Take a fresh look at your lifestyle.

என் கனவுகளுக்கு அஸ்திவாரம் போட்ட மனிதர்கள்!

இயக்குநர், நடிகர் பாக்யராஜின் நெகிழ்ச்சியான அனுபவம்

அப்போதுதான் வெளிப்புறப் படப்பிடிப்புக்காகக் கனடா போய்விட்டு வந்திருந்தார் பாக்யராஜ்.

அந்த அசதியான நிலையிலும் அவர் சொன்ன பிளாஷ்பேக் சம்பவங்கள்:

“வெள்ளாங்கோவிலின் கிராமிய மணமும், அந்த மனிதர்களோட எதார்த்தமும் எனக்குப் பிடிச்ச விஷயம்.

கோயமுத்தூர்லே இருக்கிறப்போ பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட மனப்போக்கைப் பார்க்க, படிக்க முடிந்தது.

கோயமுத்தூர் மணி ஸ்கூல்லே 6-வது படிக்கிறப்போ – சீனியர் மாணவர்கள் போட்ட நாடகத்தை எல்லோரும் ஒரு வாரத்துக்குப் பாராட்டினாங்க. அது எனக்கு ஒரு உந்துதலா அமைஞ்சது.

எட்டாவது படிக்கிறப்போ நானும் நாடகங்கள்லே பங்கெடுத்துக்கிட்டேன். மற்ற ஸ்கூல் நாடகப் போட்டிகளிலும் கலந்துகிட்டேன்.

சோமசுந்தரம், சண்முகமணி, நாராயணசாமி, சிதம்பரம், சீதாபதின்னு பல வாத்தியாருங்க என்னை உற்சாகப்படுத்தினாங்க.

ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் நானே எழுதி டைரக்ட் பண்ணின நாடகம் ‘எக்ஸின் விஜயம்’. அதிலே நான் நடிக்கலை. அதிலே ஹீரோவா நடிச்சவர், இப்போ சினிமாவில் வில்லனாக நடிக்கிற ஆர்.பி.விஸ்வம்.

அப்புறம் அப்போ டைரக்டர் சுந்தர்ராஜனுக்காக ‘ஒன் வே’ன்னு ஒரு நாடகம் எழுதிக் கொடுத்தேன்.

கோவையில் இருந்த கே.வி.கே.சாமி படிப்பகம், ஸ்போர்ட்ஸ் கிளப், ஜீவா மன்றத்திலே உள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகத்திலே சென்னைக்கு வந்துட்டேன்.

ஆரம்பத்திலே, ‘ஒரு கை ஓசை’, ‘தூறல் நின்னு போச்சு’ கதைகளை யோசிக்கும்போதே எனக்குச் சின்ன வயசிலேயிருந்து பழக்கமான வெள்ளாங்கோவிலே மனசுலே படமா வந்துகிட்டிருந்தது.

அதனாலேதான் அங்கே படப்பிடிப்பு நடத்தினேனே ஒழிய, அதில் எந்த ‘சென்டிமெண்ட்’டும் இல்லை.

ஊரிலேயிருந்து கிளம்பி வர்றபோது நினைச்சதைச் சாதிச்சிட்டீங்களான்னு கேட்கறீங்க. ஒரு நம்பிக்கையோட சென்னைக்கு வந்தேன். சினிமாவுக்குள்ளேயும் வந்துட்டேன்.

சினிமாவில் சாதிக்கிறதைப் பத்தித் தொடர்ந்து யோசிச்சுக்கிட்டிருக்கேன்” என்று சிரிக்கிறார் பாக்யராஜ்.

சந்திப்பு – மணா

நன்றி: குமுதம் – 16.08.1997