நமது நினைவில் நிறைந்து வாழும் பாடலாசிரியர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆலங்குடி சோமு.
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு, இரவும் வரும் பகலும் வரும், ஆண்டவன் உலகத்தின் முதலாளி, இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான் உள்ளிட்ட தத்துவப் பாடல்களைத் தந்தவர் கவிஞர் சோமு.
கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள் கண்களடா… பொன்மகள் வந்தாள்… மலருக்குத் தென்றல் பகையானால்… ஆடலுடன் பாடலைக்கேட்டு… தாயில்லாமல் நானில்லை… என காலத்தால் என்றும் அழியாத இனிய பாடல்களை தந்திருக்கிறார் ஆலங்குடி சோமு.
சில நேரங்களில் குடும்பச் சூழ்நிலைகள் கூட கவிதை எழுதத் தூண்டிவிடும் வகையில் அமைந்து விடுகிறது. ஆலங்குடி சோமுவுக்கும் அப்படித்தான். முதல் மனைவி மரணமடைந்த நிலையில், தன்னைப்பற்றியும் தன் பிள்ளைகளைப் பற்றியும் பெண் தெய்வம் என்ற திரைப்படத்தில் தாயொரு பக்கம் என்ற பாடலை எழுதியிருப்பார்.
எம்ஜிஆர் நடித்த ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலைக்கேட்டு என்ற பாடல் எழுதப்பட்டதும், பஞ்சாப்பின் பாங்ரா நடனத்தில் பாடலை படம்பிடிக்க விரும்பினார்கள். ஆனால், எம்ஜிஆரோ, இந்தப் பாடலுக்கான ஆட்டத்தை முறைப்படி, கற்றுத்தேர்ந்து ஆடவேண்டும் என நினைத்தார். இதற்காக அவர் இத்தகைய ஆட்டங்களில், மிகப்பிரபலமாக இருந்த நடிகை விஜயலட்சுமியை அழைத்துப் பயிற்சி பெற்றார்.
அதே படத்தில், ஆலங்குடி சோமு எழுதிய மற்றொரு பாடல் துள்ளுவதோ இளமை என்ற பாடல். இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டுக்கு ஏற்றபடி, ஆலங்குடி சோமு எழுதிய பாடலை அப்போதே சுவிட்சர்லாந்தின் பிரபல காளை விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கப்பட்டது.
அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் ஹிட் பாடலான தாயில்லாமல் நானில்லை பாடலை எழுதியதும் ஆலங்குடி சோமுதான். சிவாஜி நடித்த சொர்க்கம் திரைப்படத்தின் பொன்மகள் வந்தாள் பாடலும் ஆலங்குடி சோமுவின் மற்றொரு ஹிட் பாடலாகும்.

கருப்பு வெள்ளை படக்காலத்தில் தொடங்கிய ஆலங்குடியின் திரையுலகப் பயணம் வண்ணப்படங்கள் வரைத் தொடங்கிய பின்னரும் நீடித்தது.
அந்த வகையில் சப்பாணி, பரட்டை, மயில் என கிராமத்துக் கதாபாத்திரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய 16 வயதினிலே திரைப்படத்தில் மஞ்சக்குளிச்சி பாடலை எழுதியது கவிஞர் ஆலங்குடி சோமுதான்..
எல்லையில்லா இனிமை கொண்ட பல பாடல்களை எழுதி வாழ்வாங்கு வாழ்ந்த கவிஞர் ஆலங்குடி சோமுவின் புகழ் என்றும் போற்றுதலுக்குரியது.
இன்றளவும் மக்கள் மனங்களில் கொலு வீற்றிருக்கும் கவிஞர் ஆலங்குடி சோமுவின் நினைவுகள் என்றென்றும் மறையாது.
– நன்றி நியூஸ் 7 இதழ்