Take a fresh look at your lifestyle.

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்!

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்கள் புகைப்பட ஆல்பங்களை எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்களைத் தேடிய காலம் மலையேறிவிட்டது.

இப்போது, இருக்குமிடத்தில் இருந்தவாறே ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ இட்டால் போதும்; சரியானவர்கள் அடையாளம் காணும்போது வாய்ப்பு தானாகத் தேடி வரும்.

அப்படியிருக்க, யூடியூப் வீடியோக்களின் வழியே லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்கள் நாயகனாகவும் நாயகியாகவும் மாறினால் என்ன வரவேற்பு கிடைக்கும்? ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இதற்கொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இப்படத்தில் ‘ஜம்ப்கட்ஸ்’ ஹரிபாஸ்கர் நாயகனாகவும், ‘பிக்பாஸ்’ லாஸ்லியா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிற இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

‘டாக்ஸிவ் லவ்’ என்றால்..!

கல்லூரியில் நான்காண்டுகள் படிக்கும்போது, ஒருநாள் விடாமல் இசையைத் (லாஸ்லியா) துரத்தித் துரத்திக் காதலித்தவர் ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்).

ஆனால், இசை அவரை ஏறெடுத்துப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை.

கல்லூரிப்படிப்பின் இறுதிநாளன்று, பலர் முன்னிலையில் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார் ஹானஸ்ட் ராஜ். ஆனால், இசை அதனை நிராகரிக்கிறார்.

அப்போது, ‘இன்னும் சில ஆண்டுகளில் நன்றாகச் சம்பாதித்து, வாழ்வில் நல்ல நிலையை அடைந்து, உன்னைவிட சிறந்த பெண்ணைத் திருமணம் செய்கிறேன்.

அது நடக்காவிட்டால், வாழ்நாள் முழுக்க உனக்கு வேலைக்காரனாக இருக்கிறேன்’ என்று இசையிடம் சவால் விடுகிறார் ஹானஸ்ட் ராஜ்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. எதிர்வீட்டில் இருக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறார் என்பதற்காகவே அவர் மீது காதல் கொள்கிறார் ஹானஸ்ட்.

ஆனால், அவருக்கு வேறொருவருடன் கல்யாணம் என்றதும் மனம் உடைந்து போகிறார். தற்கொலை செய்யும் அளவுக்குச் செல்கிறார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் நேரடியாகவே அவரிடம் தனது காதலைச் சொல்கிறார். அப்பெண்ணோ, ‘வெளியில பார்க்கிற மாதிரிதான் ஒரு பெண் பெர்சனலாவும் இருப்பான்னு நினைச்சுக்காதே. இந்த மாப்பிள்ளைய காதலிச்சுதான் நான் கல்யாணம் பண்றேன்’ என்கிறார்.

அதன்பிறகும், வேலைக்குச் செல்லாமல் வீடே கதி என்று கிடக்கிறார் ஹானஸ்ட் ராஜ். அதனைக் கண்டு தந்தை (இளவரசு) கரித்துக் கொட்டினாலும், தாய் (உமா ராமச்சந்திரன்) அவரைத் தாங்குகிறார்.

இந்த நிலையில், திடீரென்று ஹானஸ்ட் ராஜுக்கு பணத்தேவை ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனைச் சமாளிக்க, ஒரு வில்லாவில் வீட்டு வேலை செய்யச் செல்கிறார்.

அவ்வாறு செல்லும் வீட்டின் உரிமையாளராக இசை இருக்கிறார். அப்புறமென்ன, ஹானஸ்ட் ராஜ் மீது தனக்கிருந்த வெறுப்பு அனைத்தையும் கொட்டத் தயாராகிறார் இசை.

சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு, மெல்ல ஹானஸ்ட் ராஜ் மீது இசைக்கு நல்லெண்ணம் பிறக்கிறது. அதே நேரத்தில், அலுவலகத்தில் தன்னோடு பணியாற்றும் ஹரிஷ் (ரேயான்) மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

அதையடுத்து, ‘நீதான் என்னோட பெஸ்டி’ என்று ஹானஸ்ட் ராஜிடம் சொல்லிவிட்டு ஹரிஷை காதலிக்கத் தொடங்குகிறார் இசை. ஆனால், ஹானஸ்ட் ராஜோ ‘இசை தன்னைக் காதலிக்கிறாள்’ என்று நினைத்துக் கொள்கிறார்.

அதன்பிறகு நடந்தது என்ன என்பதை ‘காமெடி கலாட்டா’வாக சொல்கிறது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் மீதி.

ஒரு பெண்ணின் பின்னே திரிந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்வது காதலா அல்லது அப்பெண் மனம் கனிந்து ‘நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னபிறகு இருவரும் சேர்ந்து கொள்வது காதலா?

இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது இப்படம். கூடவே, ‘டாக்ஸில் லவ் என்றால்..’ எனும் கேள்விக்கான பதிலை ‘வாழைப்பழத்தில் ஊசியைச் செருகுவது’ போன்று கூறிய வகையில் ஈர்க்கிறது. அந்த வகையில், காதலிக்கக் கற்றுக் கொடுப்பதாகவும் உள்ளது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’.

நிறையவே சிரிக்கலாம்!

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ கதையிலோ, காட்சிகளின் வார்ப்பிலோ பெரிதாகப் புதுமைகள் இல்லை. அதனால், இதில் ‘க்ளிஷே’க்கள் அதிகம்.

