற்றில் ஒரு இதழுக்காக சென்னை புறநகர் பகுதியில் இருந்த பங்களா ஒன்றில் நடந்த படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்தபோது (படம்–வசீகரா) அவரது 30 ஆண்டுகால காரோட்டி ராஜேந்திரனின் விருந்தோம்பலை மறக்க முடியாது.
எம்.ஜி.ஆர், விஜயகாந்துக்குப் பிறகு, உணவு நேரங்களில் தன்னை சந்திக்க வருவோரை சாப்பிடாமல் விஜய் அனுப்ப மாட்டார் என கேள்விப்பட்டுள்ளேன். அன்று நேரில் அனுபவித்தேன்.
விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏ, சபரிநாதனின் தந்தைதான் ராஜேந்திரன்.
விஜய் மீது ராஜேந்திரன் காட்டி வரும் நேசம், விசுவாசம், அவரது மகனைக் கோட்டைக்கு அனுப்பி, அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது.
முத்தாய்ப்பாக ஒரு செய்தியை இங்கே சொல்ல வேண்டும். விஜய்யின் முதல் படத்தை, விமர்சித்து எழுதிய அந்த நண்பர், வேறு ஒரு வார இதழில் கொஞ்ச காலம் பணியாற்றினார். இப்போது சினிமா இயக்குநர் என்பது போனஸ் தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.