ஆனாலும், நாம் திரையை நோக்கி பற்களை நறநறக்கிற அளவுக்குக் காட்சிகளை அமைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறது படக்குழு.

போலவே, சில நொடிகளுக்கு ஒருமுறை சிரிப்பதற்கேற்ப வசனங்களை, சூழல் நகைச்சுவையைக் கொண்டிருக்கிறது இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் அமைத்துள்ள திரைக்கதை. அதனால், போதும் போதும் என்கிற அளவுக்குச் சிரிக்கலாம்.

‘என்னடா இப்படியொரு பைத்தியக்காரத்தனத்தை பண்ணிட்டான்’ என்று நாயக பாத்திரத்தைப் பார்த்து பதைபதைக்கலாம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அதேநேரத்தில், ‘என்னய்யா பூமர்தனமா இருக்கு’ என்று மில்லினியம் குழந்தைகள் கிண்டலடிக்கும் விதமாகவும் இதில் காட்சிகள் உண்டு.

கூடவே, ‘லிவ் இன், சிச்சுவேஷன்ஷிப்’ பற்றிய விளக்கங்களும் உண்டு.

‘அந்த விஷயங்கள்ல எதை உங்களால பாலோ பண்ண முடியுமோ, அதை செஞ்சு மகிழ்ச்சியா வாழுங்க. அதுதான் முக்கியம்’ என்கிறது இப்படம்.

அதனைத் தெளிவாக எடுத்துரைக்கிற காரணத்தால், இத்திரைக்கதையில் குவிந்து கிடக்கிற லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிடலாம்.

சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்தாலும் ரசிக்கும்படியாகத்தான் இருந்திருக்கும்.

‘ரொமான்ஸ் காமெடி’ வகைமையில் அமைந்த தமிழ் படம் எப்படி இருக்கும்? ‘இதற்கு முன் வந்த படங்களைப் போல் இருந்தால் போதுமா’ என்ற கேள்வியோடு இதில் பணியாற்றியிருக்கிறது தொழில்நுட்பக் குழு.

ஒளிப்பதிவாளர் குலோத்துங்கவர்மன், கலை இயக்குநர் தாமு, படத்தொகுப்பாளர் ராமசுப்பு உள்ளிட்ட கலைஞர்கள் அந்நோக்கத்தோடு இதில் பணியாற்றியிருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் இளசுகள் கொண்டாடுகிற ஒரு ஆல்பத்தை தந்திருக்கிறார். நீ நான் எதிரெதிரிலோ, பாய் பெஸ்டி, அன்பே அன்பே பாடல்கள் மெல்ல மனதைத் தொடுகின்றன.

வந்துடு வந்துடு வந்துவான், பயமறியா பாய்ஸ் ஆகியன தியேட்டரில் இருக்கையில் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தரும் ரகம். ஆனாலும், அனைத்து பாடல்களுமே ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருவதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

கதையோட்டத்தோடு கலந்து நிற்க முயற்சித்திருக்கிறது பின்னணி இசை.

நடிப்பைப் பொறுத்தவரை, இப்படத்தில் யதார்த்தமான மனிதர்களாகத் திரையில் தெரிபவர்கள் ஒரு சிலரே.

இளவரசு, ஆர்ஜே ஷரா, ‘குட்நைட்’ உமா ராமச்சந்திரன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘விக்கல்ஸ்’ ஹரி முனியப்பன் ஆகியோர் அவ்வரிசையில் இருக்கின்றனர். அவர்களது இருப்பு ரசிக்கும்படியாக உள்ளது.

ஹரி பாஸ்கரின் நடிப்பு சில இடங்களில் எல்லையைத் தாண்டி நின்றாலும், அவருக்கான ரசிகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறார். அதற்கேற்ப காமெடியான கதை என்பதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாயகி லாஸ்லியா ஒரு பார்பி பொம்மை போன்று திரையில் தோன்றியிருக்கிறார்.

‘படையப்பா நீலாம்பரி’ போன்று மாறுகிற இடங்களில் கொஞ்சம் ‘ஸ்கோர்’ செய்கிறார். ஆனால், இயக்குநர் அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டாமல் தவிர்த்திருக்கிறார்.

இன்னொரு நாயகன் கம் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் ரேயான். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில் தனுஷோடு நடித்த அபிநய், சுதீப்பை நினைவூட்டுகிறார்.

அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவர் வேறுமாதிரியான பாத்திரங்களில் தோன்றினால் நல்லது.

புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’

என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது இப்படம்.

கூடவே, காதல் என்பது பரஸ்பர அன்பு என்றுணர்த்துகிறது.

இதனை இன்னும் நேர்த்தியாகத் திரையில் சொல்லியிருக்க முடியும்.

ஆனாலும், சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ‘ரொமான்ஸ் காமெடி’ வகைமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் ரவிச்சந்திரன்.

உண்மையைச் சொன்னால், படம் முழுக்க நிறைந்திருக்கும் ‘டைமிங் காமெடி’ தான், ‘க்ளிஷேக்களில் ஊறிய கதையில் மூழ்கிவிடுவோமோ’ என்ற எண்ணத்தை அண்டவிடாமல் செய்கிறது.

‘அப்படிச் சிரிக்க வைத்தால் போதுமே’ என்று நினைப்பவர்கள் மட்டும் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ பார்க்க தியேட்டர்களை தேடலாம்.

அவ்வாறில்லாதவர்கள் இப்படத்தைக் கண்டால், இதிலிருக்கும் குற்றம் குறைகளில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்!

-உதயசங்கரன் பாடகலிங்கம்